கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை சீர்குலைப்பதற்கு மத்திய அரசின் சதித்திட்டம் தான் முல்லைப் பெரியாறு சர்ச்சையின் பின்னணியில் இருப்பதாக அணுமின்நிலைய எதிர்ப்பாளர்களின் கூற்று நிரூபணமாகி வருகிறது.
ஒரு புறம் முல்லைப் பெரியாறு சர்ச்சை பற்றி எரியும் வேளையில் மறுபுறம் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் நிசப்தமாக காய்களை நகர்த்தி வருகின்றன.
முல்லைப்பெரியாறு பிரச்சனையை ஊதிப்பெருக்கிய கேரள மாநில காங்கிரஸ் அரசு இந்த நாடகத்தில் தங்களது ரோலை கனகச்சிதமாக நிறைவேற்றிவிட்டு நழுவுவதற்கு முயன்று வருகின்றது.
முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புவி அதிர்வுகள் ஏற்பட்டதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளை கவனமாக பரிசோதிக்க வேண்டியுள்ளது. உண்மையிலேயே நில அதிர்வு ஏற்பட்டதா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
ரஷ்ய தொழில்நுட்பத்தின் உதவியுடன் 13 ஆயிரம் கோடி செலவில் உருவான கூடங்குளம் அணுமின்நிலையம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இச்சூழலில்தான் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை இழக்காமலிருக்க ஒரே நேரத்தில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கும், அணுமின் நிலையத்திற்கும் ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டார். அணுமின்நிலையம் சுமூகமாக இயங்க வேண்டுமெனில் மாநில அரசின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நிபுணர்கள் குழுவை நியமித்தது. அணுமின்நிலைய எதிர்ப்பாளர்களையும் உட்படுத்தி தமிழக அரசும் ஒரு குழுவை உருவாக்கியது. இரு தரப்பினரும் இரண்டு முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவி, இப்பிரச்சனை தேசிய அளவில் அனைவரது கவனத்தை ஈர்த்த வேளையில்தான் இடுக்கியில் மிதமான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக செய்தி பரவியது.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டது போலவோ என்னவோ அமெரிக்காவில் வசிக்கும் கேரளத்துக்காரர் சோஹன்ராய் ‘டேம்999’ என்ற க்ராபிக்ஸ் கலந்த திரைப்படத்தை வெளியிட முடிவெடுத்தவுடன் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.
கூடங்குள அணுமின்நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு தெரிவித்த வைகோ, சீமான் போன்ற தமிழக அரசியல்வாதிகள் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தங்களது கவனத்தை திசை திருப்பினர். கூடங்குளத்திற்கு வருகை தந்து அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூட முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
தமிழர்களை உசுப்பேற்றிவிட கேரளா மாநில பா.ஜ.கவின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சா குண்டர்கள் பெரியாறு அணைக்கு அருகிலுள்ள பேபி அணைக்கு கடப்பாறைகளுடன் சென்றனர். இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பெரியாறு அணையை நோக்கி பேரணி நடத்தி அணையின் கேட்டிற்கு சேதத்தை விளைவித்தனர். கூடவே எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம் மேற்கொண்டு பிரச்சனையை ஊதிப்பெருக்கினார். தமிழகத்தில் வைகோ ரஷ்யா போல இந்தியா துண்டு துண்டாக உடைந்துவிடும் என்பது போன்ற உணர்ச்சியை தூண்டும் அனல் பறக்கும் அறிக்கைகளை வெளியிட்டார்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றால் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த ஜெயலலிதாவுக்கும் முல்லைப் பெரியாறு பிரச்சனை ஆறுதலை தந்தது.
