திங்கள், பிப்ரவரி 27, 2012

கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும், இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.
நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம்.

தாமதமான திருமணம் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.
காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.
இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலுழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணையதள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை... அப்பவே கல்யாணம்’னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!
இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்
அல்லாஹுதஆலா உலகில் அனைத்து படைப்புகளையும் இரட்டை இரட்டையாக படைத்துள்ளான். அதே போன்று ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்களை திருமணம் என்ற அமைப்பில் ஜோடி சேர்த்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழ வைக்கின்றான். அந்த திருமணங்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் நடத்தப்பட வேண்டும் என்று கட்டளையும் இடுகின்றான். அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளை பிரகாரம் செய்யப்படும் திருமணங்களுக்கு ரஹ்மத்தும், பரக்கத்தும் நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால் இன்று எமது முஸ்லிம் சமுதாயத்தில் திருமணம் என்ற விடயத்தை பார்க்கும் போது எல்லாம் தலைகீழாக உள்ளதை காண்கின்றோம். பெரும்பாலான முஸ்லிம்கள் அதாவது ஆலிம்கள் முதல் ஆபிதுகள் வரை, அறிஞர்கள் முதல் அறிவிலிகள் வரை, பாமரர்கள் முதல் பாவிகள் வரை அனைவரிடம் திருமணம் என்ற இந்த ஸுன்னத்தான அமலை பார்க்கும் போது அல்லாஹ்வினதும், ரஸூலினதும் திருப்பொருத்தத்தை பெறுவதற்கு பதிலாக இப்லீசினதும் யூத நஸாராக்களினதும் பொருத்தத்தை பெறக்கூடியதையே காணக்கூடியதாக உள்ளது.
முதலில் திருமணம் செய்யப் போகும் மணமகன், மணமகள் அல்லது மணமக்களின் பெற்றோர்கள் இவர்களின் எண்ணங்களை (நிய்யத்தை) பார்க்கும் போது, உலக ஆசையும் உலக ஆதாயமுமே. முக்கிய நோக்கமாக உள்ளது.

ஆண் அல்லது மணமகனின் நோக்கம் :
இன்று சில ஆண்களுடைய நோக்கம் செல்வ செழிப்புள்ள, காணி, சீதனம், சொத்து, அழகுள்ள பெண்களை திருமணம் செய்யவேண்டும். அது மட்டுமல்ல பெண் வீட்டாரிடம் கடை அல்லது வாகனம், போன்றவைகளை கேட்டு பெற வேண்டும். மேலும் கடை அல்லது வீடு, காணி போன்றவைகளை தன் பெயரில் எழுதி கேட்க வேண்டும். இது போன்ற ஹுப்புத் துன்யாவின் எண்ணத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் எதை விரும்ப சொன்னார்களோ அதை விட்டு விட்டு இப்லீஸ் எதை விரும்புகிறானோ அதையே இவர்கள் விரும்புகிறார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்கத்திற்காக)
ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
(அறிவிப்பவர்: அபூஹரைரா ரலியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 5090)

ஒரு பெண்ணிடம் எதிர்ப்பார்க்க வேண்டியது மார்க்க பக்திதான், மார்க்க பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்வோருக்கு இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி கிடைக்கும். இதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வெற்றிக்கொள் என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வையும், ரஸூலையும் நேசிக்கக் கூடிய மார்க்க பக்தியுள்ள பெண்ணிடம் நற்குணம் இருக்கும், தக்வா இருக்கும், நற்பண்புகள் இருக்கும். அதனால்தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மார்க்கப்பற்றுள்ள பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி கூறினார்கள்

மேலும் அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் :
''பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்ச்சியாக நீங்கள் கொடுத்துவிடுங்கள்.''
(அல் குர்ஆன் 4:4) என்று கூறுகின்றான். ஆனால் இன்று சிலர் மகிழ்ச்சியாக மஹரை கொடுப்பதற்கு பதிலாக மகிழ்ச்சியாக சீதனம் வாங்குவதையே காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வினதும், ரஸூலினதும் கட்டளைக்கு மாறு செய்து விட்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் முஃமின்கள் என்றும் கூறி திரிவதை பார்க்கும் போது வேடிக்கையாகவும், கவலையாகவும் உள்ளது.

ஆதலால் உங்கள் வாழ்க்கையை அல்லாஹ், ரஸூலுக்காக என்ற நிலைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மார்க்கத்துக்கு முரணான செயலை யார் செய்ய சொன்னாலும் செய்ய வேண்டாம். அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் பயந்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் மார்க்கத்துக்கு முரணான செயலை செய்ய சொன்னால், அவர்களுக்கு நீங்கள் பணிவான முறையில் அமைதியான முறையில் மார்க்கத்தை விளங்கப்படுத்துங்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் அவர்களுக்கும், எங்களுக்கும் ஆழமான அறிவையும், தெளிவான சிந்தனையையும் தருவானாக!
இன்று இஸ்லாத்தில் ஏழைகள் அதிகரிப்பதற்கும், விதவைகள் அதிகரிப்பதற்கும் காரணம் என்னவென்று பார்த்தால் சமநிலை பேணப்படாதது தான். பணக்கார ஆண் ஏழை பெண்ணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர்களாக ஆகலாம் அதைப்போன்று, பணக்கார பெண் ஏழை ஆணை திருமணம் செய்தால் இருவரும் பணக்காரர் ஆகி சமநிலை பேணப்படும். ஆனால் இன்று பணக்காரன் பணக்காரனை தேடி போகிறான். பணம் பணத்துடன் செருக்கிறது. ஏழைகளிடம் போய் சமநிலை பேண வேண்டிய பணம் தேக்கமடைகிறது.

இன்னும் சொல்லப்போனால் எமது முஸ்லிம்களின் பிழைகளை சுட்டிக்காட்ட போனால் புத்தகமே எழுதலாம். எமது நோக்கம் பிறரின் குறைகளை அலசி ஆராய்வதல்ல, பிறரின் குறைகளை தேடுவதல்ல மாறாக பிழைகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும், அவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான்.

2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...