திங்கள், ஜூன் 11, 2012

இசையைப் பற்றியும் பாடல் பற்றியும் இஸ்லாம்


5162. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பகுதி சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.102

952. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஆஸ்(எனும் பழமையான போர்) பற்றி அன்ஸார்கள் புனைந்துள்ளவற்றை அன்ஸாரிகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் என்முன்னே பாடிக் கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) வந்தார்கள். அவ்விரு சிறுமியரும் பாடகிகள் அல்லர். 'அல்லாஹ்வின் தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று அபூ பக்ர்(ரலி) கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாளின் போதாகும். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நம்முடைய பெருநாளாகும்" என்று கூறினார்கள்.

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்.

2802. ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், 'நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!" என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

4106. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களின் வயிற்றின் தோலை என்னைவிட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகை(ப்பாடல்) வரிகளைப் பாடிக் கொண்டிருந்ததை கேட்டேன் (அந்தப் பாடல் இதுதான்:)
இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.
"நபி(ஸல்) அவர்கள், ('நாங்கள் இடம் தரமாட்டோம்' என்ற) கடைசி வார்த்தையை நீட்டிய படி முழக்கமிட்டார்கள்" என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.
1008. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
'இவர் வெண்மை நிறத்தவர்; இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்று அபூ தாலிப் பாடிய கவிதையை இப்னு உமர்(ரலி) எடுத்தாள்பவராக இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...