புதன், ஜனவரி 25, 2012

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?ஆட்சித் தலைமை

ஆட்சித் தலைமை
'பெண்கள் ஆட்சித் தலைமையை ஏற்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. இது பெண்களின் உரிமையைப் பறிப்பதும் அவர்களை அவமானப்படுத்துவதுமாகும்' என்பதும் மாற்றார்கள் செய்யும் முக்கியமான விமர்சனமாகும்.

'பெண்கள் ஆட்சி செய்யும் சமுதாயம் வெற்றி பெறவே மாட்டாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியது உண்மை தான். நூல்: புகாரி 4425, 7099

ஆட்சித் தலைமை தவிர வேறு தலைமைகளை அவர்கள் வகிக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை.

மக்கள் தேர்வு செய்யும் ஆட்சித் தலைமை எவ்வாறு உருவாகிறது என்பதை முதலில் நாம் சிந்திப்போம்.
கொல்லைப்புறமாக பதவிக்கு வருதல்
அடிமட்டத்திலிருந்து ஒருவன் பாடுபடுவான். போராட்டங்களில் பங்கெடுப்பான். சிறைச் சாலையில் அடைக்கப்படுவான். அடி உதைகளுக்கு ஆளாவான். இப்படிப் பல தியாகங்கள் செய்த பின்னர் தான் படிப்படியாக உயர்ந்து தனது ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி மற்றவர்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னே வருகிறான். இதன் மூலம் ஆட்சித் தலைமையை ஏற்கிறான்.

ஆனால் பெண்கள் எவ்வாறு ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள்! கோஷம் போட்டு கொடி பிடித்து, பசைக் கலயம் சுமந்து, சுவரொட்டிகள் ஒட்டி போராட்டங்களில் பங்கு கொண்டு படிப்படியாகத் தான் தலைமைப் பதவியைப் பெறுகிறார்களாஎன்றால் நிச்சயமாக இல்லை.

கஷ்டப்பட்டு உழைத்துப் பதவியைப் பெற்றவனின் மனைவியாக அல்லது மகளாக இருப்பது தவிர இப்பதவிக்காக எந்தத் தியாகமும் செய்திருக்க மாட்டார்கள். தலைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவன் கட்சிக்காக கடுமையாக உழைத்து அப்பதவிக்குத் தகுதியானவனாக இருப்பான். ஆனால் தலைவனின் உறவுக்காரப் பெண் என்ற ஒரு காரணத்தை மட்டுமே முன்னிறுத்தி பெண்கள் தலைமைப் பதவியைப் பெறுகின்றனர்.

ஜவஹர்லால் நேருவுக்குப் பின் காங்கிரசில் எத்தனையோ தியாகிகளும், தலைவர்களும் இருந்தார்கள். நேருவின் மகள் என்ற தகுதியில் இந்திரா காந்தி பதவியைப் பெற்றார்.

இலங்கையில் பண்டார நாயக்கா படுகொலை செய்யப்பட்ட பின் அவரது கட்சியில் அடுத்த கட்டத் தலைவர்கள் பலர் இருந்தனர். ஆனால் ஒரு தியாகமும் செய்யாத அவர் மனைவி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா, அவரது மனைவி என்ற காரணத்தினால் பிரதமரானார்.

அது போலவே ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் மகள் என்ற காரணத்துக்காகவே சந்திரிகா இன்று அதிபராக வீற்றிருக்கிறார்.

ஜுல்பிகார் அலி புட்டோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் பேநஸீர் புட்டோ பாகிஸ்தானில் பிரதமராக முடிந்ததே தவிர அவரது கட்சியின் அடிமட்டத் தொண்டனின் அளவு கூட அவர் உழைத்ததில்லை. நுஸ்ரத் புட்டோ பதவியைப் பெற்றதும் பூட்டோவின் மனைவி என்பதால் தான்.

முஜிபுர்ரஹ்மானின் மனைவி என்ற தகுதியின் காரணமாக மட்டுமே ஷேக் ஹஸீனா பங்களாதேஷுக்கு பிரதமராக முடிந்தது. முஜிபுர்ரஹ்மானுடன் சேர்ந்து விடுதலைக்காக போராடி பல தியாகங்கள் செய்த பலர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஜியாவுர்ரஹ்மானின் மனைவி என்ற ஒரே தகுதியின் காரணமாகத் தான் கலிதா ஜியா இன்றைக்கு பங்களாதேஷின் பிரதமராக இருக்கிறார்.

இந்தோனேசியாவின் மிகப்பெரும் தலைவராக இருந்த சுகர்னோவின் மகள் என்ற ஒரே காரணத்துக்காக மேகவதி அந்த நாட்டுக்கு அதிபராக ஆகியிருக்கிறார்.

இங்கே கூட எம்ஜியாரின் மனைவி என்பதால் ஜானகியும், மனைவியைப் போன்றவராக மக்கள் கருதியதால் ஜெயலலிதாவும் பதவிக்கு வர முடிந்தது.

லல்லு பிரசாத் யாதவின் மனைவி என்ற ஒரே காரணத்துக்காக ரப்ரி தேவி பீகாரின் முதல்வராக முடிந்தது.

என்.டி.ராமராவின் மனைவி என்பதற்காக அவரது கட்சியின் தலைமைப் பொறுப்பை சிவபார்வதியால் பெற முடிந்தது.
ஹிபதுல்லாஹ்வின் மனைவி என்பதற்காகவே நஜ்மா ஹிபதுல்லாவுக்கு பதவி கிடைத்தது.

நாளை சோனியா காந்தியோ, பிரியங்காவோ பிரதமரானால் அதுவும் இப்படிக் கிடைத்த பதவியாகத் தான் இருக்கும்.

ஆண்கள் ஒரு பதவியைப் பெறுவதற்குச் செய்யும் தியாகங்கள் எதையும் செய்யாமல் தான் பெண்கள் ஆட்சித் தலைமைக்கு வருகிறார்கள். அப்படித் தான் வர முடியும்.

இது எவ்வளவு பெரிய அக்கிரமம்! தனக்கு தலைமைப் பதவி ஒரு காலத்தில் கிடைக்கும் என்பதற்காக பலவித தியாகங்கள் செய்தவர்களின் தியாகங்கள் இதனால் அலட்சியப் படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு மக்கள் செய்யும் பெரியதுரோகமாகும்.

கருணாநிதி எப்படித் தலைவராக ஆனாரோ அப்படி ஜெயலலிதா தலைவியாக ஆகவில்லை! பெண்ணுக்குப் பதவி கிடைக்கிறது என்பதற்காக தியாகங்களைப் புறந்தள்ளி விட முடியாது.

இவ்வாறு இல்லாமல் பதவியைப் பெறுவது என்றால் பெண்கள் வேறு விதமான (?) விலையைக் கொடுக்காமல் பதவியைப் பெற முடியாது என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லை.

இது முதலாவது காரணமாகும்.
கேடயமாக்கப்படும் பெண்மை.
பெண்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தமது தவறுகளுக்குப் பெண்மையையே கேடயமாக்குவார்கள். ஆண்கள் அவ்வாறு ஆக்குவதில்லை.

பெண் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் தவறான நடவடிக்கைகள் தக்க காரணத்துடன் விமர்சிக்கப்பட்டாலும் உடனே 'நான் ஒரு பெண் என்பதால் இப்படி விமர்சிக்கிறார்கள்' என்று குண்டைத் தூக்கிப் போட்டு வாயை அடைப்பார்கள். இந்திராவிலிருந்து ஜெயலலிதா வரை இதைக் கையாண்டுள்ளனர்.

அவர்களது நடத்தை, ஒழுக்கம் போன்றவைகளை விமர்சிக்கும் போது இப்படிக் கூறினால் அதையாவது ஏற்றுக் கொள்ளலாம். ஊழலை விமர்சிக்கும் போது கூட இதைக் கேடயமாகப் பயன்படுத்தினால் இதற்காகவே அவர்கள் அப்பதவியில் இருக்கத் தகுதியற்றுப் போகிறார்கள்.

பெண்மை ஊழலைக் காக்கும் கேடயமல்ல என்று பொங்கி எழ வேண்டிய பெண் அமைப்புகளும் சேர்ந்து கொண்டு பெண் என்பதற்காக இந்தப் பாடுபடுத்தலாமா?' என்று பல சந்தர்ப்பங்களில் முழங்கியுள்ளனர்.

இதன் காரணமாகத் தான் பெண் ஆட்சியாளர்கள் செய்யும் சிறிய அளவிலான ஊழல் மற்றும் முறைகேடுகளை விமர்சனம் செய்ய மீடியாக்கள் தயங்குகின்றன. ஊழலும், அக்கிரமும் எல்லை மீறிப்போகும் போது தான் பெண் ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படுவார்கள்.

எவ்வித விமர்சனங்களும் தங்கள் மீது வராமல் பெண்மையைக் கேடயமாகப் பயன்படுத்துவது அப்பெண்ணின் சுயநலத்துக்குப் பயன்படலாம். மக்களுக்கோ, மற்ற பெண்களுக்கோ, நாட்டுக்கோ இது மாபெரும் தீமையாக முடியும்.
இது இரண்டாவது காரணம்.
வாரிசுகள் திணிப்பு.
பொதுவாக ஆண் தலைவர்கள் தமது வாரிசுகளைத் திடீரென்று தினிக்க மாட்டார்கள். படிப்படியாக நுழைத்து தங்கள் வாரிசுகளும் தகுதியானவர்கள் தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு தினிப்பார்கள்.

பெண்களோ எந்த விதமான தர்மத்தையும், நியாயத்தையும் கடைப் பிடிக்காமல் தமது வாரிசுகளைத் தினிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திரா காந்தியும், ஸ்ரீமாவோவும், நுஸ்ரத் புட்டோவும் இதற்குச் சரியான உதாரணங்களாக உள்ளனர்.
இது முன்றாவது காரணம்.
சர்வாதிகாரம்
வாய்ப்புக் கிடைக்காத வரை பெண்கள் இயல்பில் சாதுவானவர்கள் தான். ஆனால் ஆட்சித் தலைமை கிடைத்து விட்டால் அவர்கள் சர்வாதிகாரம் செய்வதையும் அதிக அளவில் காணலாம்.இந்திரா, சந்திரிகா, ஜெயலலிதா என்று ஏராளமான உதாரணங்கள் கண் முன்னே உள்ளன.

பத்து ஆண் ஆட்சியாளர்களில் ஒருவர் சர்வாதிகாரியாக இருப்பது அரிதானது.

பத்து பெண் ஆட்சியாளர்களில் ஒரு ஜனநாயகவாதி இருப்பது அபூர்வத்திலும் அபூர்வம்.

இப்படி ஆண்களை மிஞ்சும் அளவுக்கு 'ஆண் தன'த்தை வெளிப்படுத்தினால் தான் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற மனோ நிலைக்கு ஆளாகி இப்படி நடந்து கொள்கின்றனர்.
இது நான்காவது காரணம்.
இரவு பகல் எந்நேரமும் முழுமையாக ஈடுபட வேண்டிய பணி தான் தலைமைப் பதவி என்பது. இத்தகைய கடினமான ஒரு பணியைப் பெண்கள் சுமக்காமல் இருந்தால் பெண் குலத்துக்கே கேடு ஏதும் ஏற்படாது.

அது போக மாதவிடாய்க் காலம், மாதவிடாய் அடியோடு நிற்கும் வயது ஆகியவை அவர்களைத் தாறுமாறாகச் சிந்திக்க வைக்கும் இந்த நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒரு நாட்டையே பாதித்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண்ணுரிமைக்குச் சம்மந்தமில்லை.
பெண்ணிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதும் அல்ல. 100 கோடி மக்களைக் கொண்ட நாட்டில் 50 கோடி பெண்கள் உள்ளனர் என்றால் நாட்டின் அதிபர் பதவி ஒருவருக்குத் தான் கிடைக்கும்.

50 கோடிப் பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ, கணிசமான பெண்கள் சம்மந்தப்பட்டதாகவோ இருந்தால் தான் அது பெண்ணுரிமை சம்மந்தப்பட்டதாக இருக்க முடியும்.

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, மணவாழ்வை தேர்வு செய்யும் உரிமை போன்றவை அனைத்துப் பெண்களின் அல்லது கனிசமான பெண்களின் உரிமை பற்றியதாகும். ஆட்சித் தலைமை என்பது பெண்ணுரிமையில் சேராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...