'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), ஆதார நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)
கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர்:
குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும், தற்காலிகமாக நோன்பை விட்டுவிடச் சலுகை பெற்றுள்ளனர்.
'கர்ப்பிணிகளும், பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்து உள்ளார்கள்.' (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)
சலுகை என்றால் அறவே அவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ளக்கூடாது. ரமளானில் விட்டுவிட்டு, வேறு நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்று விடவேண்டும். '..எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும்நாட்களில் நோற்க வேண்டும்..' என்று திருமறை கூறுவதைப் புரிந்துகொள்வது போல், மேற்சொன்ன ஹதீஸையும் புரிந்து செயல்படுத்த வேண்டும்.
நோயாளிகள்:
நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும், நோன்பை விட்டுவிடச் சலுகை வழங்கப்பட்டுள்ளனர். நோய்க்கு ஆளானவர்கள் ரமளானில் நோன்பை விட்டுவிட்டு, நோய் நீங்கிய பிறகு விடுபட்ட நோன்பை நோற்க வேண்டும். மேலே நாம் குறிப்பிட்டுக் காட்டிய வசனத்திலிருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.
முதியவர்கள்:
முதியவர்களும் நோன்பை விட்டுவிடச் சலுகை பெற்றுள்ளனர். இவர்களின் சலுகை தற்காலிகமானதன்று. நிரந்தரமாகவே இவர்கள் நோன்பை விட்டுவிடலாம். முதமையின் காரணமாக நோன்பை விட்டவர்கள் வருங்காலத்தில் அதை நோற்க முடியாது. ஏனெனில் அதைவிட அதிக முதுமையில் அவர்கள் இருப்பார்கள்.
இவவாறு நோன்பை விட்டுவிடும் முதியவர்கள் ஒவ்வொரு நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) கூறும்போது, 'இது (முற்றிலுமாக) மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்' என்று விளக்கம் அளித்துள்ளனர். (ஆதார நூல்: புஹாரி)
எனவே முதிய வயதுடையவர்கள் ஒவ்வொரு நோன்புக்காகவும் ஒரு ஏழைக்கு உணவளித்து விட்டு நோன்பை விட்டுவிடலாம். 'ஒரு ஏழைக்கு உணவு; என்றுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதன் அளவு ஏதும் குர்ஆனிலோ, அல்லது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ கூறப்படவில்லை. எனவே ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மனிதனின் உணவு என்று எது கருதப்படுகின்றதோ அதைக் கொடுப்பதே சிறந்ததாகும். இந்த அளவு இடத்திற்கு இடம் மாறக்கூடியதாகும்.
மேலும் முதியவர்கள் ஒரு நோன்புக்காக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற இந்த கட்டளை, அவர்களுக்கு அதற்கான வசதி இருந்தால்தான். எவ்வித வசதியும் இல்லாவிட்டால் நோன்பு வைக்காத தள்ளாத வயதினர் ஏழைக்கு உணவேதும் வழங்கத் தேவையில்லை.
'அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை..' (அத்தியாயம் 2 ஸுரத்துல் பகராவின் 286வசனத்தின் ஒரு பகுதி)
என்று அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுவதைக் கருத்தில் கொண்டு, மேற்படி செயலைச் செய்யலாம். வேண்டுமென்றே நோன்பை முறித்தவர் அதற்கான பரிகாரம் செய்ய வசதி இல்லாதபோது அவருக்கு நபியவர்கள் சலுகை வழங்கியதிலிருந்து இதனை நாம் அறியலாம். (இது பற்றிய ஹதீஸ் மறதியாக உண்பது, பருகுவது என்ற தலைப்பின் கீழ் வருகின்றது)
மேலே குறிப்பிடப்பட்ட இவர்களைத் தவிர, மற்ற அனைத்து முஸ்லிம்களும் ரமளான் மாதத்தில் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும். ரமளானில் நோன்பை நோற்காமல் - தகுந்த காரணமின்றி - தள்ளிப்போடுவது கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக