நோன்பு நோற்றிருக்கும் போது யாராவது வீண் வம்புக்கு வந்தால் கோபத்தை ஏற்படுத்தும் செயல்கள் மூலம் சீண்டினால் அவருடன் மல்லுக்கு நிற்காமல் நான் நோன்பாளி என்று இருமுறை கூறிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
எதிராளியிடம் 'நான் நோன்பாளி!' என்ற பதிலை கோபப் படாமல் அடக்கத்துடன் கூறிவிட்டால் நாமும் நோன்பாளி தானே நாமும் அல்லாஹ்வுடைய நோன்பை நோற்றிருக்கத் தானே செய்கின்றோம் என்ற சிந்தனை நமக்கு வராமல் போய் விட்டதே சரியான நேரத்தில் அவராவது நமக்கு நினைவுப் படுத்தினாரே என்ற நல்லெண்ணம் அவருக்கு மேலோங்கும் இதன் மூலம் அவருடைய கோபம் காற்றாய் பறந்து விடலாம்.
இதனால் இருவரது நோன்பும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படும் நோன்பாக அமைந்து விடும். இருவரும் அல்லாஹ் வழங்கும் அபரிமிதமான கூலியை அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தில் அடைந்து கொள்வார்கள்.
ஏன் இந்த கட்டளை ?
நோன்பு அல்லாஹ்வுக்குரியது அல்லாஹ்வுடைய நோன்பை நோற்றிருக்கக்கூடிய நாம் முதலில் நாவை கட்டுப்படுத்த வேண்டும்.
வாக்கு வாதம் அதிகரித்து இருவருக்கும் சண்டை முற்றி விட்டால் நாவிலிருந்து நரகல் வார்த்தைகள் வெளியாகிக் கொண்டே இருக்கும்.
அவருடைய தாய்,தந்தையரை இவரும், இவருடைய தாய்,தந்தையரை அவரும் திட்டிக் கொள்வர் இவ்வாறு திட்டிக்கொள்வதை இஸ்லாம் ஆரம்ப காலத்திலேயே இதை பெரும் பாவம் எனக் கூறி தடைசெய்து விட்டது.
ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். புகாரி: 45973
வயதான பெற்றோரை உணவு,உறைவிடம் கொடுக்காமல் விரட்டி விடுவது எவ்வாறு பெரும் பாவங்களின் பட்டியலில் சேருமோ அவ்வாறே பிறர் மூலமாக தன் பெற்றோர் ஏசப் படுவதும், தூசிக்கப்படுவதும் பெரும்பாங்களில் சேரும் என்பதையே மேற்காணும் நபிமொழி விளக்குகிறது.
பெற்றோரை ஏசி முடித்ததும் அல்லது ஏசிக் கொண்டிருக்கையிலேயே கடும் சொற்களைக் கொண்டு ஒருவர் மற்றொருவரை திட்டிக் கொள்வார்கள் இதுவும் பாவத்தின் பட்டியலில் சேரும்.
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார். புகாரி: 6044
அதேப் போன்று இரண்டு பேர் திட்டிக்கொள்ளும் பொழுது அதில் அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாமல் இருந்தால் எதிராளியன் மீது மொத்தக் குற்றமும் பதிவாகி விடும் இது மிகப் பெரிய மறுமை நஷ்டமாகும்.
இரண்டுபேர் திட்டும்போது அநீதி இழைக்கப்பட்டவர் வரம்பு மீறாமல் இருக்கும்போது யார் ஆரம்பித்தார்களோ அவர் மீது (குற்றம்) பதிவு செய்யப்பட்டு விடும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹூரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார். நூற்கள்: முஸ்லீம்> அபூதாவூத்.
பெற்றோரையும் சகட்டு மேனிக்கு ஏசி விட்டு> நேரடியாக யாகவும் திட்டிக்கொண்டு இறுதியாக இருவரும் சாபமிட்டுக் கொள்வார்கள் நீ நல்லா இருப்பாயா நாசமா போ ? நோன்பு நாளில் கூட இப்படி செய்கிறாயே நீ ஒரு இறைமறுப்பாளன் என்று இன்னும் ஏராளமாக சபித்துக் கொள்வார்கள்.
இது எவ்வளவுப் பெரிய மறுமை நஷ்டம் என்பதை அவர்கள் அறிந்திருந்தால் அவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் வாழ்நாளில் இனி ஒரு தடவை இது மாதிரி நடந்து கொள்ள மாட்டார்.
ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ> 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக> இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்(ரலி) அறிவித்தார். புகாரி: 6045
இரண்டு நோன்பாளிகள் மோதிக்கொள்ளும் பொழுது கண்டிப்பாக இரண்டு நோன்பாளிகளின் நோன்பும் ஏற்றுக் கொளளப்படாத் நிலை உருவாகலாம் அல்லது ஒருவருயைட நோன்பாவது ஏற்றுக் கொளளப்படாத் நிலை உருவாகலாம்.
ஏற்றுக் கொளளப்படாத் நிலை உருவாவதை விட பாவங்கள் எழுதப்பட்டுவிடலாம். உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரமலானில் நன்மைகளை கொத்து கொத்தாக அறுவடை செய்து கொண்டிருக்கும் போது நாம் மட்டும் பாவத்தை சேர்க்கலாமா ?
இதனால் தான் பிரச்சனை வருவது மாதிரி தெரிந்தால் பிரச்சனை முற்றி விடாமல் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவதற்காக நான் நோன்பாளி என்று இரண்டு முறை கூறிவிட்டால் அல்லாஹ்வுடைய நோன்பு என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டு இருவரும் ஒதுங்கி கொள்வார்கள் என்ற நன்னோக்கில் மானிடம் முழுமைக்கும் அருட் கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! புகாரி 1894
இவ்வாறு ஒருவர் ரமலானில் நடந்து கொண்டார் என்றால் இது அவருக்கு ரமலானுக்குப் பிறகும் அவரைப் பின் தொடரும் நோன்பு மனித சமுதாயத்திற்கு கடமையாக்கப்பட்டதே பாவங்களை அழித்து நன்மைகளை அடைந்து கொள்வதற்கும் நற்செயல்கள் மூலமாக இறையச்சம் ஏற்பட வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் தான்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் 2:183.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக