சனி, நவம்பர் 12, 2011

விவாகரதில் பெண் உரிமை!

ஆண்களின் வக்கிர புத்தியிலும், கொடுமையிலும் சிக்கிக் கொண்ட பெண் ஆணிடமிருந்து விடுதலை பெற முடியுமா? இஸ்லாம் அந்த உரிமையைப் பெண்கள் கையில் கொடுத்திருக்கிறதா? அந்த வழியை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் காண்போம்.

இந்தப் பிரச்சனையில் பெண்ணுரிமையை நாம் ஐயமற உணர்வதற்குத் தேவையான சில முக்கிய ஆதாரங்களை உணர்வது அவசியமாகும்.

ஆண்களிலிருந்து எல்லா விசயங்களிலும் பெண்கள் வேறுபட்டிருந்தால் அவர்கள் தானாக விவாகரத்து செய்யும் உரிமையும் பறிக்கப்பட்டிருக்கும். இறைவன் இந்த கோணத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. எவ்வளவோ விசயங்களில் ஆணையும், பெண்ணையும் ஒரே அளவுகோளை வைத்து இறைவன் பார்க்கிறான். ஆணுக்கு எந்த உரிமைகளைக் கொடுக்கிறானோ அதே உரிமைகளை பெண்ணுக்கும் இறைவன் கொடுக்கிறான். ஒருசில விசயங்களில் ஆண்களை உயர்த்தியும், ஒருசில விசயங்களில் பெண்களை உயர்த்தியும் இறைவன் வைத்துள்ளான் என்பதை ஆதாரங்களை எடுத்துக் காட்டாமல் நடைமுறை வாழ்க்கையிலேயே நாம் உணரலாம்.

பொது வாழ்க்கையிலும், உடல் அமைப்பிலும் பெண்களோடு ஆண்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில விசயங்களில் ஆண்களே உயர்ந்து நிற்கிறார்கள். இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் உள்ளே நுழைந்து வேலை செய்கிறார்கள் என்றாலும், அதே துறைகளில் ஆண்களின் நிர்வகிப்பு அதிகமா?…. பெண்களின் நிர்வகிப்பு அதிகமா?…. என்று அலசும்போது ஆண்களின் நிர்வகிப்பே முதலிடம் வகிக்கும். அதேபோன்று, பல நூறு பெண்கள் சேர்ந்து அவர்களுக்குள் செக்ஸ் பரிமாற்றம் செய்துகொண்டாலும் குழந்தையை உறுவாக்க முடியுமா?…. என்றால், ஒரு ஆணில்லாமல் ஒருகாலமும் முடியாது என்பதையும் எவரும் மறுக்க மாட்டார்கள்.

ஆண்கள் பெண்களைவிட ஒருபடி மேல்!! என்ற அல்குர்ஆன் 2:228 வசனத்திற்கு மேற்கூறியவை போதிய சான்றாகும். ஆண்களுக்கு மட்டும் இந்த சலுகையை உயர்வைக் கொடுத்துவிட்டு பெண்களை அப்படியே இஸ்லாம் விட்டுவிடவில்லை. ‘தாய்மை’ என்ற உயர்ந்த அந்தஸ்திற்கு அவளைச் சொந்தக்காரியாக்கி அவளது அந்தஸ்தை உயர்த்துகிறது. தந்தையைவிட தாய்க்கே முதலிடம் கொடுக்கச் சொல்லி அறிவுரை கூறுகிறது.

இறை தூதரே!… நான் அதிகம் கண்ணியப்படுத்துவதற்கு மனிதர்களில் தகுதியானவர் யார்? என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது ‘உனது தாய்’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அடுத்து யார் எனக் கேட்டபோது அதற்கும் ‘உனது தாய்’ என பதில் கூறினார்கள். அடுத்து யார் எனக் கேட்டபோது அதற்கும் ‘உனது தாய்’ என்றார்கள். நான்காம் முறையாகக் கேட்டபோது ‘உன் தந்தை’ என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

பெண்களில் தாய்மையடைந்த பெண்களின் சிறப்பை இஸ்லாம் மிகவும் விரும்பி கண்ணியம் அளிக்கின்றது. இப்படி ஒருசில பிரச்சனையில் வேறுபட்டு ஆணும் – பெண்ணும் சிறப்பு பெற்றாலும், மற்ற சில பொதுப்படையான பிரச்சனைகளில் இருவரும் சம அளவு பங்கு வகிக்கிறார்கள். இந்த விளக்கங்கள் ஏனென்றால், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற போலி வாதத்தை அடித்து உடைக்கத்தான்.

சமமான நிலையில் ஆணும் பெண்ணும்

உங்கள் மனைவியை நீங்கள் ஆறுதல் பெறுவதற்காக உங்களிலிருந்தே படைத்து உங்களுக்கு மத்தியில் பிணைப்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பது இறை அத்தாட்சியாகும். (அல்குர்ஆன் – 30:31)

விசுவாசம் கொண்ட ஆண்களையும் விசுவாசம் கொண்ட பெண்களையும் யார் இம்சிக்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் பயங்கர பாவத்தைச் சுமக்கிறார். (அல்குர்ஆன் – 33:58)

உங்களில் ஆணோ பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயம் அவன் வீணாக்க மாட்டான். நீங்கள் ஒருவர் மற்றவரில் உள்ளவர்தான். (அல்குர்ஆன் – 3:195)

முஃமினான ஆணும், முஃமினான பெண்ணும் ஒருவர் மற்றொருவருக்கு உற்ற துணைவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் – 9:71)

(பெண்களாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் – 2:187)

கணவர்களுக்கு பெண்களிடம் இருக்கும் உரிமை போன்று கணவர்கள் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. (அல்குர்ஆன் – 2:228)

பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச்சென்றதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிமையுண்டு. அவை குறைவாக இருப்பினும் சரியே. (அல்குர்ஆன் – 4:7)

வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான எல்லாவற்றிலும் உரிமை பெறும் பெண், பிடிக்காத கணவனிடமிருந்து விடுதலை பெறும் உரிமையையும் பெற்றுள்ளாள். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற போலி சித்தாந்தத்தைப் போதித்து, கல் போன்ற கடின சித்தமும், கடின போக்கும் கொண்ட கணவனிடம் மறுபேச்சு பேசக் கூடாது. குடி, கூத்தியா வைத்துக் கொண்டாலும் தட்டிக் கேட்கக் கூடாது. அடி உதைகளை புருஷ தரிசனங்களாக மதித்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோன்று புல்லானாலும் புருஷன் என்பதை ஏற்று அவனிடமே ஒன்றுமே (அதாவது விஷயமே) இல்லாவிட்டாலும்கூட கழுத்தில் மஞ்சள் கயிறைக் கட்டிக் கொண்டு காலம் முழுவதும் தனது ஆசாபாசங்களை அடக்கிக் கொண்டு வாழ பேண்டும் என்று பெண் சிதைவுகளை போதிக்கவில்லை இஸ்லாம்.

கணவனைப் பிடிக்கவில்லையா யாரை அணுகி சொல்ல வேண்டுமோ அவர்களிடம் சொல்லிவிட்டு பெண் தன் வழியைப் பார்த்துக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம். ஒரு ஆண் தன் மனைவியை விவாகரத்துச் செய்யும்போது அவன் கடைப்பிடிக்கும் வரம்புகளைவிட ஒரு பெண் தன் கணவனிடமிருந்து பிரியும்போது குறைந்த வரம்புகளையே இஸ்லாம் விதிக்கிறது. இந்த விதத்திலும் பெண்ணுரிமையை அழகாக இஸ்லாம் பேணுகிறது. இனி பெண் விவகாரத்திற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.

பெண் விவாகரத்தின்போது ஒரு ஆணைப் போன்று நான் உன்னைத் !தலாக்! (விவாகரத்து) விட்டு விடுகிறேன் என்று கூற முடியாது. மாறாக தமது தலாக்கை ஊர் ஜமாஅத் தலைவர் முன்னிலையிலேயே வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அப்படித்தான் நடந்துள்ளது.

ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவருக்கு அப்துல்லாஹ்வின் மகள் மனைவியாக இருந்தார். ஸாபித் (ரலி) ஒரு தோட்டத்தை அப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து திருமணம் செய்திருந்தார். அந்தப் பெண்ணுக்கு (ஏதோ காரணத்தினால்) ஸாபித்தை பிடிக்காமல் போய்விட்டது. உடனே அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து விவாகரத்து பற்றி முறையிட்டாள். (அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணைப் பார்த்து) உனக்கு அவர் மஹராகக் கொடுத்த தோட்டத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறாயா? என்று கேட்டார்கள். அப்பெண் சரி என்று ஒப்புக்கொண்டாள் அதைவிட அதிகமாகவும் கொடுக்கிறேன் என்றாள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வேண்டாம், தோட்டம் மட்டும் போதும் என்று கூறி ஸாபித்திற்கு சார்பாக தாமே அந்த தோட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள் அவர்களின் தீர்ப்பு ஸாபித்திற்கு தெரிந்தபோது இறை தூதரின் தீர்ப்பை நான் ஏற்கிறேன் என்றார்கள். (ராவி: அபூஜுபைர் (ரலி), நூல்: தாரகுத்னி)

இந்த ஹதீஸிலிருந்து பல்வேறு விசயங்கள் தெரியவருகின்றன.

1. கணவன் பிடிக்காவிட்டால் (சரியான காரணங்கள் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை. இதற்குப் பின்னர் ஹதீஸ் வருகிறது) அதை ஊர் தலைவரிடம் சொல்ல வேண்டும்.
2. திருமணத்தின்போது மஹராகக் கொடுத்த பொருளை அது பொருளாகவோ, தோட்டமாகவோ எப்படியும் இருக்கலாம். அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். கணவன் சார்பாக ஊர் ஜமாஅத் தலைவரும் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. கொடுக்கப்பட்ட மஹரைவிட அதிகமாகப் பெறுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
4. ஊர் ஜமாஅத்தின் தலைவர் தீர்ப்புக்கு அக்கணவன் கட்டுப்பட வேண்டும்.

இதுமட்டுமின்றி பெண் விவாகரத்து பிரச்சனையில் இன்னும் சில சட்டங்களும், சலுகைகளும் பெண்களுக்கு உண்டு. அந்த சட்ட சலுகைகளைக் கூறும் ஹதீஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸாபின் பின் கைஸ் (ரலி)யின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இறை தூதரே! என் கணவரின் நன்நடத்தையிலோ, நற்குணத்திலோ நான் எந்தக் குறையும் காணவில்லை. இருப்பினும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே குப்ரை நான் வெறுக்கிறேன். (அதனால் அவரிடமிருந்து விவாக ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள ஆசை) என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஸாபித்தின் தோட்டத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்றார்கள். அப்பெண் சரி என்றதும் நபி (ஸல்) அவர்கள் ஸாபித்தை நோக்கி உன் தோட்டத்தைப் பெற்றுக்கொண்டு (அவளோடு தொடர்பு வைத்துக்கொள்ளாமல்) ஒரேயடியாக அவளை விடுவித்துவிடு என்றார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, நஸயி)

இந்த ஹதீஸ் சொல்லக்கூடிய விசயங்கள்:-

1. தலைவரை அணுக வேண்டும்.

2. தாம் பிரிவதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் மேற்கண்ட ஹதீஸில் அப்பெண் பிரிவதற்காகக் கணவனின் எந்தக் குறைபாட்டையும் சொல்லவில்லை என்பதிலிருந்து அதை அறியலாம்.

3. ஊர் தலைவரோ, கணவரோ காரணங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை.

4. மஹராகக் கொடுத்த தொகையை கணவனும் வாங்கிக் கொள்ளலாம்.

5. மனைவியைத் தன்னோடு வைக்காமல் அவளை அவள் வழியிலேயே விட்டுவிட வேண்டும்.

இதே பிரச்சனையில் முஅவ்வித் (ரலி) அறிவித்து நஸயீ என்ற ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ள செய்தியில்,
! அவளை அவள் வழியில் விட்டுவிடு ! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், அவளை நோக்கி, !நீ உன் குடும்பத்தாருடன் சேர்ந்து கொள், ஒரு மாதவிடாய் வரை காத்திரு! என்றார்கள். இந்த செய்தியிலிருந்து பெண் விவாகரத்து பெற்றபின் கணவனோடு எந்த தொடர்பும் இல்லை என்பதையும் விளங்கலாம். குலஃ என்ற பெயருடன் இஸ்லாம் பெண்களுக்கு வகுத்திருக்கும் விவாகரத்தின் சட்டம் இவையாகும்.

ஆண் தன் மனைவியை விவாகரத்து செய்யும்போது விவாகரத்திற்கு முன்னால் செய்யக்கூடிய அறிவுரைகள், நிபந்தனைகள், தண்டனைகள் என்ற எந்த அவகாசமும் பெண் விவகாரத்தில் இஸ்லாம் ஏற்படுத்தவில்லை.

அவளுக்குப் பிடிக்கவில்லையா.. கணவனிடமிருந்த பெற்ற மஹரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு தம் குடும்பத்தாரோடு போய்ச் சேர்ந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான். இப்பிரச்சனையில் விவாகரத்து இவள் புறத்திலிருந்து வருவதால் அவளைத் திருப்பி அழைக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. ஒரு மாதவிடாய் காலம் இத்தா (கருவிற்கான தவனை) இருந்துவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்வது அவளது விருப்பம்.

பெண் விவகாரத்தில் இஸ்லாம் இவ்வளவு பெரிய சலுகையைச் செய்து கொடுத்தும், இதன்மூலம் எத்துனைபேர் பலன் பெறுகிறார்கள் என்பது கேள்விக் குறியே!

இந்தச் சட்டங்கள் தெரியாததால் எவ்வளவோ அபலைப் பெண்கள் தம் கணவர்களின் வக்கிர புத்திக்கும், கொடுஞ்செயலுக்கும் ஆளாகி வாய்மூடி, வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருப்பதை பரவலாகக் காண்கிறோம்.

சில இடங்களில் பெண்களுக்கும் விவாகரத்து கொடுக்காமல், அவர்களோடு வாழவும் செய்யாமல் ரெண்டும்கெட்டான் நிலையில் வைத்திருப்பதையும் காண்கிறோம். இந்நிலைகள் எல்லாம் மாற வேண்டும்.

பெண்ணுடைய இடத்தில் நின்று சிந்தித்து பார்க்க ஊர் ஜமாஅத்தார்கள் கடமைப்பட்டுள்ளார்கள். திருமணம் நடந்தது என்ற ஒரே ஒரு சடங்கிற்காக காலம் முழுவதும் தம் உரிமைகளை, உடல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழும் வாழ்க்கை இனியும் தேவையா? இயற்கையிலேயே பலவீனமான பெண், ஆணின் அடக்கு முறையிலேயே அடங்கிக் கிடப்பதை இஸ்லாம் அனுமதிக்காத போது ஊர் ஜமாஅத்துக்கள் மட்டும் எப்படி அனுமதித்துக் கொண்டிருக்கின்றன. ஊர் ஜமாஅத்தார்கள் சிந்திக்க வேண்டாமா?

இஸ்லாம் பெண்களுக்கு எல்லா வகையிலும் சரியான நியாயமான உரிமையைக் கொடுத்திருக்கும்போது, அந்த உரிமைகளையும், நியாயங்களையும் ஊர் ஜமாஅத்தார்களாகிய நீங்கள் கண்டுகொள்ளாமல் அல்லது கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் ஊர் பெரிய மனிதர்கள் என்ற போர்வையிலிருக்கும் உங்களைப் போன்றோரின் அலட்சியப் போக்கு இஸ்லாத்திற்கு எவ்வளவு பெரிய இழிவை ஏற்படுத்தியிருக்கின்றன!

இனியாவது குர்ஆன் – ஹதீஸ் பக்கம் சிந்தனையைச் செலுத்தி இஸ்லாத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுக்க முன்வாருங்கள்.

மிகக் கடினமான சூழ்நிலையை நோக்கி முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்வது காலத்தின் கட்டாயமாகும். நாம் இஸ்லாத்தை கற்காமல் செய்யும் தவறுகளால் நம் சமூகம் பிறரால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது
from >>http://kadheroli.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...