வியாழன், மார்ச் 01, 2012

பரீட்சை எழுத இருக்கும் மாணவர நீங்கள் ? கட்டயாம் இதை படியுகள் ?


அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல் தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும் பெற்றோர்களுக்காகவும் , மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்.



பெற்றோர்களின் கவனத்திற்கு:

தங்கள் பிள்ளைகளின் பரீட்சை நேரம் நெருங்கி விட்டது. இதுவரை எப்படி படித்தார்கள் என்பது முக்கியமல்ல வரும் இறுதித்தேர்வில் எப்படி படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இன்றுவரை அவர்களின் படிப்பில் தாங்கள் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். இந்த இறுதித் தேர்வுக்காக நீங்கள் உங்களின் நேரங்களை அவசியம் ஒதுக்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தி, ஷைத்தானின் மொத்த உருவமான சினிமா, பாடல்கள், மெகா சீரியல்கள் இவை அனைத்திற்கும் விடை கொடுத்து விடுங்கள். இம்மையிலும் மறுமையிலும் எந்த நன்மையையும் பெற்றுத்தராதவற்றின் பக்கம் நெருங்கலாமா? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் மேலும் வல்ல அல்லாஹ் கூறுவதைப்பாருங்கள்:

காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.(அல்குர்ஆன் : 103: 1,2,3).



பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது:

திட்டமிடும் காரியத்தைத்தான் ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம். அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின் பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச் செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது. படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.

நாட்கள் இருக்கிறது படித்துக் கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல் படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின் தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.



படிக்கும் நேரங்கள்:

பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும், மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10 அல்லது 10:30க்குள் படித்து முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30 அல்லது 4 மணிக்கு எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள். இந்த நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும். அதோடு ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் தொழுது விட்டு தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள். காலையில் ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7 முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.



உடல் ஆரோக்கியம்:

உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம் தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள், இதனால் சுறுசுறுப்பு ஏற்படும். அதே நேரத்தில் உடலில் பித்தத்தை அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள் அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும் சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில் நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.



நினைவாற்றல் பெருக:

மனிதர்களின் மூளை சிறியது இது முன்னூறு கோடி நரம்பு செல்களை கொண்டது. நமது மூளையில் உள்ள 'கார்டெக்ஸ்' என்ற பகுதி நாம் கேட்கும் ஒலி, பார்க்கும் ஒளி, நுகரும் மணம், நாவின் சுவை இவைகளை ஆய்வு செய்த பின் நம்மை உணரச் செய்கிறது. தேவையானால் பதிவு செய்தும் வைத்துக்கொள்கிறது. இப்படி பார்க்கும், கேட்கும், உணரும், அறியும் விஷயங்களை ஒன்று சேர்த்து மூளையில் பதிவு செய்வதுதான் 'நினைவாற்றல்' என்பது. வகுப்பில் ஆசிரியர் பாடங்கள் நடத்தும்போது அதிக கவனம் செலுத்தி நம் மனதில் தேவையற்ற கவனச்சிதறல்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டு உன்னிப்பாக கவனித்து மனதில் உள்வாங்கிக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் அளிக்கும். இப்படி பாடங்களை மனதில் பதிய வைத்து மீண்டும், மீண்டும் பாடங்களை படிக்கும்பொழுது நம் மனதில் மறந்து போகாத அளவுக்கு பதிந்து விடும்.

நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி கவனமாக படித்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாணவ மாணவியர்களே! நீங்கள் படிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் கவனித்து நீங்கள் என்னவாக வர வேண்டும் என்பதை டாக்டர், இன்ஜீனியர், ஆசிரியர், வக்கீல் இப்படி எந்த துறையை விரும்புகிறீர்களோ அதை அடிக்கடி மனதில் நினைத்து மிக ஆர்வத்துடன் படிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். நீர்தான் உலகில் உயிர் வாழ முக்கியம். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நீர் அதிகம் தேவை. உடல் குளிர்ச்சியாய் இருக்கும்பொழுது கவனம் மிக சுலபமாகி விடும்.



நினைவாற்றலுக்கு கை கொடுக்கும் உணவு

மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான் கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1 வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும். அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை, தானியங்கள், பச்சைபட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும் அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள் எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம் அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர் வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை பின்பற்றுங்கள்.
(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம் (அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).

மேலும் : ‘‘ ரப்பி ஜித்னி இல்மா ’’ ‘‘இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! ’’ (அல்குர்ஆன் : 20:114) என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து வாருங்கள்.



மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்:

மாணவ மாணவியரின் மனது ஷைத்தானின் ஆதிக்கமான தொலைக்காட்சியின் மீது ஒன்றி விட்டது. இந்த தொலைக்காட்சிகள் சமூக நலனில் அக்கரை கொண்டு செயல்படவில்லை. பணத்தை குறிக்கோளாக கொண்டு தன்னை, தன் குடும்பத்தை வளப்படுத்திக்கொள்ள மட்டுமே என்று செயல்படுகிறது. அதனால் இதன் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுங்கள். கடந்த காலங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரிடம் தங்களின் அதிக மதிப்பெண்ணுக்கும் பரீட்சையில் வெற்றி பெறவும் உதவியாக இருந்த காரியங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது படித்ததை அனைத்தையும் எழுதிப்பார்ப்பது எங்கள் கட்டாய பழக்கம் என்றார்கள். மேலும் 9ஆம் வகுப்பு முதல் எங்கள் வீட்டில் கேபிள் டிவியை கட் செய்து விட்டோம். பரீட்சைக்கு 4 மாதங்களுக்கு முன்பே கேபிள் டிவியை கட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். வாழ்க்கைக்கு எந்த வகையிலும் உதவி செய்யாத காட்சிகளைத்தான் இந்த தொலைக்காட்சிகள் காட்டுகின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிறந்த முறையில் படித்து முன்னேற்றம் அடைவதே உங்களுடைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அதோடு தாங்களும் தன்னிறைவு பெற்று இந்த சமுதாயத்தில் வீழ்ந்து கிடப்பவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அடிக்கடி மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். கல்வி பலவிதங்களிலும் எட்டாத சமுதாயத்தில் இருக்கிறோம். நாம் சிறப்பான முறையில் படித்து வெளி வந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு இருங்கள். எக்காரணத்தை கொண்டும் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுத்து விடாதீர்கள். எனக்கு மறதி இருக்கிறதே என்று கலங்கி நின்று விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோடு இருந்தால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டாது. என்னால் முடியும் எனக்கு இறைவன் உதவி செய்வான் என்ற தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். இறைவனின் உதவி கிடைக்க தினமும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வல்ல அல்லாஹ் உதவி செய்வான். மேலும் படிப்பின் மேல் தாங்கள் செலுத்தும் ஆர்வமும், கவனமும் கைகொடுக்கும்.



பரீட்சைக்கு செல்வதற்கு முன்:

பரீட்சைக்கு முன் தினம் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம். விடியல் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து தொழுது இறைவனிடம் உதவி தேடிய பிறகு அன்றைய தினத்தின் பரீட்சைக்கான பாடத்தை மீண்டும் படியுங்கள். மிதமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டால் தூக்கம் வரும். வீட்டை விட்டு கிளம்பும் முன் 2 ரக்காஅத் தொழுது பிரார்த்தனை செய்து விட்டு கிளம்புங்கள். சுத்தமான உடை அணிந்து கொள்ளுங்கள். பள்ளிக்கு அரைமணி நேரம் முன்னதாக சென்று விடுங்கள். இது தேவையற்ற பதற்றத்தை உண்டாக்காது. பேனா, பென்சில், ரப்பர் எவையெல்லாம் தேவையோ அவைகளை ஒவ்வொன்றிலும் இரண்டு வைத்திருப்பது நல்லது. மேலும் பரீட்சை ஹால் நுழைவுச் சீட்டு, பரீட்சைக்கான அனைத்து பொருட்களையும், தங்களின் ட்ரெஸ்ஸையும் முதல் நாள் இரவே தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சைக்கு புறப்படும் நேரத்தில் பொருள்களை காணவில்லை என்று தேடிக் கொண்டு இருந்தால் டென்ஷனாகி வீட்டில் பெற்றோரிடமும் திட்டு வாங்கி பரீட்சையில் கவனக்குறைவை ஏற்படுத்தும்.



பரீட்சை ஹாலில்:

பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள் இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள். பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல் அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகு அண்டர்லைன் இட வேண்டிய இடங்களில் அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும் மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள். பரீட்சை முடிந்து வெளியே வந்தவுடன் விடுபட்ட போன கேள்விகளுக்கு பதில் ஞாபகம் வந்து எழுதாமல் போய் விட்டோமே என்ற கவலை தங்களுக்கு வரலாம். அப்படி வந்தால் கவலையை தூர எறிந்து விட்டு வல்ல அல்லாஹ் போதுமானவன் என்ற நினைப்புடன் அடுத்த பரீட்சைக்கு தங்களை தயார்படுத்துங்கள்.



பெற்றோர்களின் உதவி:

தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டின் சூழ்நிலைகளை அமைதியாக்கிக்கொடுங்கள். தாங்கள் செய்ய வேண்டிய உதவிகள் அதிக அளவு அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்க வேண்டும். மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை வல்ல அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதனால் வல்ல அல்லாஹ் மேல் பாரத்தை போட்டு விட்டு நாம் படித்தோமா? நம் பிள்ளை படிப்பதற்கு என்று சும்மா இருந்து விடாமல் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டுத்தான் வல்ல அல்லாஹ் மேல் பொறுப்பு சாட்ட வேண்டும்.



எழுத்துப்பயிற்சி:

மாணவ, மாணவியர்களே! நீங்கள் எழுத்துப்பயிற்சியில்தான் கவனக்குறைவாக இருக்கிறீர்கள். அதனால் மீண்டும் உங்களை வலியுறுத்துகிறேன். நாம் மனப்பாடம் செய்வதை தேர்வில் ஒப்பிக்க போவதில்லை. பேப்பரில்தான் எழுதுகிறோம். ஆகையால் படிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் அதிகமாக எழுதி பார்ப்பதற்கு கொடுக்க வேண்டும். அதனால் படித்ததை எழுதிப் பார்ப்பதுதான் சிறந்தது. எழுதுவது வீண் வேலை என்று இருந்து விடாதீர்கள். எழுத அவசியம் முயற்சி செய்யுங்கள். (ஆரம்பத்தில் சிரமமாகத்தோன்றும், பிறகு சுலபமாகிவிடும்). நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள். எழுதியதை வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது நண்பர்களிடம் கொடுத்து திருத்தச்சொல்லுங்கள். யாரும் கிடைக்காத நேரத்தில் தாங்களே திருத்திக்கொள்ளுங்கள். மாணவ, மாணவியரே வல்ல அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 58:11)

ஜழ்சகல்லாஹ் கைர் சகோ அலாவுதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...