ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

சுன்னாவின் ஒளியில் பெருநாள்



அரபு மொழியில் பெருநாள் என்பதற்கு ‘ஈத்’ என்று சொல்லப்படும். உண்மையில் ஈத் என்றால் திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும். பெருநாள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, மதீனாவாசிகள் ஜாஹிலிய்யாக் கால இரு பெருநாட்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதற்குப்பதிலாக அவற்றை விடச்சிறந்த இரண்டு பெருநாட்களை அல்லாஹ் உங்க ளுக்குத் தந்துள்ளான். அவை & ஒன்று அறுத்துப் பலியிடும் நாளாகிய (ஈதுல் அழ்ஹா), மற்றையது ஈதுல் பித்ர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸஈ

இந்த வகையில் ரமலான் முழுக்க நோன்பு நோற்ற பின் ஷவ்வால் மாதம் முதல்பிறை பார்த்ததும் கொண் டாடப்படும் பெருநாள் ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாளாகும்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க தனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பலியிட முன் வந்ததை நினைவு கூறும் விதமாக துல்ஹஜ் மாதம் பிறை 10ல் கொண்டாடப்படும் பெருநாளே ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளாகும்.

சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி வெள்ளிக் கிழமை தினமும் ஒரு பெருநாளாகும். இவை தவிர வேறு எந்தப் பெருநாட்களும் இஸ்லாத்தில் இல்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்.

பெருநாளைக் கொண்டாடுவது எப்படி—?

பெருநாட்களை அடையாளப்படுத்திய நபி (ஸல்) அவர்கள், அவற்றை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதற்கான வழிகளையும் காட்டியுள்ளார்கள்.

புத்தாடை அணிவது

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் சந்தையிலிருந்து பட்டாடை ஒன்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்களி டம் கொடுத்து, இதை பெருநாளைக்கும், பிரமுகர்கள் வந்தால் அணிவதற்குமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அது பட்டு என்ற காரணத்தினால் அதை வாங்க நபியவர்கள் மறுத்து விட்டார்கள். (புகாரி ஹதீஸின் சுருக்கம்)

இதிலிருந்து பெருநாளைக்குப் புத்தாடை அணிகிற வழக்கம் இருந்ததனாலேயே உமர் (ரலி) அவ்வாறு கூறினார்கள் என்பதை உணர முடிகிறது.

ஸஹாபாக்கள் புத்தாடைகளை அல்லது அவர்களிடம் உள்ள ஆடைகளில் சிறந்ததைப் பெருநாள் தினங்களில் அணிந்திருப்பதை ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

திறந்த வெளியில் (திடலில்) பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 2ம் ஆண்டு நோன்பு கடமையாக்கப்பட்டதிலிருந்து பெருநாள் தொழுகையையும் தொழுது வந்துள்ளார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மஸ்ஜிதில் தொழுததற்கான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் கிடையாது. மஸ்ஜிதுந் நபவியில் ஒரு தொழுகை தொழுவது (மஸ்ஜிதுல் ஹராம் தவிர) ஏனைய பள்ளிகளில் 1000 தொழுகை தொழுவதை விடவும் சிறந்ததாக இருந்தபோதிலும் நபியவர்கள் பெருநாள் தொழுகையைத் திடலிலேதான் தொழுது வந்தார்கள். (புகாரி)

ஓர் ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் ஓர் இடத்தில் ஒன்று கூடி பெருநாளைக் கொண்டாடுவது பெருநாள் தினத்தை மகிழ்ச்சி மிக்கதாக ஆக்குவதற்கு சிறந்த வழி என்பதால் கூட நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.

மழை அல்லது திறந்தவெளி இல்லாமை போன்ற சந்தர்ப்பங்களில் பள்ளிகளில் தொழுவதில் எவ்வித குற்றமுமில்லை என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பெருநாள் தொழுகை நடைபெறும் திடலுக்கு மாதவிடாயுள்ள பெண்களும் வருகை தந்து தொழாது அங்கு அமர்ந்திருப்பதும் நபிவழியாகும். (புகாரி, முஸ்லிம்)

நோன்புப் பெருநாள் தொழுகைக்காகச் செல்லும் முன் சாப்பிடல்

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் பேரீத்தம் பழங்கள் சிலவற்றைச் சாப்பிடாமல் (தொழுகைக்குச்) செல்ல மாட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)

எனவே, நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லுமுன் பேரீத்தம் பழங்களைச் சாப்பிடுவது சுன்னத்தாகும். பேரீத்தம் பழம் கிடைக்காதபோது வேறு எதையாவது சாப்பிட்டு விட்டுச் செல்வதே சிறந்தது.

தக்பீர் சொல்வது

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று தமது வீட்டை விட்டுப் புறப்படுவதிலிருந்து தொழும் இடம் வந்து தொழுகையை முடிக்கும் வரை தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்
ஆதார நூல்: முஸன்னப் இப்னு அபீ ஷைபா

ஆண்கள் சப்தமாகவும், பெண்கள் மெதுவாகவும் தக்பீர் சொல்ல வேண்டும். கூட்டமாக தக்பீர் சொல்வது நபிவழிக்கு முரணான ஒரு செயலாகும்.

தக்பீர் எவ்வாறு அமைய வேண்டுமென்பது பற்றி எவ்வித நபிமொழிகளும் காணப்படவில்லை. தக்பீர் என்றால் பொதுவாக ‘அல்லாஹ§ அக்பர்’ என்று கூறுவதையே குறிக்கும். எனவே ‘அல்லாஹ§ அக்பர்’ என்று கூறிக் கொண்டால் போதுமானது.

இருப்பினும், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் “அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ§ வல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர் வலில்லாஹில் ஹம்து” என்று தக்பீர் கூறியுள்ளார்கள். (ஆதார நு£ல்கள்: தாரகுத்னீ, இப்னு அபீ ஷைபா. பார்க்க: இர்வாஉல் கலீல் (6501))

மேலும் ஸல்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பர், அல்லாஹ§ அக்பரு கபீரா” என்று (தக்பீர்) கூறி இருக்கிறார்கள் (ஆதார நு£ல்கள்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக், பைஹகீ)

இவற்றிலிருந்து ஒருவர் அல்லாஹ§ அக்பர் என்பதை விட அதிகமாக மேற்கூறப்பட்டவாறு கூறினால் அதில் தவறில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தொழுகைக்காக நடந்து செல்வது

பெரும்பாலும் நபியவர்கள் பெருநாள் தொழுகைக்கு நடந்தே சென்றுள்ளனர். (திர்மிதி, இப்னு மாஜா)

தொழுகை நடைபெறும் இடம் து£ரத்தில் இருப்பின் அங்கு வாகனங்களில் செல்வதில் எந்தத் தடையும் இல்லை.

செல்லும்போது ஒரு வழியில் சென்று, திரும்பும்போது வேறு வழியில் திரும்புவது நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையிலிருந்து (திரும்பும் போது சென்ற வழியாக இல்லாமல்) வேறு வழியாகத் திரும்புவார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

பெருநாளன்று குளிப்பது

பெருநாள் தினத்தில் குளிப்பது நபி வழி என்பதை அறிவிக்கக்கூடிய எந்த வித ஹதீஸ்களும் காணப்படவில்லை. இருந்தும் இப்னு உமர் (ரலி) போன்ற நபித் தோழர்கள் குளித்துள்ளதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் காணப்படுகின்றன.

பெருநாள் தொழுகையின் முறை

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக்களாகும். அதற்கு முன்னரோ, பின்னரோ எவ்வித தொழுகையும் கிடையாது. மேலும் பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தன்று 2 ரக்அத்துக்கள் தொழுதார்கள். அதற்கு முன்னரோ, பின்னரோ எதையும் தொழவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி)

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு முறையல்ல, இரு முறையல்ல (பல முறை) பாங்கும், இகாமத்தும் இல்லாமல் (பெருநாள் தொழுகையைத்) தொழுதுள்ளேன் என்று ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

‘அஸ்ஸலாது ஜாமிஆ’ போன்ற வார்த்தைகளைக் கூறுவதற்கும் ஆதாரங்கள் கிடையாது. எனவே நேரடியாகத் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.

முதல் ரக்அத்தில் ஆரம்ப தக்பீர் கட்டிய பின்பு 7 தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின் தக்பீர் இல்லாமல் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். (அபூதாவூத் இப்னு மாஜா)

ஒவ்வொரு தக்பீருக்கும் இடையில் கைகளை உயர்த்திக் கட்டுவதற்கு ஆதாரங்கள் கிடையாது. மேலும் அவற்றுக்கு இடையில் கூறுவதற்கு என்று எந்தவித வாசகங்களும் ஹதீஸ்களில் வரவில்லை. இவை தவிர ஏனைய செயல்கள் மற்ற தொழுகைகள் போன்றே அமையும்.

