திங்கள், ஜனவரி 30, 2012

இனிய இல்லறம் (18+ only) Part-1

‘நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.



அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்!



அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்’ (அல்குர்ஆன் 4:19)



பெண்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளன? என்பதை இவ்வசனம் அழுத்தமாகச் சொல்வதைக் கடந்த தொடர்களில் அறிந்தோம்.



இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.



இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.



திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.



ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.



திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.



இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் – மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?



அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். ‘நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்’ என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.



எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.



இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)



மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.



பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.



பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)



நாம் வாகனத்தில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கே மனிதனோ ஏனைய உயிரினங்களோ வந்தால் பெரும்பாலும் அதில் நமது வாகனம் மோதிவிடும். அந்த உயிரினத்துக்கோ நமக்கோ ஆபத்து ஏற்பட்டு விடும். ஆனால் எருமை மாடுகள் குறுக்கே வந்தால் விபத்துகள் நடப்பதில்லை. அது நிதானமாகத் தான் வரும். நாம் வேகமாக வந்தால் அது மிரண்டு போய் நம் வண்டியில் வந்து மோதாது என்று அறிந்து வைத்திருக்கிறோம். எனவே எருமையின் அந்த நிதானத்தைப் புரிந்து கொண்டு வேகமாகச் சென்று விடுகிறோம்.



பெண்களை எருமை மாட்டுடன் ஒப்பிடுவதற்காக இதைக் கூறவில்லை.



எருமையின் சுபாவம் இதுதான் என்று ஏற்றுக் கொள்ளும் போது அதற்கேற்ப நடந்து கொள்கிறோம் அல்லவா! அந்தப் பக்குவம் ஆண்களுக்கு வேண்டும்.



நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது – அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.



இதுபோல் தான் பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.



இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை. அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.



இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.



இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான். மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!

Note: இது என் சினீயார்(Senior) எழுதியது! இதை எழுத எனக்கு இன்னும் தகுதிவர வில்லை உங்கள் கருத்துகள் அவரிடம் பரிமாற்றம் செய்யபடும்!!!

1 கருத்து:

  1. Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
    WhatsApp +91 7795833215

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...