வியாழன், அக்டோபர் 11, 2012

தீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்-பாகம் 2


அக்பரின் அரசாங்க கல்விக் கொள்கையும் இஸ்லாமிய மார்க்க கல்வியை ஒழிக்கும் நோக்கோடு அமைக்கப்பட்டது.அரபு மொழியில் இஸ்லாமியச் சட்டம்,ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதாரவளிக்கப்படவில்லை. இக்கலைகளை கற்றோர் செல்லக்காசுகளாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர்.அதேவேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல்,கணிதம்,வரலாறு போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது.மொழியை பொறுத்தவரை சமஸ்கிருதப்படுத்திய ஹிந்தியை வளர்ப்பதற்குப் பேராவல் காட்டப்பட்டது.அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மார்க்க கல்விகூடங்கள் கைவிடப்பட்டன.சரியான மார்க்க அறிஞர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.


பொதுமக்களின் நிலை இதைவிட மோசமாயிற்று இந்தியாவிலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களுக்கு இஸ்லாமிய போதனைகளிலும் பண்பாட்டிலும் போதிய பயிற்சி அளிக்கப் பட்டிருக்கவில்லை. தூய இஸ்லாத்தைப் பற்றி தெளிவு இல்லாதவர்களாக மாறி ஆதலால் அவர்களின் நடைமுறை வாழ்க்கை எல்லா விஷயங்களிலும் மார்க்கத்திற்கு முரண்பட்டதாகவே இருந்தது. இந்திய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக தோற்றத்தில் திகழ்ந்த ஈரானிலிருந்தும் குராஸானிலிருந்தும் குடியேறியவர்கள் ஒழுக்க,சமூகச் சீர்கேடுகளைத் தம்மோடு கொண்டு வந்திருந்தனர்.
இவ்விருவகை முஸ்லிம்களின் சமூக வாழ்க்கை, ஒன்றோடொன்று இணையாத இருவகைக் காலச்சாரங்களைக் கொண்ட ஒரு புதுமையான கலவையாக அமைந்தது.அதனையே அவர்கள் ‘இஸ்லாமியக் கலாச்சாரம்’ என மொழிந்தனர். அதில் சிலைவணக்கம்,இன வர்க்க பேதங்கள்,மூடநம்பிக்கைகள் போன்றவையும் அனைத்துக்கும் மகுடமாக புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரியைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியிருந்தன.உலக ஆசைவயப்பட்ட ஆலிம்களும் சமய குருமாரும் அவற்றைப் பின்பற்றுவோராகவும் அவற்றின் மதகுருக்காளாகவும் மாறினர். மக்கள் தம் காணிக்கைகளை அவர்கள்முன் சமர்பிக்க,அவர்களோ ஆழ்ந்த மதப்பிரிவினை வேறுபாட்டுணர்வோடு அவற்றை ஆசிர்வதித்தனர்.


தனிமனித வாழ்க்கை வேறு,பொது வாழ்க்கை வேறாகத் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக சட்டமுறைக்கும் சட்ட முரணுக்கும் மார்க்கம் விதித்துள்ள எல்லைகள் நிராகரிக்கப்பட்டன; மார்க்கக் கட்டளைகள் நடைமுறையில் மீறப்பட்டன;வாழ்க்கையின் எல்லா விஷயங்களும் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. விதித்துரைக்கப்பட்ட இஸ்லாமியக் கட்டளைகளை மறுத்துரைப்பதும் மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயங்களுக்கு பூரண சட்ட அங்கீகாரம் அளிப்பதும் சர்வசாதாரண வழக்கமாகிப் போனது.

சூஃபித்துவ அத்வைத அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சூழலுக்கு உடனே இரையாயினர் ஏனெனில் அவர்கள் தத்துவரீதியாக சூஃபிக் கொள்கையின் போதையூட்டும் செல்வாக்குக்கு இரையாகியிருந்ததோடு அக்கொள்கை பலதெய்வ வழிபாட்டுக்கு அளித்த விளக்கமானது வாழ்க்கை மற்றும் யதார்த்த நிலை பற்றிய அவர்களின் உணர்வையும் மறக்கச் செய்திருந்தது.

