சனி, ஜூலை 28, 2012

தொழுகையில் தேவையற்ற பிற எண்ணங்கள் தோன்றுகின்றனவே என்ன செய்ய?



தொழுகை என்பது அல்லாஹ்வுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பமாகும். முடிந்தவரை ஆபாச, கெட்ட அல்லது தொழுகை அன்றி வேறு பிற எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நாம் பார்ப்பது போன்ற உணர்வுடனும், படைத்த இறைவன் நம்மை பார்க்கின்றான் என்ற அச்சத்துடனும் தொழுகையில் ஈடுபட வேண்டும்.


“இறைவனை நீ பார்ப்பதைப் போன்று வணங்கு! நீ அவனை பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் உமர்(ரலி) நூல் புகாரி

நமது கட்டுப்பாட்டை மீறி நமது உள்ளத்தில் மோசமான எண்ணங்கள் ஏற்படுமானால் அதைத் தவிர்க்கப் பின் வரும் ஹதீஸ் வழிகாட்டுகின்றது


“ஷைத்தான் எனக்கு என் தொழுகையையும் ஓதுவதையும் குழப்பி விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவன் கின்ஸப் என்ற ஷைத்தான் ஆவான் அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உனது இடது புறம் மூன்று முறை துப்பு” என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன்.
உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நூல் :முஸ்லிம்

நமது கட்டுப்பாட்டை மீறி உமது உள்ளத்தில் ஏற்படுகின்ற மோசமான எண்ணங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எனது சமுதாயத்தினரின் உள்ளங்களில் ஏற்படும் எல்லா எண்ணங்களையும் மன்னித்து விடுவான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல் புகாரி.


அலுவலகத்திலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ நமது உயரதிகாரி நம்மைப் பார்க்கும் போது நாம் சிரத்தையுடனும் அக்கறையுடனும் பணிபுரிய முனைவோம். பிரபஞ்சத்திற்கே அதிபதியான நம்மைப் படைத்த இறைவன் முன் நிற்கிறோம் என்கிற எண்ணத்தை நாம் நமது மனதில் தொடர்ந்து இருத்திக் கொண்டால், இவ்வகைத் தொல்லைகளில் இருந்து விரைவில் இன்ஷா அல்லாஹ் விடுதலை பெறலாம்.

இறைவன் மிக அறிந்தவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...