புதன், மே 16, 2012

இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு


மன்னிப்பு இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் என்பவன் தவறிழைப்பவனாகவே இருக்கின்றான். சில நேரங்களில் அவன் யோசிக்காமல் அல்லது எந்த ஒரு உள்நோக்கமும் இன்றி தவறிழைக்கின்றான். ஆனால் சில நேரங்களில் நன்கு அறிந்து கொண்டே பாவங்களில் ஈடுபடுகின்றான் அல்லது பிறருக்கு தீங்கிழைக்கின்றான்.மனிதர்கள் தொடர்ந்து தவறிழைப்பதால், பின்பு அதனை எண்ணி வருந்தக் கூடியவனாக இருக்கின்றதால் மன்னிப்பு என்பது மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகி விடுகிறது. இஸ்லாத்தின் பார்வையில் மன்னிப்பு எனபது இரு வகைப்படுகின்றது. 1) அல்லாஹ்வின் மன்னிப்பு 2) மனிதனின் மன்னிப்பு நாம் சில நேரங்களில் அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறி விடுகின்றோம். சில நேரங்களில் மனிதர்களுக்கு தீங்கிழைக்கின்றோம்.ஆகையால் நமக்கு இவ்விரண்டு விதமான மன்னிப்பும் தேவைப்படுகின்றது. (1) அல்லாஹ்வின் மன்னிப்பு மிக்க வல்லமையுடைய நாயனாகிய அல்லாஹ் மிக மன்னிப்பவன்.அல்லாஹ்விற்கு அழகிய பல திரு நாமங்கள் இருக்கின்றன. அவை அல்லாஹ்வின் மன்னிப்பையும் கருணையையும் பறைசாற்றுகின்றன. Rahman (அளவற்ற அருளாளன்) Rahim (நிகரற்ற அன்புடையோன்) Gafoor (மன்னிப்பவன்) Afu’w (மன்னிப்பளிப்பவன்) Tawwab (மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்) Gaffaar (மிக மன்னிப்பவன்) Majeed (பெருந்தன்மையானவன்) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (அல்குர்ஆன் 4:116) என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104) அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடி திருந்தி வாழ முற்படவேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம் எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!(அல்குர்ஆன் 2:286) ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு, ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’ என்று சொல் என்று கூறினார்கள். பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!’ (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580) அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் வாய்மையுடன் பாவமன்னிப்புத் தேடும் மனிதனுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டு. அவன் செய்த பாவம் எவ்வளவு பெரிதாயினும் எவ்வளவு அதிகமாயினும் சரியே! ஏனெனில், அல்லாஹ்வின் கருணை எல்லையில்லாதது! உலகின் எல்லாப் பொருள்களையும் வியாபித்து நிற்கக் கூடியது இதற்கு ஆதாரமாக பின்வரும் நபி மொழியை கூறலாம் நூறு கொலைகள் செய்தவன்: அபூ ஸயீதில் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினான். பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். கல்லி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டான்: நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா? அவர் சொன்னார்: ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும்! உடனே அவன் (அந்த ஊரை நோக்கிப்) புறப்பட்டான். பாதி வழி வந்திருக்கும்பொழுது மரணம் அவனைத் தழுவிக்கொண்டது! அவனைக் கைப்பற்றும் விஷயத்தில் கருணை மலக்குகளும் தண்டனை மலக்குகளும் தர்க்கம் செய்யலானார்கள்! கருணை மலக்குகள் சொன்னார்கள்: இவன் பாவமீட்சி தேடியவனாக – தனது இதயத்தால் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கியவனாக வந்துள்ளான்,. என்று! தண்டனை மலக்குகள் சொன்னார்கள்: இவன் எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை என்று! இந்நிலையில் வேறொரு மலக்கு மனித வடிவத்தில் அங்கு வந்தார். அவரைத் தங்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும் நடுவராக்கினார்கள், அந்த மலக்குகள். அவர் சொன்னார்: இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை அளந்து பாருங்கள். இந்த மனிதன் எந்த ஊரின் பக்கம் நெருக்கமாக இருக்கிறானோ அந்த ஊரைச் சேர்ந்தவனாவான்! " அவ்வாறு அளந்து பார்த்த பொழுது அவன்,எந்த ஊரை நாடி வந்தானோ அந்த ஊரின் பக்கம் நெருக்கமானவனாக இருந்தான். உடனே கருணை மலக்குகள் அவனைக் கைப்பற்றிக் கொண்டார்கள்!" (நூல்: புகாரி, முஸ்லிம்) ஸஹீஹ் (முஸ்லிமின்) ஓர் அறிவிப்பில் வந்துள்ளது: ‘அவன் நல்ல ஊரின் பக்கமே ஒருசாண் அளவு அதிக நெருக்கமாக இருந்தான். எனவே அவ்வூர்வாசிகளுடன் சேர்க்கப்பட்டான்’ ஸஹீஹ் (முஸ்லிமின்) வேறோர் அறிவிப்பில் உள்ளது: ‘இந்த ஊருக்கு நீ தூரமாகிவிடு என்று அல்லாஹ் கட்டளையிட்டான். மேலும் அந்த ஊருக்கு- நீ நெருக்கமாகிவிடு என்று கட்டளையிட்டான். மேலும் கூறினான்: (இப்பொழுது) இரு ஊர்களுக்கும் மத்தியில் அளந்து பாருங்கள் என்று! அதன்படி அந்த மனிதன் இந்த ஊரின் பக்கமே அதிக நெருக்கமாக இருக்கக் கண்டார்கள்!’ ஸஹீஹ் (முஸ்லிமின்) இன்னோர் அறிவிப்பில் உள்ளது: ‘அவன் தனது இதயத்தால் அந்த ஊரை நாடிப் புறப்பட்டான். (2) மனிதர்களின் மன்னிப்பு தனது மார்க்கத்தின் வழிகாட்டுதலை எற்றுக் கொண்ட உண்மை முஸ்லிம், மன்னிக்கும் மாண்பாளராகத் திகழ்வார். மன்னிப்பது மனிதனின் உயர் பண்பாகும். மன்னித்தல் எனபது வெறும் வார்த்தைகளினால் வெளிப்படுவதில்லை மாறாக அது உள்ளத்தில் இருந்து வெளிப்படுவதாகும். நாம் ஒருவரை மனதார மன்னித்து அதனை வார்த்தைகளினால் வெளிப்படுத்தி நமது செய்கையினால் நிருபணம் செய்வதே உண்மையான மன்னிப்பாகும். அவர்கள் எத்தகையோரென்றால் செல்வ நிலைமையிலும் வறுமை நிலைமையிலும் தானம் செய்துகொண்டேயிருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134) எவரது உள்ளங்கள் இஸ்லாம் என்ற நேர்வழியின் திறவுகோல் மூலம் திறக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டுமே மன்னிப்பின் உச்சத்துக்கு செல்ல முடியும். அவர்களது மனம் நற்குணத்தால் மலர்ந்திருக்கும். அவர்கள் தங்களது நீதம் செலுத்துதல், உதவி செய்தல், பிறர் தவற்றை மன்னித்தல் போன்ற நற்பண்புகளால் அல்லாஹ்விடமுள்ள மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அடைந்து கொள்வார்கள். எவரேனும் (தனக்கிழைக்கப்பட்ட) அக்கிரமத்திற்கு (அதே அளவு) பழிவாங்கினால் அதனால் அவன் மீது யாதொரு குற்றமுமில்லை. குற்றமெல்லாம் அளவுமீறி மனிதர்கள் மீது அக்கிரமம் செய்து நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோர்மீதுதான். இத்தகையோருக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால் நிச்சயமாக இது மிக்க வீரம் பொருந்திய காரியமாகும். (அல்குர்ஆன் 42:39-43) நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது அவர்களுடைய எதிரிகள்அனைவரும் அவர்கள் முன்னிலையில் நின்றார்கள். கருணை வடிவான நபி (ஸல்)அவர்கள் அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை வஹ்ஷீ என்றகருப்பு நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ரலி)அவர்கள் கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்காவை அவர்கள் கைப்பற்றிய போது வஹ்ஷீயும் பெருமானாருக்கு முன்னால்இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து "நீ தான் வஹ்ஷீயா? ஹம்ஸாவைக்கொன்றவர் நீ தானா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். வஹ்ஷீயைப் பார்க்கும் போதெல்லாம் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஞாபகம் வந்ததால்அவரிடத்தில் நபி (ஸல்) அவர்கள், "தயவு செய்து உங்கள் முகத்தை என்னிடத்தில்காட்டாமல் இருக்க முடியுமா?'' என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். இதன்பின்பு வஹ்ஷீ இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அதீ நூல்: புகாரி 4072 நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை உஹதுப் போரில்கொடூரமாகக் கொன்று அவர்களுடைய ஈரலைக் கடித்துத் துப்பிய கொடூரச் செயல்செய்தவர்களைக் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். அதுவும்மக்காவை வெற்றி கொண்டு, மாபெரும் தலைவராக, அரசராக இருந்த நேரத்தில் மன்னித்தார்கள் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் தங்களது மகளாரான ஆயிஷா (ரழி) அவர்களை சில பாவ நாவுகள் அவதூறு கூறி காயப்படுத்தியபோது அபூபக்கர் (ரழி) அவர்களின் இதயத்தில் கவலைகள் அலைமோதின. அவதூறு கூறியவர்களுக்கு தான் செய்துவந்த உதவியை துண்டித்து விடுவதாக சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் தனது அருள் வசனத்தை இறக்கி வைத்தான்: உங்களில் செல்வந்தரும், (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும் தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹ்¢ஜ்ரத் செய்தவர்களுக்கோ (யாதொன்றுமே) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் எற்பட்டிருந்தால்) அதனை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 24:22) இந்த வசனம் இறங்கியதை கேள்விப் பட்டவுடன் அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்கள் அவர்கள் தமது வீட்டை விட்டு வெளியே வந்து " ஆம் நிச்சயமாக நான் அல்லாஹ்வின் மன்னிப்பை வேண்டுகின்றேன்" என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவதூறை பரப்புவதில் பங்கு வகித்த அந்த இளைஞரை மன்னித்து அவருக்கு மேலும் பல உதவிகளை செய்தார்கள். மன்னித்தல் என்பது அகிலங்களைப் படைத்து பரிபாலிப்பவனின் தன்மையாகும். அதை மனிதர்களிடையேயும் விசாலப்படுத்த வேண்டும். அவர்கள் தீமையை தீமையால் எதிர்கொள்ளாமல் அறிவீனர்களை மன்னிப்பதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அழகிய முறையில் நடந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான். நாமும் நம்மால் இயன்றவரை மன்னிக்கும் பக்குவத்தை வளரத்துக் கொள்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...