பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும்.
கருவை வளர்க்கக் கூடிய பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது. ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும்.
பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.
ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும்.
ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக