ஆண்களுக்கு இருப்பது போல் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இஸ்லாத்தில் இல்லை என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் கொண்டுள்ளனர். பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியாததால் தான் அவர்கள் இவ்வாறு கருதுகின்றனர். விவாகரத்துச் செய்யும் முறையில் தான் இருவருக்குமிடையே வித்தியாசங்கள் உள்ளனவே தவிர உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.
இஸ்லாத்தை அறியாத முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரால் இந்த உரிமை இன்று மறுக்கப்பட்டாலும் அதற்காக இஸ்லாத்தைக் குறை கூற முடியாது.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் என்பாரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி 'சரி' என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5273, 5277
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.
பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.
பெண்கள் விவாகரத்துப் பெற இதை விட எளிமையான வழி எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப் பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.
குடிகாரக் கணவனை, கொடுமைக்கார கணவனைப் பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எவ்விதக் காரணமுமின்றி கணவனைப் பிடிக்காவிட்டால் கூட கணவனைப் பிரியலாம் என்பதையும் மேற்கண்ட சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.
இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.
இதைத் திருக்குர்ஆன் 'உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?' (4:21) என்றும்
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (2:228) என்றும் கூறுகிறது.
பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமை வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன.
கணவனைப் பிடிக்காத பெண்கள் விவாகரத்துச் சட்டம் கடுமையாக இருப்பதால் கணவரையே கொலை செய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன.
பெண்கள் ஸ்டவ் வெடித்துச் செத்தால், விஷம் கொடுக்கப்பட்டு கணவர்கள் கொல்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காலையில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானவை மனைவியரால் செய்யப்படும் கொலைகளாகும். சமையல் அவர்கள் கையில் இருப்பதால் எளிதாகக் கதையை முடிக்கிறார்கள்.
அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை வெட்டிக் கொலை செய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் பெற்று, தனக்கு விருப்பமானவனைச் சட்டப்படி மணந்து கொள்ள வழியிருந்தால் இது போன்ற கொடூரம் நடைபெறாது.
எனவே தான் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மிக மிக எளிமையாக்கியுள்ளது.
ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஜீவனாம்சம்
'விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு இஸ்லாத்தில் ஜீவனாம்சம் வழங்கப்படுவதில்லை' என்பதும் முஸ்லிமல்லாதாரால் அதிகமாக விமர்சனம் செய்யப்படும் விஷயமாகும்.
ஷாபானு வழக்கின் போது தான் இந்தியாவின் அனைத்துப் பத்திரிகைகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இஸ்லாத்தைக் குறை கூறின என்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், இஸ்லாத்தை விமர்சிக்க விரும்பும் போதெல்லாம் இந்தப் பிரச்சனையை அவர்கள் குறிப்பிடத் தவறுவது கிடையாது.
ஜீவனாம்சம் வழங்குவது அவசியம் என்போர் அதை நியாயப்படுத்துவதற்கு கூறும் காரணங்களைக் காண்போம்.
இல்லற வாழ்வில் அதிகமான சிரமத்துக்கும், இழப்புக்கும் ஆளாகுபவள் பெண் தான். ஒரு ஆணுடன் சிறிது காலம் அவள் இல்லறம் நடத்துவதால் தனது அழகையும், இளமையையும் இழந்து விடுகிறாள். இந்த நிலையில் அவள் விவாகரத்துச் செய்யப்பட்டால் அவளது எதிர் காலம் என்னாவது? எனவே அவளது எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு தான் விவாகரத்து செய்த கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்கிறோம்'. ஜீவனாம்சத்தை நியாயப்படுத்துவோர் கூறும் காரணம் இது தான். 'ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம்' என்று கூறுவோரும் இவ்வாறு கூறுவது தான் இதில் வேடிக்கை. இவ்வாறு கூறுவது தங்கள் கொள்கைக்கே எதிரானது என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டு இருவரும் பிரிகிறார்கள் என்றால் கணவன் மட்டும் மனைவிக்கு ஜீவனாம்சம் ஏன் கொடுக்க வேண்டும்? இருவருமே எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்றல்லவா சமத்துவம் பேசுவோர் கூற வேண்டும். கூறுபவர்களுக்கு தகுதி இல்லை என்றாலும் இந்தக் கூற்றில் உள்ள நியாயத்தை மட்டும் அலசுவோம்.
இந்த நியாயமான காரணத்தை மனிதாபிமானமுள்ள எவரும் மறுக்க முடியாது. இல்லற வாழ்வில் ஒரு பெண் அதிக சிரமத்தை அடைவதும், அதிகமாக இழப்பதும், அவளது எதிர்காலம் கேள்விக் குறியாகும் என்பதும் உண்மை. இந்தக் காரணத்தை மாற்றார் மட்டுமின்றி எந்த முஸ்லிமும் மறுப்பது கிடையாது.
காரணம் உண்மை என்றாலும் அந்தக் காரணத்துக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட தீர்வு சரியில்லை என்பதே முஸ்லிம்களின் வாதம். அதாவது மேற்கண்ட காரணத்தினால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கச் சொல்வது சரியான பரிகாரமாகாது. ஏனெனில் இவர்கள் நியாயப்படுத்துகின்ற ஜீவனாம்சம் அந்தக் காரணத்தைக் களைய உதவவில்லை என்பதுடன் வேறு மோசமான விளைவையும் ஏற்படுத்தி விடுகின்றது.
ஒருவன் விவாகரத்துச் செய்யும் போது அவனிடம் எந்த விதமான வசதியும் கிடையாது
என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் ஜீவனாம்சம் வழங்குமாறு எந்த நீதி மன்றமும் உத்தரவிடாது. அப்படியே உத்தரவிட்டாலும் அவனால் அதை நிறைவேற்ற முடியாது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக அவனைக் கைது செய்ய முடியுமே தவிர விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கு எதையும் அவனிடமிருந்து பெற்றுத் தர முடியாது.
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாகவே உள்ளனர் என்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது விவாகரத்துச் செய்யப்படும் பெரும்பாலான பெண்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வழியில்லை; இவர்களைப் பொருத்த வரை ஜீவனாம்சம் என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
வசதியுள்ளவர்கள் விஷயத்திலாவது நியாயம் வழங்கலாமே என்று கேட்கலாம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியும் அர்த்தமற்றுப் போகின்றது.
விவாகரத்துச் செய்தவன் வசதி மிக்கவன் என்றே வைத்துக் கொள்வோம். ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என்று அவன் முடிவு செய்து விட்டால் அதைக் கொடுக்காமலிருக்க அவனால் முடியும்.
தன்னிடம் எவ்வளவு தான் வசதிகள் இருந்தாலும் எந்த வசதியுமே தன்னிடம் இல்லை என்று கூறிப் பொய்யான சான்றுகளை அவனால் தயாரிக்க முடியும். ஆயிரக்கணக்கான அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரிகளையே ஏய்த்து ஏப்பம் விடுவோர், ஒரு அபலையை ஏமாற்றுவது பெரிய காரியம் அன்று. வசதியுள்ளவர்கள் தாமாக மனது வைத்தால் தான் ஜீவனாம்சம் கிடைக்க வழி உண்டு. இல்லையெனில் இவர்கள் விஷயத்திலும் சட்டம் ஏட்டுச் சுரைக்காய் தான். இது முதலாவது காரணம்.
பொருளாதாரத் தகுதியை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் திருமணங்கள் நடக்கின்றன. ஏழைப் பெண்களுக்கு ஏழை ஆண்களும், வசதி மிக்க பெண்களுக்கு வசதி மிக்க ஆண்களும் தான் வாழ்க்கைத் துணைவர்களாகின்றனர். இதில் ஒன்றிரண்டு விதி விலக்குகள் இருக்கலாம். ஆயினும் பொதுவான நிலைமை இது தான்.
வசதியான ஆடவனை மணந்தவள் - அதாவது வசதியான பெண்மணி- அவனிடமிருந்து கிடைக்கும் ஜீவனாம்சத்தை எதிர் பார்த்து வாழும் நிலையிலிருக்க மாட்டாள். அவளைப் பொருத்த வரை இந்த ஜீவனாம்சம் தேவையில்லாத ஒன்று. யாருக்குக் கிடைக்க ஓரளவாவது வாய்ப்பு உள்ளதோ அவளுக்கு அது தேவையில்லை. வசதியற்றவனை மணந்தவளுக்கு - அதாவது ஏழைப் பெண்ணுக்கு - ஜீவனாம்சம் தேவை என்றாலும் அவளது கணவன் அதைக் கொடுக்க முடியாதவனாக இருக்கிறான்.
யாருக்குத் தேவையில்லையோ அவளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது; யாருக்குத் தேவையோ அவளுக்கு கிடைக்க வழியில்லை. இது இரண்டாவது காரணம். ஆக மொத்ததில் ஜீவனாம்சம் என்பது நடைமுறைப்படுத்த சிரமமானதாகவும் எந்தக் காரணத்துக்காக அது நியாயப் படுத்தப்படுகின்றதோ அந்தக் காரணத்தைக் களைய உதவாததாகவும் உள்ளது.
ஜீவனாம்சம் வாங்கித் தருவதாக சில வழக்கறிஞர்கள் பெண்களைத் தூண்டி விட்டு ஜீவனாம்சத்தை விட அதிகமாகவே அவர்களிடம் கறந்து விடுவதையும் நாம் காண்கிறோம்.
நீதி மன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகும் ஜீவனாம்சம் பெற முடியாமல் நீதி மன்றத்துக்கு மீண்டும் மீண்டும் அலைபவர்களையும் பார்க்கிறோம்.
ஒரு சில ஆண்கள் நீதிமன்றத்தில் அற்பமான ஜீவனாம்சத் தொகையைச் செலுத்துகின்றனர். அதை மாதா மாதம் நீதிமன்றத்தில் வந்து பெறுவதற்காக பயணச் செலவு, நீதிமன்ற அலுவலர்களுக்கு லஞ்சம் என்றெல்லாம் கழித்துப் பார்த்தால் ஒன்றுமே பெண்களுக்கு மிச்சமாவதில்லை என்பதையும் கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த ஜீவனாம்சத்தினால் அரைக் காசுக்கு உபயோகம் இல்லை என்று தெரிந்து கொண்டே தான் இது சிறப்பான தீர்வு' என்று கூறி தங்களைத் தாங்களே சிலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
இவற்றையெல்லாம் கடந்து, முறையாக ஜீவனாம்சம் கிடைக்கிறது என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்போது வேறொரு மோசமான விளைவு ஏற்படக் கூடும்.
விவாகரத்துச் செய்யப்பட்டவள் மரணிக்கும் வரை அல்லது அவள் மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும்.' சட்டம் இப்படித் தான் கூறுகிறது.
முன்னர் நாம் குறிப்பிட்ட இடையூறுகளைக் கடந்து விவாகரத்துச் செய்யப்பட்ட அனைவருக்கும் ஜீவனாம்சம் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
திருமணம் செய்து கொள்வதால் கணவனுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்; கணவனின் குடும்பத்திற்கும் பணிவிடை செய்ய வேண்டும்; ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்பதையெல்லாம் விவாகரத்துச் செய்யப்பட்டவள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறாள்.
மறுமணம் செய்யும் வரை ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்பதையும் அவள் அறிந்தால் மறுமணம் செய்யும் முடிவுக்கு வரமாட்டாள். பழைய கணவனிடமிருந்து தொடர்ந்து ஜீவனாம்சம் பெறுவதையே தேர்வு செய்வாள்; சுதந்திரப் பறவையாகத் திரிவதையே அவள் விரும்பி வரவேற்பாள்.
வயிற்றுப் பசியைப் பொறுத்த வரை அவளுக்குக் கவலையில்லை. அவளுடைய உணர்ச்சிகள் என்னாவது? ஒரு முறை நடைபெற்ற திருமணத்தால் கணவனுடன் பிணக்கேற்பட்டுத் அதனால் மனம் புண்பட்ட இவள் திருமணமில்லாத வழிகளில் தான் உணர்ச்சிகளைத் தீர்க்க முயல்வாள்.
இன்னொருவனுக்குச் சுகமளித்து விட்டுப் பழைய கணவனிடம் ஜீவனாம்சம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? திட்டவட்டமாக ஜீவனாம்சம் கிடைத்து விடும் என்ற நிலையில் இந்த விளைவு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. விவாகரத்துச் செய்யப்பட்ட அனைத்துப் பெண்களும் இப்படி நடப்பார்கள் என்று நாம் கூறவில்லை. கணிசமானவர்கள் இப்படி நடக்க ஆரம்பிப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்த எண்ணம் நாளடைவில் பரவி விடும் என்றே கூறுகிறோம்.
இந்தப் பெண்களின் நிலைக்குப் பரிகாரம் தான் என்ன? இந்த ஜீவனாம்ச முறை குறைபாடு உடையது என்றால் குறைபாடு இல்லாத மாற்று வழி தான் என்ன? அந்தப் பெண்களின் எதிர் காலம் என்னாவது? என்ற கேள்விகளுக்கு இஸ்லாத்தின் விடை என்ன?
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு மூன்று வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஏன் ஜீவனாம்சம் கொடுப்பதில்லை
http://www.youtube.com/watch?v=a-XOLTBdtEk
ஜீவனாம்சம்.
http://www.youtube.com/watch?v=x3-VlHCO0Pc
ஷாபானு வழக்கில் ஜீவனாம்சம்...?
http://www.youtube.com/watch?v=SLg50lbc8uM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக