செவ்வாய், டிசம்பர் 06, 2011

துபாயிலிருந்து நிச்சயதார்த்தத்திற்கு வந்த வாலிபர் பலி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள், வாலிபர் தனியார் பஸ் மோதி இறந்தார். உயிருக்கு போராடிய வாலிபரை, பணம் செலுத்தாததால், தனியார் மருத்துவமனை டாக்டர் சிகிச்சை அளிக்க முன் வராதது, மக்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம், எஸ்.எம்.ஜி., நகரை சேர்ந்தவர் பழனி. இவரின் மகன் ஓம்குமார்,32. பி.இ., பட்டதாரி. துபாயில் பணிபுரிந்து வந்தார். திருமண நிச்சயதார்த்தத்திற்காக, சில தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் வந்தார். கடந்த 4ம் தேதி, நிச்சயதார்த்தம் நடந்தது. மறுநாள் காலை, தனது வருங்கால மனைவிக்கு லேப்-டாப் வாங்கிக் கொடுப்பதற்காக, வேலூர் சென்றார். அன்று இரவு, துபாய் செல்ல வேண்டும் என்பதால், மோட்டார் சைக்கிளில், காஞ்சிபுரம் திரும்பினார். பகல் 1.25 மணிக்கு, பொன்னேரிக்கரை அருகே வந்த போது, பின்னால் வந்த தனியார் பஸ், அவர் மீது மோதியது.பலத்த காயமடைந்தவரை, அவ்வழியே வந்த ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் ஏற்றி, தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார். அங்கிருந்த டாக்டர், முதலுதவி அளிக்க, கையெழுத்து போடும்படி, ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார். மேலும், பணம் செலுத்தினால் மட்டுமே, சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, ஓம்குமார், தான் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொடுத்து, தனக்கு சிகிச்சை அளிக்கும்படி கெஞ்சியுள்ளார். நகைகளை ஏற்க மறுத்த டாக்டர், சிகிச்சை அளிக்க முன் வரவில்லை. சில மணி நேரத்தில், ஓம்குமார் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த அவரின் உறவினர்கள், மருத்துவமனையில் குவிந்தனர். அவரின் நண்பர்களிடம், ஆட்டோ டிரைவர் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். ஆத்திரமடைந்த நண்பர்கள், அங்கிருந்த டாக்டர்களை தாக்கினர். போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.அதன் பின், உறவினர்கள் ஓம்குமார் உடலை வாங்கிச் சென்றனர். விபத்து குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். "மருத்துவமனை நிர்வாகம் மீது, ஓம்குமார் தரப்பில், புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. டாக்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக, மருத்துவமனை தரப்பிலும் புகார் அளிக்கப்படவில்லை' என, போலீசார் தெரிவித்தனர்.

dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...