திங்கள், நவம்பர் 21, 2011

மேலப்பாளையத்தில் ரத யாத்திரை

மேலப்பாளையத்தில் தடையை மீறி ரத யாத்திரை செல்ல முயன்ற இந்திய தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் 181 பேரை போலீசார் கைது செய்தனர். பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அந்த நிலத்தை மீட்டு முஸ்லிம் மக்களிடம்...,

ஒப்படைக்க வலியுறுத்தியும் இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பில் மேலப்பாளையத்தில் இருந்து ரத யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ரத யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ரத யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து மேலப்பாளையம் பஜார் திடலில் போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பஜார் திடலில் தவ்ஹித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் ஏராளமானவர்கள் திரண்டனர். தடையை மீறி அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.


அப்போது தேசிய தலைவர் பாக்கர் பேசுகையில், "கரசேவை என்ற பெயரில் அத்வானி நடத்தும் ரத யாத்திரைக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. நாங்கள் கரசேவை நடத்தவில்லை. அனைத்து சமுதாய மக்களின் ஆதரவுடன் நாங்கள் நடத்தும் சமூக நல்லிணக்க யாத்திரைக்கு அரசு தடை விதிக்கிறது.


எத்தனை தடை வந்தாலும் எங்களது உணர்வுக்கு தடை விதிக்க முடியாது. பாபர் மசூதியை கட்டியேத் தீருவோம் என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலளார் முகம்மது முனிர், துணை தலைவர் முகம்மது சித்திக், துணை செயலாளர் முகம்மது இக்பால், மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் கபூர், மாநில செயலாளர் அப்துல் அமீது,


மாவட்ட தலைவர் முகம்மது அலி, துணை செயலாளர் முகம்மது ஆரிஸ், மனித உரிமை அமைப்பாளர் மணி, சீனிவாசன், பாபு, மீனவர் சங்கத் தலைவர் மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தடையை மீறி ரத யாத்திரை செல்ல முயன்ற 181க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...