சூஃபிகள் மஸ்த் (மஸ்த் என்ற பாரசீக சொல்லுக்கு போதை என்று பொருள்) தில் தன் நிலைமறந்து இருந்தபோது. மார்க்க அறிஞர் அன்றைய காலகட்ட புரட்சியாளர்‘ஷேக் அஹமத் ஸிர்ஹிந்த்’அவர்கள் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் (பிறப்பு: ஹி.975(கி.பி.1563),இறப்பு: ஹி. 1034 (கி.பி 1624) பிறந்தார்கள்.அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்கள் மத்தியிலேயே வளர்ந்தார்.அவர் தம்மைச் சூழ்ந்து வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்தச் சக்தியற்றவராக இருந்தபோதும் ஈமானில் உறுதியானவராகவும் செயலில் சிறந்தவராகவும் விளங்கினார்.அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத் தூண்டிக் கொண்டிருந்தார்.

ஷேக் அஹமத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார் அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகேளுக்கு முற்றுப்புள்ளியிட்டு ஷரீஅத்தை,மார்க்கத்தை மேலோங்கச் செய்ய மனவுறுதியோடு எதிர்த்து நிற்க முன்வந்த ஒரே மனிதர் ஷேக் அஹ்மத் அவர்கள்தான்.அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து உண்மையான சமயநெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அக்கால தீய போக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப் போராடியதோடு ஆட்சியாளர்கள் விரும்பாத மார்க்கச் சட்டங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அரசாங்கம் முழு சக்தியையும் திரட்டி அவரை அடக்கியொடுக்க முயன்று சிறையிலும் தள்ளியது.இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.அக்பரின் இறப்புக்கு பிறகு அவரின் மகன் ஜஹாங்கீருக்கு அஹமத் ஸிஹிந்த் அவர்கள் தரையில் தலைசாய்த்து வணக்கம் செய்ய மறுத்தார் என்பதற்காக அவரைக் குவாலியர் கோட்டையில் சிறையிலிட்ட அதே ஜஹாங்கீர் ஷேக் அஹ்மத் அவர்களின் மார்க்க விளக்கத்தின் பயனாக அவரின் மாணவரானர். தம் புதல்வர் குர்ரத்தையும் மார்க்க கல்வி கற்பதற்காக ஷேக் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தப் புதல்வர் தான் பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் முடிசூட்டப்பட்டார்.

இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடத்திய அரசாங்கத்தின் மனப்பான்மை இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக் கோட்பாடுகளும் சட்டவிதிகளும் கொண்ட அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற மதம் மறுபடியும் எழ முடியாதவாறு முடக்கப்பட்டது. இஸ்லாமியக் கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும் விலக்குகளும் தாமகவே ரத்தாகிச் செல்லுபடியாகாதவையாகி விட்டன என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி முறை முடியாட்சியாகவே இருந்ததெனினும் சமயக்கலைகளையும் ஷரீயத் சட்டங்களையும் பொறுத்தவரை அரசாங்கத்தின் மனப்பன்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

ஷேக் அஹ்மத் அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம்,முற்றாக ‘ஜாஹிலியத்தின்’(அறியாமையின்) கைகளுக்கு மறுவதை தடுத்தது மட்டுமின்றி,ஏழாம் நூற்றாண்டிலேயே இந்திய நாட்டில் இஸ்லாத்திற்கு எதிராக கிளம்பிய இயக்கத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளியிட்டார்.

அதைவிட மிகப்பெரிய சாதனை ‘அவ்ரங்கசீப்’ எனும் அரசக் குடும்பத்து மாணவனை உருவாக்கி விட்டு சென்றார்.ஷரீஅத்தை,மார்க்கத்தை ஒழித்துக்கட்டும் செயலில் ஈடுபட்டவருமான அக்பரின் கொள்ளுப் பேரரான ‘அவ்ரங்கசீப்’ இஸ்லாத்தின் பாதுகாவலர் ஆனார். (முற்றும்)
From http://www.valaiyugam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...