வியாழன், மார்ச் 29, 2012

விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?

ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.



நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற பயணம் மேற்கொண்டு அங்கு அல்லாஹ்விடம் உரையாடியது உண்மையான, திருக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களின் செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நேரடியாகப் பார்த்தார்கள் என்று கூறுவது தவறான செய்தியாகும். மேலும் திருமறைக் குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்தாகும்.

அல்லாஹ்வை இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாது என்பதற்கு திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் சான்றுகள் நிறைந்துள்ளன.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்42:51)

இவ்வசனத்தில் அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று வழிகளில்தான் பேசுவான் என்று தெளிவாக கூறுகிறான். இவை அல்லாத வேறு வழிகள் இல்லை என்பதை விளக்கமாகக் குறிப்பிடுகிறான்.

இறைவன் மனிதர்களிடம் பேசும் முறைகள் மூன்று. அவை. 1. வஹீயின் மூலம் 2. திரைக்கு அப்பால் இருந்து 3. ஒரு தூதரை அனுப்பி இந்த வழிகளில் நேரடியாக பேசுவதைப் பற்றி கூறாததிருந்து அல்லாஹ் அவ்வழியை அடைத்து விட்டான் என்பதை விளங்கலாம். ஏனெனில் நமது கண்களுக்கு அவனைப் பார்க்கும் அளவிற்கு சக்தி கிடையாது.


அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:103)
இக்கருத்தை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான். உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகல் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகல் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: முஸ்லிம் 293, அஹ்மத் 18765,18806

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது அல்லாஹ் கூறிய வார்த்தையிருந்தும் அந்தச் சம்பவத்திருந்தும் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை அறியலாம்.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது “என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறை வன்) “என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது “நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் உன்னை நான் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது “என்னை நீர் பார்க்கவே முடியாது” என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.
இச்சம்பவம் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகத்தில் நேரடியாக அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகிறது.



யாரும் இறந்து மறு உலகை அடையாமல் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
உங்களில் எவரும் தன் இறைவனை அவர் இறக்காத வரை பார்க்க முடியாது என்பதை அறிந்து கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்ம் 5215)

மேலும் நபி (ஸல்) அவர்களே மிகத் தெளிவாக நான் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று கூறிய செய்தி ஹதீஸ் நூற்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


source: www.tntj.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...