அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இப்ராஹீம்(அலை) அவர்கள் நீண்ட காலம் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள் முதிர்ந்த வயது வரை அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது அதுவரை அவர்கள் குழந்தை இல்லாததுப் பற்றி எவ்வித வருத்தமும் பட வில்லை அல்லாஹ் நாடியப் பிரகாரம் நாடியவருக்கு குழந்தைகளை கொடுப்பான் நம்முடைய விஷயத்தில் அல்லாஹ்வுடைய நாட்டம் எப்படி இருக்கிறதோ அவ்வாறே நடக்கட்டும் என்று விட்டு விட்டார்கள்.
42:49. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
42:50. அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் அரும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திருமணமும் செய்திருந்தார்கள் ஆனால் இளமைப் பருவத்தில் தூக்கி கொஞ்சுவதற்கு குழந்தை இல்லை இவ்வளவுக்கும் குழந்தை பாக்கியத்தை கை வசத்தில் வைத்துள்ள அல்லாஹ்வின் உற்ற தோழராகவும் இருந்தார்கள், இறந்தோர் எவ்வாறு உயிர்ப்பிக்கப் படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக அல்லாஹ்விடம் கூறி அல்லாஹ்வும் அவர்களுக்கு அதை செய்து காட்டி அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் அளவுக்கு அல்லாஹ்வுக்கு விருப்பமான நேசராகத் திகழ்ந்தார்கள்.
2:260. ''என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!'' என்று இப்ராஹீம் வேண்டிய போது, ''நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?'' என்று (இறைவன்) கேட்டான். அதற்கவர் ''அவ்வாறல்ல! மாறாக எனது உள்ளம் அமைதியுறவே.'' என்றார். ''நான்கு பறவைகளைப் பிடிப்பீராக! அவற்றைத் துண்டு துண்டாக வெட்டி உம்மிடம் வைத்துக் கொள்வீராக! பின்னர் அவற்றில் ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைப்பீராக! பின்னர் அவற்றை அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வரும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன் என்பதை அறிந்து கொள்வீராக'' என்று (இறைவன்) கூறினான்.
அதே நேரத்தில் குழந்தைப் பாக்கியத்தை மிகவும் தாமதப்படுத்தினான். அதற்காக அல்லாஹ்வுடைய பணி செய்வதிலிருந்து அவர்கள் சோர்வடைந்தது கிடையாது. அல்லாஹ்விடமிருந்து வந்தோம் மீண்டும் அல்லாஹ்விடமே திரும்பச் செல்ல இருக்கிறோம் இடைப்பட்ட உலக வாழ்வில் அவன் விரும்பி நமக்கு தந்தது நம்மைச் சேர்ந்தது தராமல் விட்டது நமக்குரியதல்ல.
நம்மைச் சேராத ஒன்றுக்காக வருத்தப் படத் தேவை இல்லை அதற்காக அவனை வணங்குவதிலிருந்தோ, அவனது மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலிருந்தோ பின் வாங்கவும் தேவை இல்லை என்பதில் மிக உறுதியாக இருந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார்கள்.
அல்லாஹ்வை உறுதியாக நம்புவோருக்கு, அவனுடைய மார்க்கப் பணியை எடுத்துச் சொல்லும் அரும் பணியில் ஈடுபடுவோருக்கு அவர்களுடைய வாழ்வில் சில குறைகள் இருந்தால் அதை அலச்சியம் செய்து விட்டு உற்சாகமாக இயங்குவதற்கு இப்ராஹீம்(அலை) அவர்களுடைய தொய்வில்லா தஃவா பணி சிறந்த எடுத்துக் காட்டாகும்.
ஈமானின் பிறப்பிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.
இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் போது முதிர்ந்த வயதை உடையவர்களாக இருந்தார்கள்.
அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அருளப்பட்ட செய்தியை மலக்குகள் மூலம் கேட்டதும் எனக்கா ? இத்தனை வயதிலா ? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவுக்கு வயதாகி இருந்தது.
இவ்வாறு கேட்டதும் அல்லாஹ்வுடைய ஆற்றலில் நம்பிக்கை இழந்து விட்டீரா என்று மலக்குகள் கேட்க ? நானா, எனதிறைவனின் ஆற்றலின் மீதா நம்பிக்கை இழந்து விட்டேன் ? வழிகெட்டவர்களின் வரிசையில் உள்ளவன் நானல்ல, எனது இறைவனின் அருளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டவன் நான் என்று பதிலளித்தார்கள்.
