அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.
(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் رَضِيَ اللَّهُ عَنْهُ (புகாரி, முஸ்லிம்)
நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ (முஸ்லிம்)
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?
அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.
பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?
இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.
உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.
அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்+தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்
இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்
—
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக