திங்கள், அக்டோபர் 31, 2011

ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்

ஏகஇறைவனின் திருப்பெயரால்
ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான்.

இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! பெண்களுக்கும் ஜிஹாத் உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘ஆம்! போராட்டமற்ற ஜிஹாத் அவர்களுக்குண்டு. அதுதான் ஹஜ்ஜும், உம்ராவும்’ என்றார்கள். (அஹ்மத் இப்னுமாஜா)

புகாரி கிரந்தத்தில் பின்வரும் அறிவிப்பொன்றுள்ளது.

ஆயிஷா(ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்ததாக நாம் ஜிஹாதைக் காண்கிறோம். நாமும் ஜிஹாத் செய்ய வேண்டாமா?’ எனக் கேட்ட போது, நபியவர்கள் ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜே சிறந்தது’ என விடையளித்தார்கள். (புகாரி)

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக இருப்பினும், பெண்களுக்கான ஜிஹாதுக்கான பிரதியீடாக நபியவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது பெண்களுக்கு ஹஜ் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஆண்கள் ஹஜ் செய்வது கடமை. அதனை நிறைவேற்றினால் அவர்களுக்கு அக்கடமை நீங்குவதோடு, அதற்கான கூலியும் கிடைக்கும். ஆனால், பெண்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினால் இரண்டு கடமைகள் நீங்குவதோடு, இரண்டு கடமைகளின் கூலிகளும் கிடைக்கும் என நபியவர்கள் கூறியிருப்பதால் பெண்கள் ஹஜ் செய்வதில் அதிக நாட்டம் கொள்வது சாலச் சிறந்தது.

இந்த வகையில், பெண்களோடு மட்டும் தொடர்புபட்ட சில சட்டதிட்டங்களை விளக்கலாம் என நினைக்கிறோம்.

(1) மஹ்ரம்:
ஹஜ் கடமை நிறைவேறுவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொதுவான சில ஷர்த்துக்கள்-நிபந்தனைகள் காணப்படுகின்றன. முஸ்லிமாயிருத்தல், புத்தி சுவாதீனம், அடிமையற்ற நிலை, பருவ வயது, பொருளாதார சக்தி என்பனவே அவை.

இவற்றோடு பெண்களுக்குப் பிரத்தியேகமாக, மஹ்ரமான-திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்ட ஆண்களின் பிரயாணத் துணை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

(கணவன், தந்தை, மகன், சகோதரன், பால் குடிச் சகோதரன், தாயின் கணவன், கணவனின் மகன் என்பவரே பயணத்தில் கூட்டிச் செல்ல அனுமதிக்கப்பட்ட துணைகளாவர்.)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பைப் பாருங்கள்!

‘எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!’ என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் ‘நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!
‘எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

ஒரு பெண்ணின் ஹஜ் பிரயாணத்திற்குத் துணையாகச் செல்பவர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். புத்தி சுவாதீனம்-சீரிய சிந்தனை, பருவ வயது, இஸ்லாம்.

பொருளாதார ரீதியான வசதிகள் கிடைக்கப் பெற்ற ஒரு பெண் மஹ்ரமில்லாவிட்டால் எவ்வாறு ஹஜ் செய்வது? என்ற கேள்வி எழலாம்.

இந்தக் கேள்விக்கு இன்றைய ஹஜ் முகவர்கள் வித்தியாசமான விளக்கங்கள் கொடுத்து, பெண்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். ஒரு இபாதத் நிறைவேறுவதற்கு அதன் ஒழுங்கு விதிகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும். நிபந்தனைகள்-ஷர்த்துக்கள் முழுமையடைய வேண்டும். இல்லாவிடில் அந்த இபாதத் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அது ஒரு புறமிருக்க, நபியவர்களின் தடையை மீறிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்ட கதையாய் எமது இபாதத் அமைந்து விடக் கூடாது.

அப்படியாயின், மஹ்ரம் துணையற்ற பெண்களது ஹஜ்ஜின் நிலைப்பாடு என்ன? இஸ்லாம் அதற்கும் வழிகாட்டியே உள்ளது. குறிப்பிட்ட அந்தப் பெண்கள் தமக்காகப் பிரதிநிதிகளை நியமித்து அவர்களினூடாக ஹஜ் செய்துகொள்ளலாம்.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

(2) கணவனின் அனுமதி:
ஆயுளில் ஒரு ஹஜ்ஜே கடமையானது. அதற்கு மேலதிகமாகச் செய்வது நஃபிலானது-விரும்பத்தக்கது. இவ்வாறு நஃபிலான ஹஜ் செய்ய விரும்புகின்ற ஒரு பெண் தனது கணவனின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஹக்குஸ் ஸவ்ஜ்-கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு மனைவிக்கு வாஜிபாகும். எனவே, நஃபிலானதை விட வாஜிபான செயலே முற்படுத்தப்படல் வேண்டும் என இப்னுல் முன்திர் போன்ற இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

(3) ஆண்களுக்குப் பிரதிநிதியாகச் சென்று பெண்கள் ஹஜ் நிறைவேற்றல்:
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்கள், மஜ்மூஉ பதாவா என்ற தனது நூலில், ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காகப் பிரதிநிதி என்ற வகையில் ஹஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர் மகளாகவோ, ஏனைய பெண்களாகவோ இருக்க முடியும் என்கிறார். அத்தோடு ஒரு ஆணுக்காகவும் பெண் ஹஜ் செய்ய முடியும் என நான்கு இமாம்கள், மற்றும் பெரும்பாலான அறிஞர்களும் கருதுகின்றனர்.

இமாம்களின் இக்கருத்துக்கு வலுவூட்டும் ஹதீஸும் ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

‘ஹத்அமிய்யா என்ற பெண்ணின் கேள்விக்கு விடையளிக்கும் போது அவளது தந்தைக்காக ஹஜ் செய்ய நபியவர்கள் அனுமதியளித்தார்கள்.’
(புகாரி, நஸஈ)

(4) இஹ்ராம் கட்டத் தயாராகும் போது பெருந்தொடக்கு ஏற்படல்:
ஹஜ்ஜுக்காகப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண், வழியில் ஹைழ்-மாதவிடாய், நிபாஸ்-பேறு காலத் தீட்டு போன்ற உபாதைக்குள்ளானால் ஏனைய சுத்தமான பெண்களைப் போன்று இவள் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். இஹ்ராம் ஆடை உடுத்துவதற்குச் ‘சுத்தம்’ ஒரு நிபந்தனையாகக்கொள்ளப்படவில்லை.

இமாம் இப்னு குதாமா அவர்கள்: ‘இஹ்ராம் அணியும் போது ஆண்களைப் போலவே பெண்களும் குளித்துக்கொள்ள வேண்டும். ஹைழ், நிபாஸ் போன்ற உபாதைக்குள்ளான பெண்களுக்கும் விதிக்கப்பட்ட கடமையே ஹஜ்ஜாகும்.’

இது பற்றி ஜாபிர்(ரலி) அவர்களது பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது.
‘…நாங்கள் துல்ஹுலையாவை அடைந்த போது அஸ்மா பின்த் அமீஸ், முஹம்மத் இப்னு அபீபக்ர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். உடனே, தான் என்ன செய்வது எனக் கேட்டு நபியவர்களிடம் தூதனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள், ‘குளித்துக் கொள்வீராக! ஆடையை மாற்றிக் கொண்டு, இஹ்ராம் அணிந்துகொள்வீராக!’ எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் 2334)

இது சம்பந்தமாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இவ்வாறு கூறுகிறது:

‘பிரசவத் தீட்டு மற்றும் மாதவிடாய் உபாதைக்குள்ளான பெண்கள் கஃபாவைத் தவாப் செய்வதை மட்டும் விடுத்து ஏனைய அனைத்து கிரியைகளையும் இஹ்ராம் கட்டிக் கொண்டு நிறைவேற்றுவார்கள்.’
(அபூதாவூத், முஃனி 3/293-294, முஸ்லிம் 2307)

இங்கு ஹைழ்-நிபாஸ் உபாதைக்கு உள்ளானோரைக் குளிக்கச் சொல்லியிருப்பது சாதாரண சுத்தத்தையும், கெட்ட வாடைகளற்ற நிலையையும், நஜீஸின் தன்மையைக் குறைத்துக் கொள்ளவும்தான் என விளங்கிக்கொள்ளலாம்.

எனவே, இவ்விரு உபாதைக்குள்ளான பெண்களின் இஹ்ராமுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. இஹ்ராம் நிலையிலேயே அவர்கள் தொடர்ந்திருப்பார்கள். இஹ்ராம் கட்டியவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட எச்செயலிலும் ஈடுபடக் கூடாது. தொடக்கிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் வரை அவர்கள் கஃபாவைத் தவாப் செய்யக் கூடாது.

ஒரு வேளை அரஃபா தினம் வரை அவர்களால் சுத்தமாக முடியவில்லை என்றிருக்குமானால், உம்ராவுக்காக அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தால், அதிலிருந்து விடுபட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்வார்கள். பின்னர் உம்ராவைச் செய்துகொள்ளல் வேண்டும். இதனால் இவர்கள் ‘காரின்’ என்ற நிலையை அடைவார்கள்.

இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் இக்கருத்தை ஆதரித்துள்ளார்கள்:

இது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
‘நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் ‘சரிஃப்’ எனுமிடத்தில் அல்லது அதற்கு அருகில் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி(ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னிடம், ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இந்த மாதவிடாய்ப் பெண்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும் வரை இறையில்லத்தைச் சுற்றித் (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்!’ என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.’

(5) இஹ்ராம் அணியும் போது செய்ய முடியுமானவை:
ஆண்கள் போன்றே பெண்களும் குளித்துச் சுத்தமாக இருந்துகொள்ள வேண்டும். களைய வேண்டிய முடிகளைக் களைந்துக் கொள்ளல், நகம் வெட்டுதல், கெட்ட வாடைகளை நீக்குதல் போன்ற விடயங்களைச் செய்துகொள்ளலாம். இஹ்ராம் கட்டிய நிலையில் செய்யக் கூடாதவைகளைச் செய்யாதிருக்க முற்கூட்டியே அவற்றைச் செய்துகொள்ளல் வேண்டும். இத்தேவைகள் இல்லாவிட்டால் அதனை இஹ்ராமுக்கான ஏற்பாட்டுக் காரியமாக நிறைவேற்றத் தேவையில்லை. இஹ்ராமுக்கான செயற்பாடுகளில் அவை உள்ளடங்க மாட்டாது. வாசம் வெளிப்படாத வகையில் மணம் பூசிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘நாம் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்ற போது எமது நெற்றியில் கஸ்தூரியைப் பூசியிருந்தோம். எமக்கு முகம், வியர்த்து வடிந்த போது அதனை நபியவர்கள் கண்டார்கள். எனினும் அதனைத் தடுக்கவில்லை’. (ஆயிஷா(ரலி), அபூதாவூத்)

(6) முகம் மறைக்கக் கூடாது:
இஹ்ராம் கட்டியதும் பெண்கள் முகம் மறைக்கக் கூடாது. வழமையாக முகத்தை மறைத்து ஆடை அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தாலும் முகத்தைத் திறக்க வேண்டும்.

‘பெண்கள் (ஹஜ்ஜின் போது) முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டாம்!’ (புகாரி)

கைகள், கால்கள், முகம் ஆகிய உறுப்புக்களோடு ஒட்டிய நிலையில் Gloves, Socks, Burka (Face Cover) என்பன அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சாதாரண ஆடைகள் மூலம் அவை அன்னிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு ஆடை அணிவதில் குற்றமில்லை என்பது இமாம்களின் கருத்தாகும்.

(7) விரும்பிய ஆடையை அணிந்துகொள்ளல்:
இஹ்ராமின் போது கவர்ச்சியற்ற தாம் விரும்பிய ஆடைகளை அணிந்துகொள்ளப் பெண்களுக்கு அனுமதியுண்டு. குறிப்பாகப் பெண்களுக்குரிய ஆடைகளாக அவை இருக்க வேண்டும். ஆண்களின் ஆடைகளுக்கு ஒப்பானவையாக இருக்கக் கூடாது. உடல் உறுப்புக்களின் அமைப்புக்கள் விளங்குமாறு இறுக்கமானதாய் அமையக் கூடாது. உடலுறுப்புக்களை மறைக்காத மெல்லியதாய் இருக்கக் கூடாது. கைகள், கால்கள் தெளிவாக வெளிப்படும் தன்மை கொண்ட கட்டை ஆடைகளாக இருக்கக் கூடாது. பொதுவாகப் பெண்களின் ஆடைகள் விசாலமானதாகவும், தடித்ததாகவும், தாராளமானதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

பெண்களுக்கென்று தனியானதொரு நிற ஆடை அணிய வேண்டும் என்று எந்த விதியும் இஸ்லாத்தில் கூறப்படவில்லை. ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான நிற ஆடைகளை அணிந்துகொள்ளலாம்.

(8) தனக்குள் மட்டும் தல்பியா சொல்தல்:
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டவர்கள் ‘தல்பியா’ சொல்வது கடமையாக்கப்பட்டுள்ளது. எனினும், தனது சத்தம் தனக்கு மட்டும் கேட்குமாறு தல்பியாவை மொழிவது சுன்னத்தாகும். எனவே, பெண்கள் தமது குரல்கள் வெளிப்படுத்தப்பட்டு அதனால் ஏனைய ஆண்களின் கவனம் ஈர்க்கப்படாதிருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

