சமீபத்துல அண்ணன் ஒருத்தரு போன் பண்ணி சாயங்காலம் வீட்டுக்கு வா, ரொம்ப முக்கியமான விசயம், கண்டிப்பா வந்துடுன்னு போன் பண்ணுனார், சரின்னு நானும் கிளம்பி அவர் வீட்டுக்கு போனேன், என்னை பாத்ததும் டக்குன்னு சிறை நிரப்பும் போராட்டத்திற்கு போய் ஜெயிலுக்கு போகாம எஸ்கேப் ஆன உடன்பிறப்பு கணக்கா வா அந்தபக்கம் போயிடுவோம்னு ரகசியமா கூட்டிட்டு போனாரு, ஓ பயங்கர ரகசியம் போலருக்கேன்னு நானும் சைலண்டா போனேன்.
தனியா ஒரு இடத்துக்கு போய் நின்னவரு, டேய் உன்கிட்ட ஒரு விசயம் சொல்றேன், யாருகிட்டயும் சொல்லக்கூடாது, நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்னு சொன்னாரு, சரின்னா என்ன விசயம்னு சொல்லுங்க, யாருகிட்டயும் சொல்லமாட்டேன்னு சொன்னேன், இரண்டு மூணுதடவை சத்தியம் மேட்டர ரீபிட் பண்ணி கன்பர்மேசன் பண்ணிகிட்டு விசயத்தை சொன்னாரு மனுசன், ச்சீன்னு போயிடுச்சு.
வேற ஒன்னும் இல்லீங்க, இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு இவரோட நம்பருக்கு ஏழுகோடி ரூபா பரிசு விழுந்திருக்கறதா, அதுக்கு வீட்டு அட்ரஸ், போன் நம்பர், எல்லாம் மெயில் பண்ண சொல்லி எஸ்.எம்.எஸ் பண்ணி இருக்காங்க, அதைத்தான் உண்மைன்னு நம்பி என்ன மெயில் பண்ண சொல்லி கேட்கறதுக்காக கூப்பிட்டு இருந்தாரு, நானும் அண்ணா இது எல்லாம் சும்மா, டுபாகூரு மேட்டரு, இதையெல்லாம் பெருசா நினைக்காம விட்டுடுங்கன்னு சொன்னா ஆளு கேட்கவே இல்லை, டேய் நோக்கியா கம்பெனில இருந்து மெசேஜ் அனுப்பி இருக்காங்கடா? ஒருவேளை நிசமா இருந்தா ஏழு கோடிடா மெயில் அனுப்புடான்னு ஒரே தொல்லை.
நானும் எவ்வளவோ சொல்லி பாத்தேன் அண்ணன் கேட்கற மாதிரி இல்லை, சரி அனுப்பித்தான் தொலைவோம் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு எஸ்.எம்.எஸ் வாங்கி பாத்தா MDNOKIA@GMAIL.COM அப்படிங்கற மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லி இருந்தது, அடப்பாவி நோக்கியா கம்பெனி எம்,டிக்கு சொந்தமா ஒரு டொமைன் வாங்கக்கூடவா காசிருக்காது, ஜிமெயில் ஐடிய வச்சிருக்கானே? 1100 மாடல்லயே 2ஜி அளவுக்கு சம்பாதிச்சிருப்பானேன்னு இதையும் சொன்னேன், எங்கண்ணந்தான் அடைந்தால் ஏழுகோடி இல்லையேல் தெருக்கோடின்னு உறுதியா நின்னதால வேற வழி இல்லாம இதுக்குன்னே ஒரு மெயில் ஐடிய ஓப்பன் பண்ணி பேரு, அட்ரஸ், போன் நம்பருன்னு எல்லாத்தையும் அனுப்பி வச்சேன்.
எவண்டா சிக்குவான்னு போர்வைய போத்திட்டு காத்திகிட்டு இருக்கானுகளே கம்முனாட்டி பசங்க மெயில் அனுப்புன ஒருமணி நேரத்துல ரிப்ளை வந்திருச்சு, அது என்னன்னா, இந்தமாதிரி ஏழுகோடியே நாற்பது லட்சம் ரூபா பரிசுத்தொகை உங்களுக்கு விழுந்திருக்கு, அதுக்கு வாழ்த்துக்கள், அப்புறம் இந்த பணம் உங்க கைக்கு கிடைக்கற வரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது, ஏன்னா சட்டசிக்கல் வந்துரும், டேக்ஸ் கட்ட சொல்லுவாங்க, பணத்த நாளைக்கு விமானத்துல அனுப்பி வைக்கிறோம், எங்க ஆபீசரு ஜேக்கப் ஆண்டர்சன் கூடவே வருவாரு, உங்களோட கிப்ட் பாக்ச கஸ்டம்சுல இருந்து ஈசியா வாங்கித்தருவாரு, அப்படி இப்படின்னு, கடைசியா மேட்டருக்கு வந்தானுக அதாவது உங்களோட ஐடி, ப்ரூப் ஒன்னும், கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் சார்ஜ் 15500 ரூபாயும் கொண்டு வாங்கன்னு.
நானும் உடனடியா ரிப்ளை எதுவும் பண்ணாம ஒரு ரெண்டுநாள் சும்மா விட்டுட்டேன், அடுத்தடுத்த நாள் மெயில் அனுப்பிட்டே இருந்தானுக, நாளைக்கு ப்ளைட் லேண்டிங் லேண்டிங்னு நான் ரிப்ளையே அனுப்பல, அண்ணன் வீட்டு பக்கமும் போகல, சரின்னு மூணாவது நாள் இதையெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு அண்ணன் வீட்டுக்கு போனா அவனுங்க அடுத்தநாளே போன் பண்ணி பேசியிருக்கானுக, 15500 ரூபாய் அமவுண்டை நாங்க சொல்ர அக்கவுண்ட் நம்பர்ல போடுங்கன்னு
நம்ம அண்ணன் ஏற்கனவே வயித்துக்கு கஞ்சி வாய்க்கு பீடின்னு வாழுற ஆளு, என்கிட்ட முன்னூரு ரூபாதான் இருக்குது, சனிக்கிழமை சம்பளம் வாங்குனா ஆயிரம் கிடைக்கும் மொத்தமா 1300 இப்ப வச்சுக்கங்க, அப்புறம் ஏழுகோடி கிடைச்சதும் மீதிய கொடுத்துடறேன்னு சொல்லி இருக்காரு, அவனுங்க அதெல்லாம் முடியாது மொத்தமா 15500 வேணும் இல்லைன்னா பணம் கிடைக்காதுன்னு சொல்லிட்டானுக
இப்படியே அடுத்தநாளும் போன் பண்ணி இருக்கானுக, நம்மண்ணன்னும் லேசுபட்ட ஆளா 15500 க்கு பதினைஞ்சு லட்சமா நீங்களே எடுத்துட்டு மீதிப்பணத்தை எனக்கு கொடுங்கன்னு கேட்டுருக்கார், அவன் கடுப்பாயி நாளைக்குள்ள பணம் கட்டல உனக்கு கிப்ட் கிட்டலன்னு கறாரா சொல்லி இருக்கான், அடுத்தநாள் நம்மாளு சரி உனக்கும் வேணாம் எனக்கு வேணாம் ஏழுகோடியில இரண்டு கோடிய நீயே வச்சுக்க, எனக்கு பேலன்ஸ் அஞ்சு மட்டும் போதும், டீலா? நோ டீலா?ன்னு கேட்க அவன் விவேக்கு ஒருபடத்துல சொல்லுவாரே அந்த ஒத்தவார்த்தை அத சொல்லிட்டு போன கட் பண்ணிட்டானாம்.
அன்னைக்கு சாயங்காலம் அவரு வீட்டுக்கு போயிருந்தேன், குவாட்டர ஊத்திட்டு பொலம்பிட்டு இருந்தாரு, அய்யோ போச்சே ஏழு கோடி போச்சே, இனி சூர்யாகிட்டத்தான் போயிதான் ஹாட் சீட்டுல உட்காரணுமா அவன் கேணத்தனமா கேள்வியெல்லாம் கேட்பானே, ஈசியா வந்தது மிஸ்ஸாயிடுச்சேன்னு, அட ஏண்ணா நீங்கவேற அவனுகளே பிராடு பசங்க, நாந்தான் அப்பவே சொன்னன்ல பணம் கேட்பானுகன்னு, நீங்கதான் கேட்கலன்னு சொல்லி சமாதானப்படுத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.
சாப்பிட்டுட்டு படுத்து தூங்கலாம்னு படுக்கும் போது என்னோட செல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது, உங்களுக்கு ஏழுகோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கு, உங்க அட்ரஸ், போன் நம்பர் இந்த மெயில் ஐடிக்கு அனுப்புங்க
MDHONDA@GMAIL.COM அடப்பாவிகளா மறுபடியும் மொதல்ல இருந்தா? அவ்வ்வ்வ்!!!!
டிஸ்கி : நிறைய பேருக்கு இந்தமாதிரி எஸ்.எம்.எஸ் வந்திருக்கும், இந்த எஸ்.எம்.எஸ்களுக்கு ரிப்ளை பண்ணுனா என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது, தெரிஞ்சுகட்டுமேன்னுதான் இந்த பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக