ஞாயிறு, அக்டோபர் 23, 2011

மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை!

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.வரலாற்றுப் பக்கங்களிலிருந்து கிட்டத்தட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான் சாஹிபுடையது.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தனித்திறமையினால் மதுரையின் மன்னராக ஆனவர் வீரர் கான் சாஹிப். ஆங்கில அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இவர் சில துரோகிகளின் சூழ்ச்சியினால் சிறைப்பிடிக்கப் பட்டு ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
இவரது வாழ்வைப் பற்றிய சரித்திரக் குறிப்புகளில் சில சுவாரசியமான பக்கங்களை இனி பார்ப்போம்:
இவர் பிறப்பிலேயே முஸ்லிமா, அல்லது வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாக மாறியவரா என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இதுபற்றி ‘மஹதி’ எழுதிய ‘மாவீரர் கான் சாஹிப்’ என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்கப் பட்டிருக்கிறது.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்று சொல்லும் ஒரே ஒரு குறிப்பு எஸ்.ஸி.ஹில் என்பவர் எழுதிய “Rebel Commandant Yusuf Khan” என்ற நூலில் காணப்படுகிறது. 318 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கான் சாஹிப் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட பின் 150 ஆண்டுகள் கழித்து எழுதப் பட்டது. இந்த நூலாசிரியரிடம் ஓர் அரசாங்க அலுவலர், கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், பெயர் மருதநாயகம் பிள்ளை என்றும், பின்னால் முஸ்லிம் ஆகி யூசுப்கான் என்ற பெயரை வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்தாராம். அவர் தம் கூற்றுக்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை. கான் சாஹிபின் வாழ்க்கையைக் கூறும் வேறு எந்த நூலிலும் இந்தக் குறிப்பு காணப்படவில்லை.
கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்து பிறகு முஸ்லிமாகியிருந்தால் அது அவர் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான சம்பவமாகும். எங்கே முஸ்லிம் ஆனார், யாரால் முஸ்லிம் ஆக்கப் பட்டார் என்ற விபரங்கள் பிரபலமாகியிருக்கும். கான் சாஹிப் உயிர்த் தியாகம் புரிந்து 150 ஆண்டுகள் வரையும் யாரும் அதைப் பற்றி தெரிவிக்கவோ, எழுதி வைக்கவோ இல்லை. வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்குச் சான்றுகளும் இல்லை. யூசுப்கானோ, அவருடன் நெருங்கிப் பழகியவர்களோ, ஆற்காட்டு நவாபோ, ஆங்கிலேயரோ அவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டதே இல்லை. கான் சாஹிபின் வரலாற்றை எழுதிய மற்றவர்களும் தெரிவிக்கவில்லை. ஆகையால் கான் சாஹிப் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்பது கட்டுக் கதையாகும்.
மாறாக, அவர் பிறவி முஸ்லிம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
“கான் சாயபு சண்டை” என்ற நாட்டுப் பாடல் கான் சாஹிப் தூக்கிலிடப் பட்டவுடன் ஓர் இந்தியக் கவிஞரால் பாடப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு பாடப் பட்டிருக்கிறது.
“விகடமிடுவோர்கள் குலகாலன் – வெற்றி
விசைஆலிம் குலம் விளங்க வருதீரனான
ரதகஜதுரக படையாளன் – நல்ல
நடனமிகுபரு நகுலதுடி நிபுணகொடியான்”
இதிலிருந்து கான் சாஹிப் ஆலிம் குலவிளக்கு என்பது தெளிவாகிறது. (ஆலிம் = இஸ்லாமிய மார்க்க அறிஞர்). அந்தக் காலத்திலேயே வாழ்ந்த ஒரு கவிஞருக்குத் தெரிந்திராத ஒரு தகவலை 150 ஆண்டுகள் கழித்துப் பிறந்த அரசாங்க அலுவலர் எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை.
தவிர-
கான்சாஹிப் தூக்கிலிடப்பட்ட ஏழே நாட்கள் கழித்து ஆங்கிலேயர் ஒருவர், ஸ்காட்லாந்தில் இருந்த தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கான் சாஹிப் ஆங்கிலேயருடன் வீரப் போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் எழுதியதாவது:
“கான் சாஹிப் ஒரு பிறவி முஸ்லிம்
Khan Sahib is by birth a moor and is descended from the ancient seed of the nation.”
இந்தக் குறிப்பும் எஸ்.ஸி.ஹில் எழுதிய நூலில் பக்கம் 286-ல் குறிப்பிடப் பட்டிருக்கிறது.


(Moor = The word was used more generally in Europe to refer to anyone of Arab or African descent).
இதனால் கான்சாஹிப் வேளாளர் குலத்தில் பிறக்கவும் இல்லை; பெயர் மருதநாயகம் பிள்ளையும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒருவேளை இவர் மக்களால் போற்றப்பட்ட, மதுரையின் தலைவராக விளங்கியதால் ‘மதுரை நாயகம்’ என்று அழைக்கப்பட்டு, பின் பேச்சுவழக்கில் மதுரை என்பது மருதை என்று மருவி ‘மருதநாயகம்’ ஆகியிருக்கலாம்.
அல்லது கான்சாஹிபின் முன்னோர்களில் யாராவது மருதநாயகம் பிள்ளையாக வாழ்ந்திருக்கலாம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்கள்தாமே!
=======
ஆதார நூல்: ‘மாவீரர் கான் சாஹிப்’ - நூலாசிரியர்: ‘மஹதி’ – பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்


இவன்;தமிழ் நேசன்

4 கருத்துகள்:

  1. பிள்ளை என்பது சாதியா...??? பட்டமா...???

    பிள்ளை என்பது பட்டமே...

    பிள்ளை என்கிற பட்டம் பறையர்களுக்கு உண்டு...ஈ.வெ.ராமசாமிக்கு "பெரியார்" என்ற பட்டம் வழங்கிய பறையர் பேரின தமிழச்சி பெண் விடுதலை போராளி மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் தாத்தாவின் பெயர் "பெ.மா.மதுரை பிள்ளை" ஆவார்.

    ஆகவே...மருதநாயகத்திற்கு பிள்ளை என்கிற பட்டம் உள்ளத்தால் அவர் பிள்ளைமார் இனத்தை சார்ந்தவர் என்று கூறிவிட முடியாது...

    அவர் வெள்ளாளர் இனத்தவர் அல்ல...சாம்பவ குல வேளாளர் இனத்தவர் அதாவது உழவுப் பறையர்...

    பனையூரில் வாழ்ந்த சாம்பவ குல வேளாளர்கள் பலர் இஸ்லாம் தழுவினர்..அதில் மருதநாயகம் குடும்பமும் அடங்கும்..

    சேனாதிபதி.ஜெ.மு.இமயவரம்பன் என்பவர் தனது "மறைக்கப்பட்ட பறையர் வரலாறு" நூலில் பல ஆதாரங்களுடன் பனையூர் முன்பு பறையனூர் என்று அழைக்கப்பட்டு வந்ததையும் , மருதநாயகம் பறையர் பேரினத்தில் பிறந்து கான்சாகிப்பாக மாறியவர்...ஆகியவற்றை பல்வேறு ஆதாரங்களுடன் நிருபித்துள்ளார்...

    "மார்க்கம் மாறினாலும் மறையோர் குலத்தவன் எங்கள் மருதநாயகம்"

    பதிலளிநீக்கு
  2. We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...