புதன், ஜூலை 04, 2012

அடிபட்ட மிருகங்கள் ஆகுமானவையா?



கேள்வி : உண்பதற்கு ஆகுமாக்கப்பட்ட ஒட்டகம்/ஆடு/மாடு/பறவை போன்றவை விபத்திலோ வேறு காரணங்களினாலோ அடிபட்டிருந்தால் அவற்றை இறப்பதற்கு முன்னர் ஹலாலான முறையில் அறுத்துச் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

- சகோதரர் ஷாஃபி, மின்னஞ்சல் வழியாக



பதில்: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் ...

அல்லாஹ் நமக்கு உண்ண அனுமதிக்கும் விலங்குகளில்/பறவைகளில் மூன்று அம்சங்கள் ஒன்றோடொன்று கலந்திருக்க வேண்டும்.
1. அனுமதிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
2. உயிரோடிருக்க வேண்டும்.
3. அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டவையாக இருக்க வேண்டும்.

இவற்றை விளக்கும் இறைவசனம்:
"(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாத பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டது, கழுத்து நெறித்துச் செத்தது, அடிபட்டுச் செத்தது, கீழே விழுந்து செத்தது, கொம்பால் முட்டப்பட்டுச் செத்தது, (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தது ஆகியவை உங்கள் மீது ஹராமாக்கப்பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்ட விலங்கு/பறவைகளில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர ..." (5:3).

மேற்கண்ட வசனம், உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளேயானாலும் அவை விபத்தினால் இறந்து விடுமாயின் அவற்றின் இறைச்சியை உண்ணக்கூடாது என நேரடியாகத் தடுக்கிறது. ஆகவே, உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகளுள்
1. தானாகச் செத்தவை
2. விபத்தினால் செத்தவை
3. உயிரோடிருந்த நிலையில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதவை
ஆகியவற்றை உண்பதற்கு அனுமதில்லை என்று விளங்குகிறோம்.

உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் விபத்தினால் காயமடைந்த நிலையில் இறக்கும் தருவாயில் இருக்குமாயின் அவற்றை முறைப்படி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உண்ணலாம் என்பதற்கு நபிமொழிகளில் சான்று உள்ளது!

'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். "நபி(ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்கும்வரை சாப்பிடாதீர்கள்!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதைச் சாப்பிடுமாறு கூறினார்கள்.
- அறிவிப்பாளர் கஅபு இப்னு மாலிக் (ரலி) (நூல்கள் - புகாரி 2304, 5502; இப்னுமாஜா; அஹ்மத்; முவத்தா மாலிக்).

கேள்வியில் கேட்டுள்ளபடி செத்துவிடும் என்கிற நிலையிலுள்ள விலங்குகளை/பறவைகளை அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து, அவற்றைப் பயனுள்ள, ஹலால் உணவாக ஆக்கிக்கொள்ளலாம்.

மேலும், வேட்டைக்குப் பழக்கப்படுத்தப்பட்ட வேட்டைநாய்/சிறுத்தை போன்ற விலங்குகளும் ராஜாளி போன்ற பறவைகளும் வேட்டைக்கு அனுப்பப்படும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்பட்டு, அவை நமக்காக வேட்டையாடிய ஹலாலான விலங்குகள்/பறவைகள் உயிரோடிருந்தாலும் செத்துவிட்டாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி உண்பதற்கு ஆகுமானவையாகும் (இறைவசனம் 5:4இன் சுருக்கக் கருத்து). இதுவே இஸ்லாம்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...