திங்கள், அக்டோபர் 31, 2011

திருமணத்தில் பெண்களின் உரிமைகள்

ஏகஇறைவனின் திருப்பெயரால்
‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.

அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்!

அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19)

பெண்களின் உரிமைகள் குறித்து மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் அடங்கியுள்ளன. இம்மூன்று கட்டளைகளையும் இக்கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட காரணத்தையும் அறிந்து கொண்டால் பெண்களின் உரிமையைக் காப்பதில் இஸ்லாம் காட்டும் அக்கறையைப் புரிந்து கொள்ளலாம்.

முதலாவது கட்டளைக்குள் இரு செய்திகள் அடங்கியுள்ளன. இதன் நேரடியான பொருளைப் பார்க்கும் போது பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை அது கூறுகிறது. இவ்வசனம் எந்த சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் போது மற்றொரு செய்தியையும் சேர்த்துச் சொல்கிறது. எந்த ஒரு வசனமாக இருந்தாலும் அதன் நேரடியான பொருளையும் எது குறித்து அருளப்பட்டதோ அந்தக் கருத்தையும் அவ்வசனம் சேர்த்துக் கூறுவதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் அருளப்பட்டது என்பதைப் பார்க்கும் முன் இதன் நேரடியான பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

இஸ்லாம் மார்க்கம் அருளப்படுவதற்கு முன்னால் உலகில் எந்தச் சமுதாயத்திலும் எந்தப் பகுதியிலும் திருமணத்தின் போது பெண்களின் விருப்பம் கேட்கப்படுவதில்லை. கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்த நாகரீக உலகில் கூட பல பகுதிகளில் பெண்களின் சம்மதம் பெறப்படாமல் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்படுவதைக் காண்கிறோம்.

இருபதாம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை என்றால் ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாததாகத் தான் இருந்திருக்கும்.

இத்தகைய காலகட்டத்தில் பெண்களைக் கட்டாயப்படுத்தி மண்ந்து கொள்வது ஹலால் இல்லை. அனுமதி இல்லை என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது. இவ்வாறு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று பெண்கள் தரப்பிலிருந்து கோரிக்கையோ போராட்டமோ நடத்தப்படாத கால கட்டத்தில் இஸ்லாம் தன்னிச்சையாக – உலகிலேயே முதன் முறையாக – இந்த உரிமையை வழங்குகிறது.

திருமறைக் குர்ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் இந்த உரிமையை வலிமையுடன் வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ளன.

விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ)

புகாரியின் மற்றொரு அறிவிப்பில் ‘அல்லாஹ்வின் தூதரே! கன்னிப் பெண்ணிடம் எவ்வாறு அனுமதி பெறுவது? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவளது மௌனமே சம்மதமாகும் என விடையளித்தார்கள்.

கன்னிப் பெண் தனது சம்மதத்தைத் தெரிவிக்க வெட்கப்படுவாள். அதே சமயம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைச் சொல்வதற்கு வெட்கப்படமாட்டாள். பெண்களின் இந்த இயல்பைக் கவனத்தில் கொண்டுதான் கன்னிப் பெண்ணின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று விவாதம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் தான் இந்தப் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது.

இதைவிடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதைக் கவனியுங்கள்!

‘கணவன் இல்லாதவள் (திருமணம் ஆகாதவள், கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவள், கணவனை இழந்தவள் ஆகிய மூவரையும் இவ்வார்த்தை உள்ளடக்கும்) தனது பொறுப்பாளனை விட தன் விஷயமாக முடிவு செய்ய அதிக உரிமை படைத்தவளாவாள். கன்னிப் பெண்ணிடமும் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

ஒவ்வொரு பெண்ணும் தனது விஷயத்தில் தானே அதிக உரிமை படைத்தவள். பெற்றவர்களை விட அவளே தன் விஷயமாக முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவள் என்று இருபதாம் கூற்றாண்டில் கூட சொல்ல முடியவில்லை – என்பதை நினைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் தறுதலைப் பெண்டிரின் தீய நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இதை விடவும் வலிமையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உரிமையை எப்படி வலியுறுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்.

‘அவள் மறந்து விட்டால் அவள் மீது வரம்பு மீறுதல் யாருக்கும் கிடையாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்)

ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாதவருடன் அவரது பெற்றோர் மணமுடித்து வைத்து விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று உலகின் முதன் முதலாகப் பிரகடனம் செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

கன்ஸா என்ற விதவைப் பெண்ணை அவரது தந்தை கிதாம் என்பாருக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் கன்ஸாவுக்கு இதில் விருப்பமில்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரது திருமணத்தை ரத்துச் செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான், நூல்: புகாரி)

என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். ‘என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை’ என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ)

இந்தச் சான்றுகளிலிருந்து இரண்டு செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம். பெற்றோர்கள் தங்கள் மக்களை ஒரு உணர்வற்ற பொருளாகக் கருதக் கூடாது. அவர்கள் இஸ்லாமிய வட்டத்துக்கு உட்பட்டு எந்த மணமகனை விரும்பினாலும் அவருடன் மண முடித்து வைக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்;கிறது. பிடிக்காதவனுடன் வாழ்க்கை நடத்துவதால் மகிழ்ச்சியும் தொலைந்து போய்விடும். பெண்கள் வழி தவறிச் செல்லவும் இது பாதையை ஏற்படுத்தும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்கும் அதிகாரம் தங்களுக்குக் கிடையாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

விருப்பமில்லாதவனுக்கு ஒரு பெண் முடிக்கப்பட்டால் அவள் சமுதாயப் பெரியவர்களிடம் ஊர் ஜமாஅத்துகளிடம் அதை தெரிவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்த திருமணத்தை ரத்துச் செய்து உத்தரவிட வேண்டும். பெண்களின் உரிமையைப் பெற்றோர் பறிக்கும் போது சமுதாயம் அதை மீட்டுக் கொடுக்க வேண்டும்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைப் பெண்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யார் தனக்கு வாழ்க்கைத் துணைவனாக வர வேண்டும் என்பதையும் யார் வரக்கூடாது என்பதையும் முடிவு செய்யும் அதிகாரத்தை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கினாலும் தாமாக ஓடிப்போய் மணந்து கொள்ளக் கூடாது. அந்த உரிமையைப் பெற்றோர் வழியாகவும் அவர்கள் மறுத்தால் பெரியோர்கள், சமுதாய இயக்கம் வழியாகத் தான் பெற வேண்டும்.

ஏனெனில் பொறுப்பாளர் இன்றி ஒரு பெண் திருமணம் செய்யக் கூடாது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (இது குறித்து மற்றொரு இடத்தில் விரிவாக விளக்கப்படும்.)

பெண்களை மணந்து கொள்வதாக ஏமாற்றி அனுபவித்து விட்டு வீதியில் வீசி எறிந்து விட்டு செல்லக்கூடிய மனநிலை தான் பெரும்பாலான ஆண்களுடையது. பொருப்பாளர் முன்னிலையில் அவர் நின்று நடத்தும் போது ஏமாற்றி விடாமல் இருக்க தக்க ஏற்பாடுகளைச் செய்து கொள்வார். இது பெண்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக அமையும். இதைக் கவனத்தில் கொள்ளாது வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்ட அபலைகள் ஏராளம் உள்ளனர் என்பதைப் பெண்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்களைக் கட்டாயப் படுத்தி அவர்களுக்கு வாரிசாகுவது ஹலால் இல்லை என்ற ஒற்றை வரியில் இவ்வளவு செய்திகள் அடங்கியுள்ளன.

இவ்வசனம் எந்தச் சமயத்தில் அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்த வரியில் அடங்கியுள்ள மற்றொரு அறிவுரையையும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஒருவர் மரணித்து விட்டால் இறந்தவரின் குடும்பத்தார் தான் அவரது மனைவி விஷயத்தில் அதிகாரம் படைத்தவர்களாக இருந்து வந்தனர். கணவனின் உறவினர்கள் விரும்பினால் தாமே அவளை (வலுக்கட்டாயமாக) மணந்து கொள்வர். விருப்பமில்லா விட்டால் அவளுக்கு வேறு யாரையும் மணமுடிக்க மாட்டார்கள். அவளது குடும்பத்தினரை விட கணவனின் குடும்பத்தினரே பெண் விஷயத்தில் உரிமை படைத்தவர்கள் என்ற நிலை இருந்தது. இதை மாற்றவே இவ்விசனம் அருளப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: இக்ரிமா, நூல்: புகாரி)

கணவன் இறந்த பிறகு கூட பெண் கணவனின் உடமையாகத் தான் அன்று கருதப்பட்டாள். அவள் அழகானவளாக இருந்தால் கணவனின் உறவினரில் யாராவது அவளை அவளது சம்மதமின்றி மணந்து கொள்ளலாம். அவள் அழகில்லாதவளாக இருந்து விட்டால் அவளை வேறு யாருக்கும் மணமுடித்து வைக்க மாட்டார்கள். வீட்டிலேயே அடைத்து வைப்பார்கள்.

இவ்வாறு செய்வதற்குக் காரணம் கணவன் மனைவிக்கு மஹர் கொடுக்கும் வழக்கம் அந்த அறியாமைக் காலத்திலும் இருந்து வந்தது.

மஹராகப் பெற்ற அந்தச் சொத்து அவளுக்கே உரிமையாக இருந்து வந்தது. கணவன் இறந்த பின் அவன் கொடுத்த மஹரைத் திரும்பிப் பெறுவதற்காக கணவனின் குடும்பத்தார் அவளை அடைத்து வைத்துக் கொள்வார்கள். அவனது மஹரைத் திருப்பிக் கொடுத்தால் அவளை விட்டு விடுவார்கள். அவள் மஹரைத் திருப்பிக் கொடுக்கா விட்டால் அவள் மரணிக்கும் வரை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டு அவள் இறந்ததும் அந்தச் சொத்தை தமதாக்கிக் கொள்வார்கள். (அந்த விபரங்கள் அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

இந்தக் கொடிய வழக்கம் முழுவதையும் அடியோடு தடை செய்யவே இவ்வசனம் அருளப்பட்டது.

ஒருவன் இறந்த பின் அவனது மனைவியும் அவளது உடைமைகளும் கணவனின் குடும்பத்தாரைச் சேரமாட்டார்கள். அந்தப் பெண் தனது சொத்துக்களை எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாரிடம் செல்லலாம்.

கணவன் இறந்து விட்ட காரணத்தினால் அவனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மணந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அந்தப் பெண் தனக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யலாம்.

கணவன் திருமணத்தின் போது தோட்டத்தையோ நகையையோ, பெரும் தொகையையோ மஹராகக் கொடுத்திருக்கலாம். கணவன் இறந்து விட்டால் அந்தச் சொத்துக்கு மனைவி தான் உரிமையானவளே தவிர கணவனின் குடும்பத்தாருக்கு அதில் முழு அளவுக்கோ, சிறு அளவுக்கோ உரிமை கிடையாது.

இவை யாவும் மேற்கண்ட வசனத்திலிருந்து பெறப்படும் வழி காட்டுதலாகும். இது இருபதாம் நூற்றாண்டுக்கும் தேவையான இஸ்லாத்தின் போதனையாகும்.

பெண்ணுரிமை என்று காட்டுக் கூச்சல் போட்டு இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்த விரும்புவோர் கூட இன்னும் பெற முடியாத உரிமைகளை இஸ்லாம் எந்தக் கூச்சலும் போடாமலேயே பெண்களுக்கு அளித்துள்ளது என்பதை உணர வேண்டும்.

முஸ்லிம் பெற்றோர்களும் முஸ்லிம் ஜமாத்துகளும் இத்தகைய விமர்சனத்திற்கு இடமளிக்காமல் அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அப்படியே வழங்க வேண்டும். இதை மறுத்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் செய்யத் தூண்டக் கூடாது.

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவை பாலிய வயதிலேயே திருமணம் செய்தது ஏன் என்பதையும் இவ்வசனத்தின் இறுதிப் பகுதியில் கூறப்படும் இனிய நல்லறத்தின் முழு இலக்கணத்தையும் அடுத்த இதழில் பார்ப்போம்.
from;;http://islamthalam.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...