கருவில் குழந்தை இருக்கா?.. கர்ப்பிணிகளே செக் பண்ணுங்க!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தை கருவில் தங்கியுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தை நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.கருவின் வளர்ச்சி குறித்தும் அதை பாதுகாப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.
விந்தணு உடன் இணைந்த கரு முதலில் ஒரேயொரு முழு ‘செல்’லாக இருக்கும். இது நாள்தோறும் வளர்ந்து, இரண்டு இரண்டாக பிரியும். அதேநேரம், ஃபெலோப்பியன் குழாய் வழியாக அவை மெல்ல மெல்ல கருப்பையை நோக்கி நகரும். கடைசியில் கருப்பையில் போய் அது உட்காரும்போது கிட்டத்தட்ட நூறு செல்களாக பிரிந்திருக்கும்! ஆரோக்கியமான கர்ப்பம் என்பது இதுதான்.
உயிருக்கு ஆபத்து
சில சமயங்களில், கரு கருப்பையை நோக்கி நகராமல், ஃபெலோப்பியன் குழாயிலேயே வளர ஆரம்பிக்கும். இதைத் தான் ‘ஃபெலோப்பியன் குழாய் கர்ப்பம்’ என்கிறார்கள். ஃபெலோப்பியன் குழாயில் நோய் தொற்று இருந்தால்தான் இப்படி ஆகும். பொதுவாக கரு தானாக நகராது. ஃபெலோப்பியன் குழாயின் தசைகள் சுருங்கி விரிந்து, அதன் மூலம்தான் கரு நகர்த்தப்படுகிறது.
நோய் தொற்று காரணமாக சேதமடைந்த ஃபெலோப்பியன் குழாய் என்றால் சுருங்கி விரியாது. அல்லது ஃபெலோப்பியன் குழாய் சுருங்கி கருவின் இயக்கத்தை தடுக்கலாம். சில பெண்களுக்கு ஃபெலோப்பியன் குழாயின் அமைப்பே வளைந்து நெளிந்து இருக்கும். இப்படிப்பட்ட குழாய்களால் ‘கரு’வின் இயக்கம் நிச்சயம் தடைபடும். இதனால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கருக்குழாய் வெடிக்கும்
ஊசி நுழையும் அளவுள்ள மெல்லிய ஃபெலோப்பியன் குழாயில் கரு வளர ஆரம்பித்தால் முடிந்த வரை கருவை தாங்கி, முடியாத நிலை வரும்போது வெடித்துவிடும். உடனே கடுமையான வயிற்றுவலியும், ரத்தப்போக்கும் ஏற்படும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
முத்துப்பிள்ளை கர்ப்பம்
அதேபோல் கருப்பையில் கரு ஒரேயொரு உருண்டையாக திரண்டிருக் காமல் குட்டிக் குட்டி உருண்டை களாக மாறி, ஒன்றோடோன்று ஒட்டியபடி கருப்பை முழுக்க நிறைந்திருப்பதுதான் ‘முத்துப் பிள்ளை’ கர்ப்பம். இது குழந்தையாக உருவெடுக்க முடியாது. இதனை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து சுத்தம் செய்துவிடலாம்.
கர்ப்பம் என்று உறுதியானதுமே டாக்டரிடம் அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துக்களை சந்திக்காமலே தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக