ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்!

கேள்வி : இஸ்லாமிய மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக்கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும். மு. ஷேக்மைதீன், தென்காசி.

பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும். கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.

வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.

ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை - தீமைகளை ஏக இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள்' என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.

'ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டதால், அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்!' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்? நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.

சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங்கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.

வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.

வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். உலகில் தான் முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்லிம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.

31. இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?
கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான் முறையே மாமனார், மருமகன், பேரன் என பொறுப்பேற்க முடிந்ததா? இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவது. விளக்கம் தரவும். -கா.ஷபீயுல்லாஹ், ஏரிப்புதூர்

பதில்: ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு வாரிசுரிமை ஒரு காரணமாக ஆகாது. எந்தப் பணியையும் அதற்குத் தகுதி உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனார் என்ற அடிப்படையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நிச்சயமாக அப்பதவி வழங்கப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அப்பதவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்கரிடம் வழங்கிச் செல்லவில்லை. யாரையும் நியமனம் செய்யாமல் தான் மரணித்தார்கள்.

நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பின் யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பதில் நபித்தோழர்களிடையே மிகப்பெரிய கருத்து மோதல் எல்லாம் ஏற்பட்டது. அபூபக்கருக்கும் உள்ளூர் வாசிகளின் தலைவரான ஸஃது அவர்களுக்கும் கடும் போட்டியும் நிலவியது.

மக்களின் அதிகப்படியான ஆதரவின் காரணமாக அபூபக்கர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருந்ததை மக்கள் கண்டதால் தான் பொறுப்பை ஒப்படைத்தனர்.

ஒரு மனிதனின் சொத்துக்களை அவனது வாரிசுகள் அடைவார்கள் என்று உலகுக்குச் சட்டம் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதற்கும் தனது குடும்பத்தார் வாரிசு இல்லை; அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்கள்.

தமக்கு உடமையான சொத்துக்களையே அரசுக் கருவூலத்தில் சேர்க்குமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமக்கு உடமையாக இல்லாததைத் தமது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பார்களா?

திருக்குர்ஆனின் போதனையும், நபிகள் நாயகத்தின் அறிவுரைகளும் குலம், கோத்திரத்தின் அடிப்படையில் ஒருவரும் சிறப்படைய முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றன.

அதே சமயத்தில் ஒரு ஆட்சித் தலைவரின் வாரிசுக்கு அதற்கான தகுதி இருந்து அந்தத் தகுதியின் காரணமாக அப்பதவியைப் பெற்றால் அதை இஸ்லாம் எதிர்க்காது என்று கூறலாம். இதனால் தான் அலீ (ரலி) அவர்களுக்குப் பின் அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களிடம் மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...