ஞாயிறு, அக்டோபர் 23, 2011

குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி) நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)


ஆனால் ஒருவருக்கு முதல் 10 நாட்களுக்கு இடையில் கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அவர் எப்போது குர்பானிக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டாரா அப்போதிருந்து கொடுக்கும் வரை இவற்றை வெட்டக்கூடாது. ஏனென்றால் குர்பானி கொடுப்பதாக அவர் முடிவெடுக்கும் போது தான் இந்தத் தடை ஏற்படும்.


தன்னுடைய முயற்சியின்றி தானாக நகம் முடி ஆகியவை விழுந்தால் இதில் தவறேதுமில்லை. சில நேரங்களில் இவைகள் இருப்பதினால் மிகவும் துன்பம் ஏற்படலாம். உதாரணமாக கையின் நகம் உடைந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அல்லது அறுவை சிகிச்சை செய்வதற்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற சிரமமான நிலையில் வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ் எந்த உயிரையும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டு கஷ்டம் கொடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை நம்மால் முடிந்த அளவு பின்பற்றுவதே நம்மீது கடமை.
குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். இவர் மட்டும் நகம் முடிகளைக் களையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் இவ்வாறு கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அனைவரும் கட்டாயம் இதைக் கடைபிடிப்பதாக இருந்தால் நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருப்பார்கள்.

குர்பானிப் பிராணிகள்

ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது. கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள். (அல்குர்ஆன் 22 : 28).

இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.
ஆடுகளில் சில இனத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. வெள்ளாடு செம்மறியாடு ஆகிய எதுவானாலும் கொடுப்பதில் குற்றமில்லை. பலியிடப்பட வேண்டிய பிராணிகளை இறைவன் பட்டியலிடும் போது செம்மறியாடு வெள்ளாடு மாடு ஒட்டகம் இவற்றையே குறிப்பிடுகிறான்.
(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!'' என (முஹம்மதே!) கேட்பீராக!
ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்குர்ஆன் (6 : 143)

மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.


எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.
சில ஊர்களில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.

பிராணிகளின் தன்மைகள்

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி) நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)

நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை.


நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூற்கள் : முஸ்லிம் (3637)
நபி(ஸல்) அவர்கள் உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை தடுத்தார்கள். நூல் : நஸயீ (4301) அறிவிப்பாளர் : அலீ (ரலி)

தலையின் உட்பகுதியில் பாதியளவு கொம்பு உடைந்த ஆட்டிற்கு அல்பா என்று சொல்லப்படும். இவ்வகை பிராணியை குர்பானி கொடுக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். வெளிப்பகுதியில் கொம்பு உடைந்திருந்தால் அதை குர்பானி கொடுப்பதில் தவறில்லை. ஏனென்றால் தடைசெய்யப்பட்ட பிராணிகளின் தன்மைகளை பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது வெளிப்புறத்தில் கொம்பு உடைந்ததை கொடுக்கக்கூடாது என்று தடைவிதிக்கவில்லை.

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை.
குர்பானி கொடுப்பதற்கு பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்துப் பலியிடுவது தவறானது என்று நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின் தன்மையை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது பெண்ணினத்தை பலியிடக்கூடாது என்று கூறவில்லை.


நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாத போது நாமாக நிபந்தனைகளை விதிப்பது வழிகேடே. பலியிடப்பட வேண்டிய பிராணிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது பெண்ணினத்தையும் சேர்த்தே குறிப்பிடுகிறான். (பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!'' என (முஹம்மதே!) கேட்பீராக! ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்குர்ஆன் (6 : 143)

இறைச்சி அதிகமாகவும் ருசியாகவும் உள்ள பிராணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். ஆடுகளின் எண்ணிக்கையை விட ஆட்டின் தரம் தான் முக்கியம். அபூபுர்தா என்ற நபித்தோழர் தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டார். அதற்குப் பதிலாக இரண்டு ஆட்டின் இறைச்சியை விட அதிக இறைச்சியை கொண்ட ஆடு உள்ளதாக அவர் கூறியபோது இந்த ஆடே முன்பு கொடுத்த ஆட்டைவிட சிறந்தது என்று கூறினார்கள்.


அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டை வீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக் கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்து விட்டேன் என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் உனது இரு குர்பானிப் பிராணியில் இதுவே சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி) நூல் : முஸ்லிம் (3625) மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள். அறிவிப்பவர் : அபூஉமாமா(ரலி)
நூற்கள் : அபூஅவானா, புகாரி(தஃலீக்)



இந்த ஹதீஸை இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் வரிசையில்லாமல் பதிவு செய்துள்ளார்கள். ஹாஃபிள் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபதஹுல் பாரி என்ற நூலில் இந்தச் செய்தி அபூநுஐம் அவர்களின் அல்முஸ்தத்ரக் என்ற நூலில் அறிவிப்பாளர் வரிசையுடன் இடம்பெறுவதாக குறிப்பிடுகின்றார். எனவே குர்பானிப் பிராணிகளை முன் கூட்டியே வாங்கி நல்ல தீனி போட்டு கொழுக்க வைக்கலாம்.
குர்பானிப் பிராணிகள் வாங்கும் போது நல்ல தரமான உயர் ரகமானதை வாங்குவது நன்மையை அதிகரித்துத் தரும். ஏழைகள் உயர்தரமான இறைச்சியைச் சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கூடுதலான நன்மைகள் உண்டு. இதனை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நீ தூய்மையானதும், தன்யீம்' என்ற இடத்திற்கு சென்று இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு இந்த இடத்தில் என்னைச் சந்தி! (இப்படிச் செய்வதினால்) உன்னுடைய செலவுக்கும், உன் கஷ்டத்திற்கும் ஏற்ப கூலி கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூல் : புகாரி(1287)

சிறந்த அமல் எது என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வை நம்புவதும் அவனுடைய பாதையில் போர் புரிவதுமாகும் என்று கூறினார்கள். அடிமை விடுதலை செய்வதில் சிறந்தது எது? என்று கேட்டேன். எஜமானால் விருப்பமுள்ள அதிக விலையுள்ள அடிமை (யை விடுதலை செய்வது) என பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)நூல் : புகாரி (2518)\

பெரும்பாலான இடங்களில் அல்லாஹ்விற்காக வாங்கப்பட்ட பிராணிகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி போட்டி வைக்கிறார்கள். இதனால் அப்பிராணிகளின் கொம்புகள் உடைந்து விடுகின்றது. அவற்றுக்கு பலத்த காயமும் ஏற்படுகிறது. இது போன்று குறைகளை ஏற்படுத்தி குர்பானிக் கொடுத்தால் இதில் எள் அளவும் பயனில்லை.

இக்கேளிக்கையில் ஈடுபடுபவர் உயிரினங்களை கொடுமைப்படுத்திய குற்றத்தின் கீழ் சேர்க்கப்படுவார். பிராணியை அறுக்கும் போது அதற்குச் சிரமம் ஏற்படாமல் இருப்பதற்காக கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளும்படி வலியுறுத்தும் நம்மார்க்கம் பிராணிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்தரவதையை ஒருபோதும் ஏற்காது. ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி காயடிக்கப்பட்ட பிராணியை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது. இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத்தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.

பிராணியின் வயது

குர்பானிக்காக வாங்கப்படும் பிராணிக்கு பல்விழுந்திருக்க வேண்டும். சிலர் பால்குடிக்கும் குட்டிகளை அறுத்துப் பலியிடுகிறார்கள். இதை மார்க்கம் அங்கீகரிக்கவில்லை. இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5560) அபூபுர்தா (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுத்த போது அதற்குப் பகரமாக நபி (ஸல்) அவர்களிடம் முஸின்னாவை விட ஜத்அ (ஆறுமாதக் குட்டி) உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்ட கேள்வியிலிருந்து முஸின்னாவைத் தான் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.


நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு' கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர். அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர-) நூல் : முஸ்லிம் (3634)


நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம். அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர் நூல் : நஸயீ (4306) பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை. இதை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.


முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகளில் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால் தான் வயதைக் கணிப்பதில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
முஸின்னா என்பது ஆட்டிலும் மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலியமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.

அடுத்து ஜத்வு என்பதையும் கொடுக்கலாம் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்வு என்பது முஸின்னாவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஆறு மாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. முஸின்னா இல்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு முந்தைய நிலையில் உள்ள ஜத்வு வகையைக் கொடுக்கலாம்.

பாலூட்டும் பிராணி

குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனென்றால் தாயை அறுத்து விட்டால் குட்டி பாசத்திற்கும் பாலிற்கும் ஏங்கக்கூடிய நிலை ஏற்படும். குர்பானி கொடுப்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு குட்டிபோட்டு பால்தரும் பிராணிகளை அறுப்பதை தவிர்க்க வேண்டும். (ஒரு அன்சாரித் தோழர் நபி (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) முஸ்லிம் : (3799)

குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?

அவசியம் ஏற்படும் போது குர்பானிப் பிராணிகளை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல. ஆனால் கொடுமை செய்யாமல் அதன் சக்திக்கு உட்பட்டவாறு அழகிய முறையில் அதைக் கையாள வேண்டும்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது., நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ் (ரஹ்) நூல் : முஸ்லிம் (2562 , 2563), நஸயீ (2752), அபூதாவூத் (1498), அஹ்மத் (14230) ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். அதற்கவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும் என்றார்கள். மீண்டும் அவர் இது குர்பானி ஒட்டகமாயிற்றே என்றதும் (பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும் என மூன்றாம் தடவையும் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (1690)

சில பிராணிகள் நம் கட்டளைகளுக்கு அடங்காமல் மிரண்டு ஓடும். இப்ராணிகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அவற்றை அடிப்பதில் தவறேதும் இல்லை. அடங்காத பிராணிகளை அம்பெய்து கட்டுப்படுத்த நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். எங்களுக்கு சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள். அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ்
நூல் : புகாரி (2488) முஸ்லிம் (3638)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...