எவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி (ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்காக உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:
உலகிற் சிறந்த பெண்மணி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].
கதீஜா (ரலி) அவர்களின் குடும்பத்தினரை நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (ரலி) அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824].
மற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத், தபரானி]
கதீஜா (ரலி) அவர்களின் நேசர்களை நபி (ஸல்) அவர்கள் மதித்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்பட்டதுபோல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள். ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். [புகாரி: 3818]
கதீஜா (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல்
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817]
சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்
நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா (ரலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்து என்னை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (ரலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820]
மரணம்
நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (ரலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக