புதன், அக்டோபர் 26, 2011

*குர்பானியின் சட்டங்கள் *

எப்போது அறுக்க வேண்டும்?

குர்பனிப் பிராணியை உலுஹியா, குர்பானி'' என்று பிரித்து உலுஹியா'' என்றால் தொழுகைக்கு முன்பு அறுக்கலாம் என்றும், குர்பானி'' என்றால் தொழுகைக்குப் பின்பு தான் அறுக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரித்துச் செய்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. உலுஹியா என்பதும், குர்பானி என்பதும் ஒன்று தான். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த பின்பே குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு முன்னர் கொடுத்தால் அது குர்பானியாகக் கணக்கில் கொள்ளப்படாது.
தொழுகை முடிந்த உடன் தான் அறுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்து விட்டதால் அதையே துவங்குவதற்குரிய நேரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் இதை அறியாமல் ஃபஜர் ஆரம்பித்த உடனே அறுத்து விடுகிறார்கள். தெரியாமல் தொழுகைக்கு முன் அறுத்து விட்டால் தொழுத பின் மற்றொரு பிராணியை அறுக்க வேண்டும்.



இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூபுர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்து விட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : பரா(ரலி) நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3627)



அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) அல்லாஹ்வின் தூதரே இந்த நாள் இறைச்சி அதிகமாக விரும்பப்படும் நாள். (ஆகையால்) எனது வீட்டார்களுக்கும் எனது அண்டைவீட்டாருக்கும் எனது உறவினர்களுக்கும் உண்ணக்கொடுப்பதற்காக எனது குர்பானிப் பிராணியை அவசரப்பட்டு அறுத்துவிட்டேன் என்று கூறினார்.



அதற்கு நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அறுப்பீராக என்று கூறினார்கள். அவர்அல்லாஹ்வின் தூதரே என்னிடத்தில் ஆறுமாதம் பூர்த்தியான பெண் வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது (அதிக) இறைச்சியுடைய இரு ஆடுகளை விட சிறந்தது என்று கூறினார். அதற்கு நபியவர்கள் இதுவே உனது இரு குர்பானிப் பிராணியில் சிறந்ததாகும் உமக்குப் பின்னால் யாருக்கும் ஆறுமாதக் குட்டி போதுமாகாது என்று கூறினார்கள். அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி) நூல் : முஸ்லிம் (3625)



இந்த ஹதீஸின் இறுதியில் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கப்படும் ஆறுமாதக் குட்டியே முன்பு கொடுக்கப்பட்டதை விட சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முன்பு அறுக்கப்பட்ட பிராணி வயதில் பெரிதாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவர்களின் பார்வையில் குர்பானிப் பிராணியாக கணிக்கப்படவில்லை.

இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாகவே எண்ணப்பட்டது. மாறாக தொழுகைக்குப் பின்பு கொடுக்கப்படும் பிராணி குறைந்த வயதுடையதாக இருந்தாலும் அதை குர்பானிப் பிராணியாக கருதி அதுவே சிறந்தது என்று கூறியுள்ளார்கள். எனவே தொழுகைக்குப் பின்பே குர்பானி கொடுக்க வேண்டும்.

எவ்வளவு நாட்களுக்குள் அறுத்துப் பலியிட வேண்டும்?

பெருநாள் மற்றும் அதற்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்குள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட வேண்டும். பெருநாளுக்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்கு தஷ்ரீக்குடைய நாட்கள் என்று சொல்லப்படும். இந்நாளில் மக்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை சூரிய ஒளியில் காயவைத்து உப்புக்கண்டம் தயாரித்ததால் இதற்கு அய்யாமுத் தஷ்ரீக் உப்புக் கண்டம் தயாரிக்கும் நாள் என்ற பெயர் வந்தது.

தஷ்ரீக்குடைய நாட்களுக்கு மினாவுடைய நாட்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். தஷ்ரீக்குடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுபைஷா (ரலி) நூல் : முஸ்லிம் (2099)



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அனுப்பி இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார். மினாவின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்லிம் (2100)



மினாவுடைய நாட்கள் அதாவது தஷ்ரீக்குடைய நாட்கள் என்பது மூன்று நாளாகும் என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மினாவுடைய நாட்கள் மூன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்கு) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் யஃமர் (ரலி) நூல் : திர்மிதி (814)

பெருநாளுக்கு அடுத்துள்ள இந்த மூன்று நாட்களும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)



பகலில் மட்டுமே அறுக்கும் வழக்கம் மக்களிடம் உள்ளது. இரவில் பிராணியை அறுப்பதற்கு குர்ஆனிலோ ஏற்கத்தகுந்த நபிமொழிகளிலோ எந்தத் தடையும் இல்லை என்பதால் விரும்புபவர்கள் இரவில் அறுத்துப் பலியிடலாம்.

பெண்கள் அறுக்கலாமா?

பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி), நூல் : புகாரி(5504)

எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?

சிலர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்றும் சிலர் மூன்று நபருக்கு ஒரு ஆடு கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் பலர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு கொடுத்தால் போதும் என்றும் கூறுகின்றனர்.



இவற்றில் ஒரு ஆடு ஒரு குடும்பத்திற்கு போதுமானது என்று கூறுவோரின் கருத்தே சரியான கருத்து. ஏனெனில் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் சஹாபாக்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் சேர்த்து ஒரு ஆட்டை மட்டும் குர்பானியாக கொடுத்துள்ளார்கள் என பின்வரும் செய்தி கூறுகிறது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். அறிவிப்பவர் : அதா இப்னு யஸார் நூற்கள்: திர்மிதீ(1425), இப்னுமாஜா(3147)



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற கறுப்பில் படுக்கின்ற கறுப்பில் பார்க்கின்ற (கால்கள் வயிறு கண் ஆகியப் பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறி ஆட்டுக்கெடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறு அது குர்பானிக்காக கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷாவே அந்தக் கத்தியை எடு என்றார்கள். பிறகு அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு என்றார்கள்.அவ்வாறே நான் செய்தேன். பிறகு அந்தக் கத்தியை வாங்கி அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல்மின் முஹம்மதின் வஆலி முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் (அல்லாஹ்வின் பெயரால் இறைவா முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறி அதை அறுத்தார்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (3637)



இதுமட்டுமல்லாமல் குர்பானிக் கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆடு போதுமானது என்று தெளிவுபடுத்திவிட்டார்கள்.
நான் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) ஒவ்வொரு பெருநாளிலும் ஒவ்வொரு ரஜப் மாதத்திலும் ஒரு ஆட்டை அறுப்பது ஒவ்வொரு வீட்டின் மீதும் கடமை என்று கூறிக்கொண்டிருந்தார்கள். நூல் : அஹ்மத் (19804) அறிவிப்பாளர் : ஹபீப் பின் மிஹ்னஃப்



பெருமையை நாடாமல் ஏழைகளின் தேவையைக் கருதி எத்தனை பிராணி வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் மாமிசத்தை வீண்விரையம் செய்யக்கூடாது. நபி(ஸல்) அவர்கள் கருப்பும், வெள்ளையும் கலந்த கொம்புள்ள இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அறிவிப்பவர் : அனஸ்(ரலி) நூற்கள் : புகாரி(5565), முஸ்லிம் (3635)



நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில்) 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி கொடுத்தார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து (அறுக்கும் படி கூறினார்கள்). அலீ (ரலி) அவர்கள் மீதத்தை அறுத்தார்கள். அவற்றில் ஒவ்வொரு ஒட்டகத்திலும் சில துண்டுகளை (எடுத்து சமைக்கும் படி) கட்டளையிட்டார்கள். அவை ஒரு சட்டியில் வைத்து சமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் இருவரும் அதன் இறைச்சியை உண்டு அதன் குழம்பைப் பருகினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம் (2137)



நன்மையைக் கருதி அதிகமாக குர்பானி கொடுப்பது சிறந்தது என்றும் தனக்கு முடியாத பட்சத்தில் மற்றவரிடம் கொடுத்து குர்பானிப் பிராணியை அறுக்கச் சொல்லலாம் என்றும் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். நீண்ட இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளைச் சமைத்து சாப்பிட்டதாக உள்ளது. குர்பானி கொடுப்பவர் தன்னுடைய குர்பானியின் மாமிசத்தை உண்பது நபிவழி என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது. ஹஜ்ஜுக்குச் சென்று துல்ஹஜ்ஜு பிறை பத்தாம் நாள் மினாவில் ஹாஜிகள் குர்பானி கொடுப்பார்கள். இவர்கள் உள்ளூரில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. காரணம் நபி(ஸல்) அவர்களோ, மற்ற தோழர்களோ அவ்வாறு செய்யவில்லை. எனவே ஹாஜிகள் மினாவில் கொடுத்த குர்பானியே போதுமானதாகும்.

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...