15:53. ''நீர் பயப்படாதீர் ! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர்.
15:54. ''எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?'' என்று அவர் கேட்டார்.
15:55. ''உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!'' என்று அவர்கள் கூறினர்.
15:56. ''வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?'' என்று அவர் கேட்டார்.
வெறும் வயிறுடன் திரும்பியவர்களே ஏராளம்.
இன்று பார்க்கின்றோம் திருமணம், முடிந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட சில நாட்களிலேயே ரிசல்ட் பக்காவாக இருக்க வேண்டும் என்று ஆவல் கொள்கின்றனர் ரிசல்ட் எதிராக அமைந்து விட்டால் அல்லது தள்ளிக் கோண்டேப் போனால் சோர்வடைந்து விடுகின்றனர் மருத்துவர் கூட அடுத்த கட்டம் முதல் கட்டமாக அவுலியாக்களிடம் செல்கின்றனர்.
வயதாகிக் கொண்டேப் போகிறது என்னை மாதிரியே குழந்தை இல்லாமல் இருந்த இன்னாருக்கு இன்ன அவுலியாவிடம் போனதும் குழந்தை உண்டாகி விட்டது அதனால் நானும் தர்ஹாவுக்கு போனேன் என்றக் காரணமும் சொல்வர்.
இன்னாருக்கு கிடைத்தது போன்று தனக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தர்ஹாவுக்குப் போய் வெறும் வயிறுடன் திரும்பியவர்களே ஏராளமானோர்
இவ்வாறு வெறும் வயிறுடன் திரும்புவதே அவுலியாக்களுக்கு ஆற்றல் கிடையாது என்பதையும் வல்ல அல்லாஹ்வே ஆற்றலுடையோன் என்பதையும் பறைசற்றுவதாக அமையப் பெற்றுள்ளதை மக்கள் உணரத் தவறுகின்றர்.
அல்லாஹ் யாருக்கு எப்பொழுது எதை நாடுகிறானோ அப்பொழுது அவ்வாறே நிறைவேற்றுவான் என்ற ஆழமான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் அல்லாஹ் மலக்குகள் மூலம் அறிவித்தபடி குழந்தையை கொடுப்பான் என்ற நம்பிக்கை உருவானது.
நல்லொழுக்கமுள்ள குழந்தை தான் சிறந்த வாரிசு.
தனக்கு பிறக்க இருக்கின்ற குழந்தையை நல்லொழுக்கமுள்ளக் குழந்தையாக தந்தருள் புரியவாயாக அல்லாஹ் ? என்ற துஆவை இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்.
37:100. என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
37:101. அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.
இன்று நம்மில் பலர் குழந்தை தங்கி விட்டது என்பதை அறிந்ததும் வானத்திற்கும், பூமிக்குமாக குதிப்பவர்கள் பிறக்க இருக்கின்ற குழந்தை நல்லொழுக்கமுள்ள குழந்தையாக பிறக்க வேண்டும் என்று குழந்தை பாக்கியத்தைக் கொடுத்த கொடையாளனிடம் கேட்க மறந்து விடுகின்றனர்.
சுகப் பிரசவமாக பிறக்க வேண்டும் என்று மனைவி நலம் கருதி கேட்பவர்கள், ஆண் குழந்தையாக வேண்டும், அல்லது பெண் குழந்தையாக வேண்டும் என்று பாலினத்தில் கவனம் செலுத்துபவர்கள் ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவதில்லை.
விதையை விதைத்ததும் அவ்விதையின் பயிர் எவ்வாறு வளர்ந்து தழைத்தோங்க வேண்டும் என்பதில் இரவு பகலாக கவனம் செலுத்துபவன் விவசாயி, கவனம் செலுத்த மறந்தால் விரும்பியவாறு பயிர் வளராது. வேர் விடாமல் கூட கருகி விடலாம்.
குழந்தை கருவில் தங்கி விட்டால் அக்குழந்தை குண நலம் மிக்க குழந்தையாக தந்தருள் புரிவாயாக இறைவா ! என்ற துஆவை கேட்க வேண்டும். இது இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் பெறும் படிப்பினை.
இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட மாதிரியே இஸ்மாயில் (அலை) அவர்களை குணத்தின் குன்றாக, பொருமையின் பொக்கிஷமாக அருளினான் அளவற்ற அருளாலன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.