வியாழன், மார்ச் 29, 2012

இஸ்லாம் மறுபிறவியை ஏன் மறுக்கிறது?

இஸ்லாம் மறுபிறவிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதன் ஒரே ஒரு முறைதான் பிறந்து இறப்பான். இறந்த பிறகு மறுமை நாளில் அவன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவனுடைய செயல்களின் அடிப்படையில் சுவனத்திற்கோ நரகத்திற்கோ அனுப்பப்படுவான். இவ்வாறுதான் இஸ்லாம் கூறுகிறது.

ஆனால் மறுபிறப்புக் கொள்கையின் நிலை வேறு. மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆவி வேறு ஒரு கூட்டிற்குச் சென்று விடுகிறது. அந்தக் கூடு மனிதனாகவோ, விலங்காகவோ, தாவரமாகவோ, உயிரற்ற பொருளாகவோ இருக்கலாம். பின்னர் அவன் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப மீண்டும் ஒரு பிறவி எடுக்கிறான். இவ்வாறு பல பிறவிகள் எடுத்து இறுதியாகப் பிறவியில் இருந்து விடுபட்டு இறைவனை அடைந்து முக்தி அல்லது மோட்சம் பெறுகிறான் என்று மறுபிறவிக் கொள்கை கூறுகிறது.

இந்த மறுபிறவிக் கொள்கையில் சில சந்தேகங்கள் தோன்றுகின்றன.

அ) மனிதன் முதலில் மனிதனாகப் பிறந்தானா அல்லது விலங்காகப் பிறந்தானா? விலங்கு என்று சொன்னால் அதற்கு முன் அவன் மனிதனாக இருந்து பாவம் செய்திருக்க வேண்டும். மனிதன் என்று சொன்னால் அதற்கு முன் அவன் விலங்காக இருந்திருக்க வேண்டும். ஆக, எது முதல் பிறவி?

ஆ) அவனுடைய ஆன்மா கர்ம வினைகளின் பயனாக ஒரு விலங்கிற்குள்ளோ, தாவரத்திற்குள்ளோ போகிறது என்று சொன்னால், நன்மை எது, தீமை எது என்று புரிந்து கொள்ளும் சக்தி அற்ற விலங்கோ, தாவரமோ எவ்வாறு முற்பிறவியின் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும்?

இ) ஒருவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாக அடுத்த பிறவியில் துன்பங்களை அனுபவிக்கிறான் என்றால் அவன் முற்பிறவியில் செய்த பாவம் என்ன என்பது அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா? அவ்வாறு தெரிந்தால்தானே அவன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும்? அவ்வாறு அவனுக்கு ஏதேனும் தெரிவிக்கப்படுகிறதா? அல்லது முந்தைய பிறவியில் நடந்த நிகழ்வுகள் பற்றிய நினைவுகள் அவனுக்கு உள்ளதா?

மறுபிறவிக் கோட்பாட்டில் காணப்படும் முரண்பாடான குழப்ப நிலை இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாட்டில் இல்லை. மனிதர்கள் இவ்வுலகில் வாழுகின்றபோது அவனுடைய செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. உலக முடிவு நாளின் பின்பு வரும் மறுமை நாளில் அந்த வினைச் சுவடி அவனிடத்தில் ஒப்படைக்கப்படும்.
குர்ஆன் கூறுகிறது, “அந்த வினைச் சுவடியைப் பார்க்கும் மனிதன் கூறுவான்: “அந்தோ! என் சிறு செயலையும் இது விட்டு வைக்கவில்லையே!” தாம் செய்தவை அனைத்தும் தம் முன்னால் இருப்பதை அவர்கள் காண்பார்கள். உம் அதிபதி சிறிதும் அநீதி இழைக்கமாட்டான்.” (குர்-ஆன் 18 : 49)

மனிதனின் செயல்களுக்கான வினைச்சுவடியை வைத்து அவன் சுவனத்திற்குரியவனா, நரகத்திற்குரியவனா என்பது தீர்மானிக்கப்படும். அத்தோடு அவனது செயல்களுக்கு சாட்சியங்களும் கொண்டு வரப்படும். அவனுடைய உடல் உறுப்புகளே அவனுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ சாட்சி சொல்லும். எனவே குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றங்கள் குறித்து அவனுக்கு உணர்த்தப்பட்ட பின்னரே அவனுக்குத் தண்டனை வழங்கப்படும்.

அவன் செய்த குற்றத்தை நிரூபிக்காமல், அவனுக்குத் தண்டனை வழங்கப்படுவது அநீதியானது. எனவே இஸ்லாத்தின் மறுமைக் கோட்பாட்டில் உள்ள இந்தத் தெளிவும் நீதியும் மறுபிறவிக் கோட்பாட்டில் இல்லை.

மறுபிறவிக் கொள்கையில் இன்னொரு குறைபாடும் உள்ளது. ஒருவன் செய்த பாவத்தின் சுமை அவன் வாழ்நாளோடு முடிந்துவிடுவதில்லை. அவன் செய்த பாவம் எவ்வளவு காலத்திற்கு இந்த உலகில் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்குமோ அதுவரை அவனுடைய பாவச் சுமை கூடிக் கொண்டே போகும். இந்த உலகம் முடிகின்ற போதுதான் அவன் செய்த பாவத்தின் முழு பரிமாணத்தையும் அளக்க முடியும். உதாரணமாக, ஒருவன் ஒரு மதுக்கடையைத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்த மதுக் கடையைத் திறந்ததற்காக ஒரு பாவத்தை அவன் சுமக்கிறான். ஆனால் அவன் பாவச் சுமை அத்தோடு முடிந்துவிடுவதில்லை. அவனால் துவக்கப்பட்ட மதுக் கடை இவ்வுலகத்தில் என்று வரை இருக்கிறதோ அன்று வரை அவனுடைய பாவச் சுமை நீண்டு கொண்டே போகும். அந்தக் கடையில் மது அருந்தியவர்கள், அதன் விளைவாக அவர்கள் செய்யும் கேடுகள் ஆகிய அனைத்துப் பாவங்களிலும் மதுக் கடையைத் திறந்தவனுக்கு ஒரு பங்கு உண்டு. இந்தப் பாவத்தின் விளைவுகள் ஒரு சங்கிலித் தொடர்போல நீண்டு கொண்டே போகும். இது எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக அவன் இறந்த பிறகும் அவன் துவக்கி வைத்த பாவத்தின் தாக்கம் தொடரும். எனவே இந்த உலகம் முடிவுற்ற பின்னரே ஒருவன் செய்த பாவத்தின் அளவை முழுமையாக கணிக்க முடியும்.

நபிகள் நாயகம் கூறினார்கள்:
“உலகில் ஒவ்வொரு கொலை நிகழும்போதும் முதல் கொலை நிகழ்த்திய முதல் மனிதன் காபிலின் (ஆதமின் மகன்) கணக்கில் ஒரு பாவம் எழுதப்படும். ஏனெனில் மனித சமூகத்திற்கு முதலில் கொலையை அறிமுகப்படுத்தியவன் அவனே.”

ஈ) இஸ்லாம் கூறும் மறுமைக் கோட்பாட்டின்படி இந்த உலகம் முடிவுற்ற பின்னர்தான் விசாரணை துவங்கும். ஆனால் மறுபிறவிக் கொள்கையிலோ இறந்தவுடன் தண்டனை துவங்கி விடுகிறது என்ற கருத்து உள்ளது. இது ஒரு நீதியான தீர்வாக இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...