வியாழன், நவம்பர் 03, 2011

இந்த' வகை அன்பளிப்பும் வட்டியே ! ! !

இந்த' வகை அன்பளிப்பும் வட்டியே ! ! !
மனிதனுக்கு கிடைத்துள்ள பட்டமும் பதவியும் அல்லாஹ் அவனுக்கு கொடுத்துள்ள அருட்கொடைகளில் ஒன்றாகும். எனவே அவைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். தனது பதவியின் மூலம் முஸ்லிம்களுக்கு பயனளிப்பது இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் முறைகளில் ஒன்றாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
உங்களில் தமது சகோதரருக்கு பயனளிக்க சக்தி பெற்றவர் அவ்வாறு செய்யட்டும்! (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

ஹலாலான காரியங்களில், பிறருடைய உடமைகளுக்கு தீங்கிழைக்காமல் தூய்மையான எண்ணத்துடன் தனது சகோதரருக்கு உதவி செய்து, அவருடைய கஷ்டத்தை போக்குபவர் அல்லாஹ்விடத்தில் கூலி கொடுக்கப்படுவார்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: பரிந்துரை செய்யுங்கள்! அதற்காக -அல்லாஹ்விடம்- கூலி கொடுக்கப்படுவீர்கள்! (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: புகாரீ)

ஆனால் பரிந்துரைக்கவோ, தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவோ பகரமாக எதனையும் பெற்றுக் கொள்ளக் கூடாது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் மற்றொருவருக்கு பரிந்துரை செய்து, அதற்காக அன்பளிப்பு கொடுக்கப்பட்டு, அதனை அவர் ஏற்றுக் கொண்டுவிட்டால் நிச்சயமாக அவர் வட்டியின் மிகப் பெரிய வாயிலுக்கு வந்துவிட்டார். (அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) நூல்: அஹமத்)

வேலை வேண்டுமா? வேலையை மாற்றவேண்டுமா? மருத்துவ விடுமுறை வேண்டுமா? பரிந்துரை செய்ய, தொடர்பை ஏற்படுத்தித் தர இவ்வளவு தந்துவிடு! என்று பெருந்தொகையை நிபந்தனையாக கூறும் பலர் உள்ளனர். இவ்வாறு லஞ்சம் பெறுவதும். பகர நிபந்தனை இல்லாமல் அன்பளிப்பாக அளிக்கப்பட்டு அதனைப் பெறுவதும் மேற்கண்ட நபிமொழியின் அடிப்படையில் ஹராம் ஆகும்.
நல்லமனிதர்களுக்கு மறுமை நாளில் அல்லாஹ்விடம் கிடைக்கும் கூலியே போதுமானதாகும்.

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் வேலை தேடிக் கொடுத்தோ, அல்லது குறிப்பிட்ட வேலையை மார்க்கம் அனுமதித்த முறையில் முடித்துக் கொடுத்தோ அதற்காக கூலி பெறுவதில் தவறில்லை. இதற்கும் சிபாரிசு செய்து பகரம் பெறுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. எனவே சிபாரிசுக்கு பகரம் பெறுவது ஹராமாகும்.

தவ்ஹீத் முஸ்லிம் posted by;இறைநேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...