திங்கள், ஜூலை 16, 2012

ரமலானுக்கு தயாராவோம்!!!


மனித சமுதாயத்தை சீர்திருத்த வந்த திருமறைக் குர்ஆன் இறங்கிய ரமலான் மாதம் நெருங்கி விட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்காக இப்பொழுதே நாம் நம்மை தயார் படுத்தி இருப்போம். அதில் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கு தயார் படுத்திக் கொண்டோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நம்மை சீர்திருத்திக் கொள்வதற்கான பயிற்சியை தொடங்குவோமாக !

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன்-2:183

ருசியுடன் உண்டு புசித்துப் பழகிய நாவை ரமலானுடைய நாளின் பாதிப் பகுதியில் உண்ணாமல் இருக்கப் பழக்கி இருப்போம். பொய் பேசாமல் இருக்கப் பழக்கினோமா ?
இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் நாவை ரமலானில் பொய் பேசாமல் இருக்கப் பழக்குவோமாக !

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1903.

ஸஹர் மற்றும் இஃப்தாருக்கான உணவுகளை வகை வகையாக செய்து உண்டு மகிழ்வதற்கு தேவையான பொருள்களை இப்பொழுதே வாங்கி சேமிக்கத் தொடங்கி இருப்போம். ஆனால் அதில் உறவினர்களில் உள்ள ஏழை எளியோருக்கும்> நமது அருகில் வசிக்கும் ஏழை எளியோருக்கும் சிறிதை கொடுத்து அவர்களும் நம்மைப் போல் ஸஹர் மற்றும் இஃப்தாரில் உண்டு மகிழ்வதற்கும் சேர்த்து வாங்கினோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் அவர்களுக்கும் தாராள மனதுடன் சிறிதை சேர்த்து வாங்குவதற்கு எண்ணம் கொள்வோமாக ! இப்பொழுதே அந்த எண்ணம் வந்தால் தான் ரமலானில் வாரி வழங்கும் எண்ணம் உருவாகும்.

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1902.

இரவிலும்> பகலிலும் நேரம் தவறாமல் உறங்கிப் பழகிய கண்களை ரமலான் மாதத்தில் மாற்றி உறங்குவதற்கும் குறைத்து உறங்குவதற்கும் இப்பொழுதே பழக்கி இருப்போம். ஆனால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கினோமா ?

இல்லை என்றால் இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் சினிமா பார்க்காமல் இருப்பதற்கு பழக்கிக் கொள்வோமாக! (இஃப்தாரிலிருந்து ஸஹர் வரை பலருடைய வீட்டில் (ரூமில்) சினிமா ஒடவே செய்கிறது சிலருடைய வீட்டில் (ரூமில்) நோன்பு நேரத்திலும் கூட சினிமா ஓடுவதை அறிந்து வருகிறோம்.)

நோன்பை நோற்றால் அது விரசமான சிந்தனையை தடுக்கும் என்று சத்திய மார்க்கத்தின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருப்பதால் நோன்பு காலங்களிலும் விரசத்தைத் தூண்டும் சினிமாவை பார்க்கலாமா ?

உங்களில்> திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 1905.

ரமலானுக்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் ரமலானில் பொய் பேசாமால், சினிமா பார்க்காமல், இருக்கவும் வாரி வழங்கும் எண்ணத்தை எற்படுத்தும் பயிற்சியை தொடங்குவோமாக !

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...