தொழுகை முடிந்த பின்னர் ஒரு குத்பாப் பிரசங்கம் இடம்பெறும். அதற்கு மிம்பர் அவசியமில்லை. மேலும் அந்த குத்பா ‘ஹம்து ஸலவாத்தை’க் கொண்டே ஆரம்பிக்கப்பட வேண்டும். தக்பீரைக் கொண்டு ஆரம்பிப்பதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது.

குத்பாவைக் கேட்பதே சிறந்ததாகும். கேட்க விரும்பாதோர் கலைந்து செல்வதற்கு அனுமதியுள்ளது.
நிச்சயமாக நாங்கள் குத்பா ஓதுகிறோம். அதைக் கேட்பதற்காக இருக்க விரும்புவோர் இருக்கலாம். செல்ல விரும்புவோர் செல்லலாம் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, ஹாகிம்)

பெருநாள் தொழுகை வெள்ளிக் கிழமை தினத்தில் வந்தால் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியவர் விரும்பினால் ஜும்ஆ தொழுகைக்கு வரலாம். விரும்பினால் வராமல் இருக்கலாம்.

இன்றைய நாளில் இரு பெருநாட்கள் வந்துவிட்டன. யார் விரும்புகிறாரோ அவருக்கு பெருநாள் தொழுகை ஜும்ஆவுக்குப் போதுமானதாகும். இன்ஷா அல்லாஹ் நாம் இரண்டையும் தொழுவோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹ§ரைரா (ரலி), நு£ல்: அபூதாவூத், இப்னுமாஜா

பெருநாள் தினத்தில் தவிர்க்க வேண்டியவை

பெருநாள் மகிழ்ச்சியான தினமாகும். இஸ்லாம் அனுமதித்த முறையில் மகிழச்சியாகவும், சந்தோஷமாகவும் பெருநாளைக் கொண்டாட வேண்டும் அந்நாளிலும் இஸ்லாமிய வரையறைகளைத் தாண்டுவது ஹராமாகும். இந்த வகையில் சிலர் மார்க்கத்தின் பெயரால் அன்றைய தினம் அடக்கஸ்தலங்களை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். பொதுவாக மண்ணறைகளைத் தரிசிப் பது ஆர்வமூட்டப்பட்டிருந்தாலும், பெருநாள் தினங்களில் குறிப்பாக அவ்வாறு செய்வது ஆதாரமற்றதாகக் காணப்படுகிறது.

நல்லமல்களைத் தொடர்ந்து, நல்லமல்கள் செய்வது அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு அடையாளமாகும். இருந்தும் பெரும்பாலான சகோதரர்கள் ரமலான் முழுக்க நோன்பு நோற்று, இரவு வணக்கங்களில் ஈடுபட்டு பெருநாள் தினத்தில் இஸ்லாம் தடை செய்த சினிமா, சூதாட்டம் மற்றும் வீணான கேளிக்கைகள் போன்றவற்றில் நேரங்களை விரையமாக்குவது தடுக்கப்பட வேண்டிய செயல்களாகும்.

சிலர் வீண் விரயங்களில் ஈடுபடுகின்றனர். பெருநாள் தினமாக இருந்தாலும் அல்லது வேறு தினங்களாக இருந்தாலும் வீண் விரயம் செய்வது ஹராமாகும். வீண்விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் தோழர்களாவர்.

இன்னும் சிலர் பெருநாள் தினங்களில் பர்ழான தொழு கைகள் விஷயத்தில் பொடுபோக்காகக் காணப்படுவர். எந்தச் சந்தர்ப்பதிலும் தொழுகையை விடுவதற்கோ, உரிய நேரத்தை விட்டு பிற்படுத்துவதற்கோ மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

எனவே, ரமலானில் நோன்பு நோற்று இன்ன பிற வணக்கங்களில் ஈடுபட்ட நாம் நமது பெருநாளையும் இஸ்லாமிய வரையறைகளுக்குள் சுன்னாவின் ஒளியில் அமைத்துக் கொள்வோமாக!

- அபூ அதீ ஸலஃபீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...