செவ்வாய், நவம்பர் 29, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?1

நூலாசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர்
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)

பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...