(9) தவாப் செய்யும் போது:
தவாப் செய்யும் போது பெண்கள் தம்மை முழுமையாக மறைத்துக்கொள்ள வேண்டும்; சத்தத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்; பார்வையைத் தாழ்த்திக்கொள்வதோடு, ஆண்களோடு முட்டி மோதும் நிலையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கஃபாவில் ஆண்கள்-பெண்கள் வேறுபாடின்றிக் கலந்துகொள்ளும் நிலை காணப்படுவதால், இவ்விடயத்தில் பெண்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ போன்ற இடங்களில் ஆண்களோடு முட்டி, மோதி நெருக்கடிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை கிடையாது. தவாபுக்காகவும் நெருக்கடிக்குள் செல்ல வேண்டிய தேவையில்லை. தவாபின் ஓடுபாதையில் ஓரங்களில் ஒடுவது நல்லது. ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லை முத்தமிடுவது ஒரு ஸுன்னா. ஆனால், ஆண்களோடு பெண்கள் நெருக்கடிக்கப்படுவது ஹராம். எனவே, ஸுன்னாவை விட ஹராம் பெரியது என்பதைக் கவனத்திற்கொள்ளல் வேண்டும். இமாம் நவவி(ரஹ்), இப்னு குதாமா போன்ற இமாம்கள் இக்கருத்தையே முன்வைக்கின்றனர்.

(10) தவாப் செய்யும் முறை:
பெண்கள் க’அபாவைத் ‘தவாப்’ செய்யும் போதும், ஸஃபா-மர்வாவுக்கிடையில் ‘ஸஈ’ செய்யும் போதும் நடந்தே செல்ல வேண்டும். ஆண்கள் ஓடும் இடங்களில் இவர்கள் ஓடத் தேவையில்லை.

(11) மாதவிடாய் பெண் செய்யக் கூடியவை:
மாதவிடாய்க்குட்பட்ட இஹ்ராம் அணிந்த பெண்கள் சுத்தமாகும் வரை எவற்றைச் செய்யலாம்? எவற்றைச் செய்யக் கூடாது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அனைத்துக் கிரியைகளையும் செய்யலாம். (இஹ்ராம், அரஃபாவில் தரித்தல், முஸ்தலிஃபாவில் தரித்தல், கல்லெறிதல்)

ஆனால், கஃஅபாவைத் ‘தவாப்’ செய்வது கூடாது.

இங்கு இன்னொரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் செய்த பின் ஸஈயின் போது மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் தொடர்ந்து ஸஈ செய்யலாம். தவாப் முடிவதற்கு முன்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் ஸஈ செய்ய முடியாது. ஏனெனில், தவாபுக்குப் பின்னரே ஸஈ செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

கஃஅபாவைத் தவாப் செய்வதற்குப் போன்று ‘ஸஈ’ செய்வதற்குச் சுத்தம் நிபந்தனையாகக் கொள்ளப்படவில்லை.

(12) தலைமுடி கத்தரித்தல்:
ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்றி விட்ட பெண்கள் ஆண்களைப் போன்று தலைமுடியை மழிக்க வேண்டிய கடமை கிடையாது. ஆண்கள் தமது தலைமுடியை முழுமையாக மழிக்க, பெண்கள் தமது கொண்டையின் கூந்தலில் சிறு பகுதியைக் கத்தரித்தால் போதுமானது.

பெண்கள் தலைமுடியை மழிப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:

‘பெண்களுக்கு முடி மழிப்பது கடமையில்லை. அவர்கள் கத்தரித்தால் மட்டும் போதுமானது’ என நபியவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்)

அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
‘பெண்கள் தலையை முழுமையாக மழிப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்’. (திர்மிதி)

(13) தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டால்:
‘தவாபுல் இபாழா’ என்பது ஹஜ்ஜுக்காக நிறைவேற்றப்படும் கடமையாகும். இதன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் ‘தவாபுல் வதா’ (பிரியாவிடை தவாப்) நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.

இது பற்றி அயிஷா(ரலி) இனால் அறிவிக்கப்பட்டுள்ள பல செய்தி விளக்குகிறது. (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

(14) மஸ்ஜிதுன் நபவியைத் தரிசித்தல்:
ஹஜ்ஜுக்குச் சென்ற பெண்கள் கடமை முடிந்த பிறகு விரும்பினால் மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழலாம். எனினும், கபுறுகளைத் தரிசிப்பதற்கென்றே பயணிப்பதற்கு அனுமதி கிடையாது. நபியவர்கள் கபுறடிக்குச் சென்று ‘பரகத்’ தேட நினைக்கக் கூடாது. அவ்வாறு எண்ணுவது முழு ஹஜ்ஜையும் பாழாக்கி விடும். மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று அதன்பின் நபியவர்களதோ, ஏனைய நல்லடியார்களினதோ கபுறுகளை ஸியாரத் செய்வதற்கும், அதன் மூலம் மரணத்தை நினைவு கூர்ந்து அவர்களுக்காக துஆச் செய்வதற்கும் அனுமதியுண்டு.

இது வரை விளக்கிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு எமது ஹஜ்ஜை நிறைவேற்றி அன்று பிறந்த பாலகனைப் போன்று வீடு திரும்ப எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

from islamthalam.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...