இதேவேளையில் கேரள மாநில இடுக்கியில் தமிழகத்தின் ஐயப்ப பக்தர்களை தடுத்து நிறுத்தி செருப்பு மாலை அணிவித்ததாகவும், தமிழக தோட்டத் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாயின. இச்செய்திகள் தமிழகத்தில் நிலைமையை மோசமாக்கியது. அரசின் உதவித்தொகை கிடைக்கும் என செய்தியை பரப்பி தமிழக தோட்டத் தொழிலாளர்களை தமிழகத்தை சார்ந்த சிலரே இங்கே அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மலையாளிகள் தாக்கப்படுகின்றார்கள் என்ற செய்தியும் கேரள ஊடகங்களால் பரப்புரைச் செய்யப்படுகிறது. இவ்வாறு இரு மாநில மக்களிடையே உணர்ச்சியை தூண்டி முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பி விட்டு கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்சனையை தணிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
முல்லைப்பெரியாறு பிரச்சனையின் பின்னால் ஊடகங்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், கூடங்குளம் போராட்டத்தை நிரந்தரமாக அடக்கி ஒடுக்குவதற்கான முயற்சிகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. ஆயுள்தண்டனை வழங்கப்படும் தேசத்துரோக குற்றம் உள்பட ஏராளமான வழக்குகளை தமிழக போலீஸ் போராட்டத்தில் ஈடுபடுவோர் சுமத்தியுள்ளது. மேலும் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஆறு அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி வருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், வழக்கு மட்டும் போட்டால் போதாது நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தமிழக அரசை தூண்டி விடுகிறார்.
கோடிகளை கொட்டியாகிவிட்டது இனி ஒன்றும் செய்ய இயலாது எனக்கூறி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீர்குலைக்க மத்திய-மாநில அரசுகள் தயாராகிவிட்டன. இதனைப் புரிந்துகொள்ளாமல் முல்லைப்பெரியாறு விவகாரம் என்ற பெயரால் மொழி உணர்வுகளுக்கு அடிமைப்பட்டுப்போன தமிழக-கேரள மக்களை நினைத்து பரிதாப உணர்வே ஏற்படுகிறது!
அ.செய்யது அலீ.http://www.thoothuonline.com
நண்பருக்கு வணக்கம் . தங்கள் கருத்துகளில் எனக்கு மாற்று கருத்து உள்ளது .
பதிலளிநீக்குஅமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் டேம் 999 படத்தை இயக்கினார் என்கிறீர்கள் ... ஆனால் ஏன் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவர் அணு மின் நிலயத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறார் என்பதை கேட்க தவறி விட்டீர்கள் .
126 வருடம் முன் கட்டப்பட்ட அணை பாதுகாப்பானது என்பதை ஒத்து கொள்ளுகிறீர்கள் ( நானும் ஒத்து கொள்ளுகிறேன் ) . ஆனால் அதிநவீன தொழில் நுட்பத்தில் கட்டப்படும் அணுமின் நிலையம் பாதுகாப்பு அற்றது என்கிறீர்கள் .
// ஆயுள்தண்டனை வழங்கப்படும் தேசத்துரோக குற்றம் உள்பட ஏராளமான வழக்குகளை தமிழக போலீஸ் போராட்டத்தில் ஈடுபடுவோர் சுமத்தியுள்ளது.//
உங்களிடம் ஒரே ஒரு சின்ன கேள்வி . அரசின் சொத்தான அணுமின் நிலையத்தை குண்டு வீசி தகர்ப்போம் என்று சொன்னதற்காக பாரத ரத்னா விருது கொடுக்க முடியுமா ...?
// போராட்டத்தில் ஈடுபடும் ஆறு அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி வருவதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், வழக்கு மட்டும் போட்டால் போதாது நடவடிக்கையும் மேற்கொள்ளவேண்டும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தமிழக அரசை தூண்டி விடுகிறார்.//
மடியில் கனம் இல்லை எனில் கணக்குகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் உண்மையை விளக்கட்டுமே ....
தங்கள் கட்டுரை உண்மையை அறிந்து கொள்ளாமல் எழுதப்பட்டுள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து . நன்றி
வாங்க இருதயம் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பதிலளிநீக்கு