அதிசயம்
(24)
அரசியல்
(21)
இஸ்லாம்
(80)
உடல் நலம்
(49)
எச்சரிக்கை
(16)
சமூக பார்வை
(84)
சொதப்பல்
(14)
பயனுள்ள-தகவல்
(12)
பெண்கள்
(49)
மருத்துவம்
(6)
வரலாறு
(9)
Comedy
(14)
Job opportunities
(13)
Technology
(8)
திங்கள், மார்ச் 19, 2012
தவ்ஹீத் மாப்பிள்ளை?
தவ்ஹீதின் இளைய சமுதாயமே! நீங்கள் தொழுகையில் விரலை அசைப்பதையும், தொப்பி அணியாமல் தொழுவதையும், தாடி வளர்ப்பதையும், கரண்டைக் காலுக்கு மேல் கைலி கட்டுவதையும், சமாதி வழிபாட்டை எதிர்ப்பதையும் மட்டும் தான் ஏகத்துவக் கொள்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்களா?
இதை மட்டும் நீங்கள் கடைப்பிடித்து, மாற்றுக் கொள்கையுடையவர்களிடம் தவ்ஹீத் கொள்கையை நிலைநாட்டப் போராடினால் நீங்கள் தவ்ஹீத்வாதிகள் ஆகி விடுவீர்களா? இது மட்டும் தான் தவ்ஹீத் கொள்கையா? உங்களிடம் தவ்ஹீதில் உறுதியான கொள்கை பிடிப்பு இருக்கிறதா என்பதை மக்கள் எப்படிக் கணிக்கிறார்கள் தெரியுமா?
உங்கள் வாழ்நாளில் வரும் பல விஷயங்களைக் கவனித்து அதில் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே தவ்ஹீதின் கொள்கைப் பிடிப்பின் அளவை கணக்கிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக, திருமணம் செய்வதில் ஏகத்துவவாதிகளின் கொள்கைப் பிடிப்பை அளவிடுகிறார்கள்.
ஏகத்துவத்தின் பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அவர்களின் திருமணம் என்ற நிகழ்ச்சி அழகாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.
திருமணத்தில் திருக்குர்ஆன் நபிவழியின் படி நடக்கிறார்களா? இல்லை பேருக்குத் திருமணத்தை நடத்துகிறார்களா? என்பதை மக்கள் பார்க்கிறார்கள். அவர்களின் பார்வையில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகளின் திருமணம் பெயருக்கு இஸ்லாமிய திருமணமாகக் காட்சி தருகின்றது.
ஆம்! இன்று தவ்ஹீத்வாதிகள் என்று கூறும் சிலரின் திருமணமும் அதன் பின்னணியும் அவர்களின் கொள்கைப் பிடிப்பைத் தெளிவாக அடையாளம் காட்டத் தான் செய்கிறது.
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
(அல்குர்ஆன் 4:4)
இந்த வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத்வாதிகள் சில ரூபாய்களை அல்லது சிறிதளவு தங்கத்தை மஹராக கொடுத்து. ஒரு பயான் ஒன்றையும் வைத்து விட்டு நாங்கள் நபிவழித் திருமணம் செய்து விட்டோம் என்று கூறிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் முழுமையாக நபிவழியைப் பின்பற்றி திருமணம் செய்யவில்லை.
“நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக, 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக, 3. அவளது அழகிற்காக, 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (5090)
மணமகளை மார்க்கம் உள்ளவளாகத் தேர்வு செய்ய நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தும் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் மார்க்கம் தெரிந்தவளாக உள்ள பெண்ணை விட்டுவிட்டு, அழகும் பணமும் நிறைந்த பெண்ணையே தேர்வு செய்து கொள்கிறார்கள்.
பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவார்கள்? எவ்வளவு சொத்துக்கள் தேரும்? என்பதைக் கணக்கிட்டே பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது.
“அழகான பையன், வீட்டிற்கும் ஒரே பையன், நீங்கள் எந்த வரதட்சணையும் தர வேண்டியதில்லை; 20 பவுன் நகையை உங்கள் பெண்ணுக்குப் போட்டால் போதும்; ஒரு ஐம்பதாயிரம் பணத்தை மகள் பெயரில் வங்கியில் போட்டு விடுங்கள்” என்று கூறி திருமண ஒப்பந்தத்தை இரகசியமாகச் செய்து கொள்பவர்கள் உண்மையில் தவ்ஹீத் மாப்பிள்ளையா? இப்படிப் பேரம் பேசும் பெற்றோரின் நடவடிக்கைகளுக்கு ஒத்து போகுபவர்கள் தவ்ஹீத் மாப்பிள்ளையா?
வசதி படைத்த பெண்ணை முடித்து விட்டால் அவர்களிடமிருந்து பின்னர் சுருட்டி விடலாம் என்ற எண்ணமும் உள்ளூர இருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் சும்மாவா அனுப்பி விடுவார்களா? மருமகனுக்குப் பிற்காலத்தில் எதையும் தராமலா போய் விடுவார்கள்? என்ற நப்பாசை தான் வசதி படைத்த வீட்டுப் பெண்ணை, அப்பெண் மார்க்கம் தெரியாமல் இருந்தாலும் தேர்ந்தெடுக்கச் சொல்கிறது.
இஸ்லாத்தை ஏற்பதையே மஹராக ஆக்கிக் கொள்கிறேன் என்று கூறி அபூதல்ஹா (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பால் கொண்டு சேர்த்த உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் கொள்கைப் பிடிப்பில் கொஞ்சமாவது தவ்ஹீத்வாதிகளிடம் வர வேண்டாமா?
“வரதட்சணை கொடுத்து எங்களைத் திருமணம் செய்து வைக்க வேண்டாம்; நபிவழித் திருமணமாக இருந்தால் மட்டுமே நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்” என்று உறுதியோடு இருக்கும் பெண்களை தவ்ஹீத்வாதிகள் திருமணம் முடித்துக் கொள்ளாவிட்டால் வேறு யார் தான் முடிப்பார்கள்?
கொள்கையில் பிடிப்புள்ள பெண்களை திருமணம் புரிவதற்கு முன்வராதவர்கள் தவ்ஹீத்வாதிகளா?
மஹர் என்ற பெயரில் சில ரூபாய்களை கொடுத்து விட்டு பல இலட்சங்களை கொள்ளை வாசல்வழியாக எடுக்கத் திட்டம் போடுபவர்கள் தவ்ஹீத் கொள்கைவாதிகளா?
திருமணத்தை ஆடம்பரமாக நடத்துபவர்கள் கொள்கைப் பிடிப்புள்ளவர்களா?
மறுமை நாள் ஒன்று உண்டு என்று உறுதியாக நம்பும் தவ்ஹீத்வாதிகள், நம் உள்ளத்தில் உள்ளதை அறிந்த அந்த அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச உணர்வுடன், திருமணம் உட்பட அனைத்திலும் திருக்குர்ஆன் நபிவழிகளை முழுமையாகப் பின்பற்றி நடக்க வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரியட்டும்!
நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? “அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள்!” என்று உங்களிடம் கூறப்படும் போது இவ்வுலகை நோக்கிச் சாய்ந்து விடுகிறீர்கள்! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி அடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
(அல்குர்ஆன் 9:38
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக