பொதுவாகவே மதங்கள் என்றால் மனிதனை ஏமாற்றும் ஒரு வழி என்று ஆகி விட்டது. இதற்கு அடிப்படையாக அமைவது மதங்களில் காணப்படும் இடைத் தரகர் கோட்பாடாகும்.
எந்த மதமாக இருந்தாலும் கடவுளிடம் நேரடியாக நெருங்க முடியாது. அதற்குரிய மத குருமார்களிடம் போய் அவர்களுடைய துணையுடன் தான் கடவுளிடம் நெருங்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்லாம் என்ன சொல்கின்றது என்றால் கடவுளை நெருங்குவதற்கு உனக்கும் கடவுளுக்கும் இடையில் எந்த இடைத் தரகரோ, புரோகிதரோ இருக்கக் கூடாது.
மனிதன் கடவுளிடம் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்க வேண்டும். நேரடியாகக் கேட்க வேண்டும். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இன்னொரு மனிதன் புரோக்கராக இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கின்றது.
பெயர் வைக்க வேண்டுமா?
கல்யாணம் நடத்த வேண்டுமா?
இறந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டுமா?
நீங்களாகச் செய்து கொள்ளலாம். இதற்கு மத குருவின் தயவு தேவை இல்லை என்று சொல்லி புரோகிதர்களை எல்லாத் துறையிலும் ஒழித்த மார்க்கம் இஸ்லாம் தான். எந்தத் துறையிலும் புரோகிதர் கிடையாது. புரோகிதர்களுக்கு வேலையே கிடையாது.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் 'நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)
திருக்குர்ஆன் 2:186
'என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
திருக்குர்ஆன் 40:60
கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் புரோக்கர்கள் நுழைந்து மார்க்கத்தைச் சீரழித்து விடாத அளவுக்கு அணை கட்டிய மார்க்கம் இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ திருமணங்கள் நடந்திருக்கின்றன. அத்திருமணங்களில் மந்திரம் ஓத நபிகள் நாயகம் அவர்களை யாரும் கூப்பிட்டது கிடையாது. இவர்களும் சென்றது கிடையாது.
சம்பந்தப்பட்ட பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் திருமணத்தை நடத்திக் கொள்வார்கள். புரோகிதர் தேவையென்றால் நபி (ஸல்) அவர்கள் சென்றிருக்க வேண்டும்.
ஏனைய மதங்களின் சுரண்டலைப் பார்த்து வெறுத்துப் போய் இருக்கின்றார்களே அவர்கள் இஸ்லாம் குறித்து பயப்படத் தேவை இல்லை. உண்மையான இஸ்லாத்தைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டால் மதத்தின் பெயரால் ஒருவரை மற்றவர் சுரண்ட முடியாது. ஏமாற்ற முடியாது. அப்படிப்பட்ட ஒரு மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாத்தின் மீது விமர்சனங்கள்
இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கம் என்பதை ஏற்றுக் கொள்ளும் எத்தனையோ நடுநிலையாளர்களுக்கு, இஸ்லாத்திலுள்ள சில விஷயங்கள் உறுத்தலாக இருக்கின்றன.
ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதித்துள்ளது அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது.
இதை இஸ்லாம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியாகவே வழங்கியுள்ளது.
விபச்சாரம், வைப்பாட்டி போன்ற தொடர்புகள் மூலம் வழிகெட்டு, எய்ட்ஸ் நோய்க்கு ஆளாகி விடும் நிலையை விட சட்டப்படி மனைவியாக்கிக் கொள்வது எவ்விதத்திலும் தாழ்ந்தது அல்ல!
ஒரு பெண்ணிடம் இன்பம் அனுபவித்து விட்டு அவளை அம்போ என விட்டு ஓடுவதை விட அவளை மனைவி என அங்கீகரித்து, அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை தனது பிள்ளைகள் என்று வெளிப்படையாக அறிவிப்பது எந்த விதத்திலும் தாழ்ந்தது கிடையாது.
இவ்வாறு இஸ்லாம் அனுமதி அளித்ததற்குரிய காரணங்களைக் கூறினால் நீண்டு விடும்.
(பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதித்தது? என்பது பற்றி விரிவாக அறிய ஆர்வமுள்ளவர்கள், இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற நமது வெளியீட்டைக் காண்க!)
தலாக் என்ற சொல் மூலம் பெண்களை எளிதாக விவாகரத்துச் செய்யும் சட்டமும் சிலருக்கு உறுத்தலாக அமைந்துள்ளது.
இஸ்லாம் தம்பதிகளைச் சேர்ந்து வாழவே வலியுறுத்துகிறது. அதையும் தாண்டி வாழவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தங்கள் மனைவியரை தீ வைத்துக் கொளுத்தி, ஸ்டவ் வெடித்துச் செத்தாள்' என்று சொல்லி தப்பித்து விடாமல் இருப்பதற்காகவே தலாக் முறையை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு மண விலக்குப் பெறும் உரிமை பெண்களுக்கும் எளிதாக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
தலாக் விஷயமாக இஸ்லாம் கூறும் நியாயத்தை அறிந்து கொள்ளும் போது இது போன்ற சட்டம் தங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.
(இதுபற்றி மேலதிகமாக அறிய இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற எமது வெளியீட்டைக் காண்க!)
பெண்களின் ஆடைகள், பெண் கல்வி, ஜீவனாம்சம், சொத்துரிமை உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் இஸ்லாத்தில் ஏற்கத்தக்க விடை உள்ளது.
இது போல் ஜிஹாத் என்ற பெயரில் நடக்கும் பயங்கரவாதம், கடுமையான குற்றவியல் சட்டங்கள் போன்றவையும் பலருக்கு உறுத்தலாக உள்ளது.
பயங்கரவாதச் செயலுக்கும் ஜிஹாதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் இதை ஒரு போதும் அனுமதித்ததில்லை.
கடுமையான குற்றவியல் சட்டங்கள் தான் இன்றைய உலகுக்குத் தேவை என்பதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன.
(இவை குறித்து அறிந்து கொள்ள குற்றச்சாட்டுகளும் பதில்களும்' என்ற நமது வெளியீட்டைக் காண்க!)
http://onlinepj.com/books/kutrachattuhalum_padhilkaLum/
இது போல் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகள் சிலர் ஓரிறைக் கொள்கைக்கு எதிராக, இறந்தவர்களின் சமாதிகளை வணங்குவதும், நாகூர் ஆண்டவரே! என்று இறந்தவர்களை அழைத்து வேண்டுதல் புரிவதும் பலருக்கு உறுத்தலாக உள்ளது. இஸ்லாத்திலும் பல தெய்வ நம்பிக்கை உள்ளதோ என்ற சந்தேகம் இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்றது.
ஆனால் இவர்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு எதிரானது. இறந்தவரை வழிபடுவதையும், சமாதிகள் கட்டுவதையும், சமாதிகளை வழிபாட்டுத் தலமாக ஆக்குவதையும், அடக்கத்தலங்களில் திருவிழாக்கள் நடத்துவதையும் நபிகள் நாயகம் அவர்கள் கண்டிப்புடன் தடை செய்து விட்டனர்.
இஸ்லாத்தின் வேத நூலான குர்ஆனிலும், நபிகள் நாயகத்தின் போதனைகளிலும் இச்செயல்களுக்கு அறவே அங்கீகாரம் கிடையாது. குடிகார முஸ்லிம் பெயர் தாங்கிகள் இருப்பதால் இஸ்லாம் போதைப் பொருளை அனுமதிக்கிறது என்று நாம் யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்.
அது போல் தான் இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய சமாதி வழிபாட்டைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.
(சமாதி வழிபாடு பற்றி விரிவாக அறிய தர்கா வழிபாடு' என்ற நமது வெளியீட்டைக் காண்க!)
http://onlinepj.com/books/darga-vazipadu/
இஸ்லாம் மார்க்கத்தைத் திருக்குர்ஆனிலிருந்து, நபிகள் நாயகத்தின் போதனைகளிலிருந்து அறிந்து கொள்ளக் கூடிய யாரும் இஸ்லாம் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்' என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறி நிறைவு செய்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக