ஞாயிறு, மே 20, 2012

சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு


சவூதித் தலைநகர் ரியாத்திலிருந்து 500 கல் தொலைவில் உள்ள அல்ராஸ் என்னுமிடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த அன்வர்தீன் என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதேயான அன்வர்தீன் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர். நள்ளிரவில் காருக்குப் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் செல்ல அந்த சவூதிநபர் முயன்ற போது, அதைத் தடுத்துக்கேட்ட அன்வர்தீனை அஜீஸ் என்னும் பெயருடைய அந்நபர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். சம்பவமறிந்ததும், அஜீஸ் உடைய தந்தை தன் மகன் செய்த குற்றத்தை உணர்ந்து மகனேயானாலும் காவல்துறையில் ஒப்படைத்துப் பாராட்டு பெற்றார். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதால் சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி கொலைக்குக் கொலை என்கிற வகையில் தண்டனை அமையும். இந்நிலையில், கொலையாளியான அஜீஸுடைய குடும்பத்தவர், பரிதாபமாகப் பலியான அன்வர்தீன் குடும்பத்தவரை அணுகி, இரத்தப்பணம் பெற்றுக்கொண்டு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். சவூதி சட்டப்படி பாதிக்கப்பட்டோர் மன்னித்தாலே தவிர, தண்டனை உறுதி என்பதால் இவ்வாறு கொலையாளி அஜீஸின் குடும்பத்தவர் கோரிக்கை வைத்தனர். ஆனால், கொலையாளியை மன்னிக்க அன்வர்தீன் குடும்பம் மறுத்துவிட்டது. தமிழக வார இதழ் ஒன்று தெரிவித்துள்ள தகவல் படி சவூதி காவல்துறை 'கொலையாளியை மன்னிக்கிறீர்களா?" என்று கொலையான அன்வர்தீனின் குடும்பத்தவரை வினவியபோது , ""இல்லை... பணம் வேண்டாம். கொலையாளிக்குத் தகுந்த தண்டனை கொடுங்கள்'' என்று கூறியதாகத் தெரிய வருகிறது. சவூதியின் இஸ்லாமிய சட்டப்படி, பாதிப்புக்குள்ளானோர் மன்னிக்காதபோது,வேறு யாரும் மன்னிக்கவோ, தண்டனையைக் குறைக்கவோ வழியில்லை என்பது குறிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...