செவ்வாய், நவம்பர் 01, 2011

இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி

ஏகஇறைவனின் திருப்பெயரால்
இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் ஆதாரப்பூர்மான ஹதீஸுடன் மோதுகிறது.

ஆதமின் மகன் இறந்த உடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை 1. நிரந்தர தர்மம். 2 .பஸ்ன் தரும் கல்வி 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (3084)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். நூற்கள் : திர்மிதீ (1425), இப்னுமாஜா (3138) அறிவிப்பவர் : அபூ அய்யூப்(ரலி)
மேற்கண்ட ஹதீஸ் நபித்தோழர்கள் தன் குடும்பத்திற்காக மட்டுமே குர்பானி கொடுத்துள்ளார்கள். இறந்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
நபி (ஸல்) அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப்பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹிம் மகள் ஜைனப் மனைவி கதீஜா ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி (ஸல்) அவர்கள் முதலில் இவர்களுக்குக் குர்பானி கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாததால் இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் குர்பானி கொடுக்கக்க கூடாது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானிகொடுக்கலாமா? அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள். இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.

யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார். அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி) நூல் : புகாரி (5545) முஸ்லிம் (3624)
பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்'' என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் (6 : 162).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களை திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான், அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி) நூல் : முஸ்லிம் (3659)
எனவே குர்பானியின் சட்டங்களை தெரிந்து அதன் அடிப்படையில் இவ்வணக்கத்தை நிறைவேற்றி ஈருலகிலும் இறையருளைப் பெறுவோமாக

நன்றி> இறைனேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...