வியாழன், அக்டோபர் 27, 2011

மாமியார் மெச்சும் மருமகளாக!

ஏகஇறைவனின் திருப்பெயரால்
உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க" என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் ''மேரிடல் கவுன்சிலிங்'' வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது!
அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.
தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் ஆரம்பம். அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர்.
அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே!
அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.
"மனைவியா? அம்மாவா? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என ஆண்குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.
சிக்கலில் மிக நுட்பமான பகுதி!
இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா? ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்!
வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை !. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.
மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசுங்கள்!
யோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். "உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்". சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.
மாமியாருக்கு மதிப்பு கொடுங்கள்!
உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும்? எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.
உங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போது எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க ? அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் !
உங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.
புகுந்த வீட்டிலும் இயல்பாக இருங்கள்!
உங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் !
அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.
மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற காரணங்கள் பல!
மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.
மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்துங்கள்!
சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள்? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ?
மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான்!
குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள்!
அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. "அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு" என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். "என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்" ன்னு மாமியார் சொன்னா, "ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா" ன்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா "உங்க ஆளுங்க கிட்டே பேசும்போது மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ" ன்னு நக்கல் அடிக்காதீங்க.
சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.
- Abu Safiyah

www.nidur.info

Posted by மு.ஜபருல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...