சென்ற வருடம் ஆண்கள் தினத்தை முன்னிட்டு மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கத்தினர் உரிய சட்ட பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையரிடம் பரபரப்பான மனு ஒன்றை கொடுத்தனர்.
சென்னையில், இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு முழுக்க, முழுக்க ஆண்களின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதும் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் குறிப்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஏராளமான ஆண்கள், நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சமுதாயமும், அரசியல் சட்டமும் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆண்கள் தவறு செய்தால் சட்டம் தண்டிக்கிறது. ஆனால் தவறு செய்யும் பெண்களை சட்டம் தண்டிப்பதில்லை.
ஆண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் காவல்துறையில் பிடித்து கொடுக்கிறார்கள். பெண்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டால் இரக்கப்படுகிறார்கள். மணமேடையில் ஆண் தாலி கட்ட மறுத்தால் வரதட்சணை கொடுமை சட்டத்தில் கைது செய்கிறார்கள். மணமேடையில் பெண் வேறு ஒருவனோடு ஓடி போனால் விருப்பப்படி அவள் வாழலாம் என்று சொல்கிறார்கள்.
திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்தால், மனைவியின் சாவுக்கு கணவன் காரணம் இல்லை என்பதை ஆர்.டி.ஓ. விசாரணையில் நிரூபிக்க வேண்டியதுள்ளது. அதே நேரத்தில் ஆண் இறந்தாலோ, பெண்களுக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை.
இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள் ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான் தற்கொலை செய்கிறார்கள்.
எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதை தவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும் கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில் தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. .
எனவே வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தோம்.
நாங்கள் பெண்களை மதிக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமை, ஆண்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. பெண்களை காப்பாற்றும் சட்டம், ஆண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் எங்கள் சங்கம் கேட்கிறது எனறனர்.
#உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள்....