எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது. குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.
இஸ்லாத்தின் அடிப்படையான ‘லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்’ என்ற கலிமாவை உங்கள் குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்க முயற்சியுங்கள். ஆராட்டும் போதும் தாலாட்டும் போதும் கலிமாவை உரக்க மொழிந்து, அது அவர்களது ஆழ்மனதில் பதிய வைக்க முயலுங்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்; அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்; நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்த்துங்கள்.
அல்லாஹ்தான் படைத்தவன்; பாதுகாப்பவன்; உணவளிப்பவன்; நிவாரணமளிப்பவன். அனைத்து நிலைகளிலும் நாம் அவனிடமே மீளவேண்டும் என்ற என்ற எண்ணத்தை உங்கள் குழந்தையின் இதயத்தில் வரைந்து விடுங்கள்.
ஷிர்க்-குப்ர் குறித்து எச்சரிக்கை செய்யுங்கள். அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மட்டுமே உன்னைப் படைத்துள்ளான். எச்சந்தர்ப்பத்திலும் அவனுக்கு இணை வைத்து விடக் கூடாது என்று அவனுக்கு எச்சரிக்கை செய்து வையுங்கள்.
ஈமானின் 6 அடிப்படைகளையும், இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளையும் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.
நபி(r) அவர்கள் மீது நேசத்தை ஊட்டுங்கள். நறுமணம் கமழும் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அழகிய பண்பாட்டையும் பற்றிக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.
தூய இஸ்லாமிய அகீதாவையும், அதன் ஒழுக்க விழுமியங்களையும் குழந்தைகளின் உள்ளத்தில் விதைத்து விடுங்கள்.
இஸ்லாத்தின் ஹலால்-ஹராம் சட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் கண்ணியம், தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது போன்ற விடயங்களில் ஆர்வத்தை ஊட்டுங்கள்.
உங்கள் குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க நீங்கள் உதவுங்கள். தீய நண்பர்களை விட்டும் அவர்களை விலக்கி வையுங்கள்.
அல்குர்ஆனை ஓதுவது, மனனமிடுவது, அறிந்து கொள்வது போன்ற விடயங்களில் ஆர்வமூட்டுங்கள்.
தூய நபிவழிகளைக் கற்றுக் கொடுங்கள். உண்ணல், உறங்கள், விழித்தல், மல-சல கூடங்களுக்குச் செல்லுதல் போன்ற ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதுடன் அவ்வேளைகளில் ஓத வேண்டிய ஒளறாதுகளையும் கற்றுக் கொடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடங்கள். அவர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டாது அனைவரையும் சமமாக நடத்துங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.
அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்.
பொய், ஏமாற்று, திருட்டு, அநீதமிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை விட்டும் அவர்களை எச்சரித்து வையுங்கள்.
சின்ன வயதிலிருந்தே சுத்தம்-சுகாதாரத்திற்கு அவர்களைப் பழக்குங்கள், ஒழுச்செய்யும் விதத்தைக் கற்றுக் கொடுங்கள். உடல்-உடை சுத்தம் குறித்து விழிப்புணர்வூட்டுவதுடன், உணவு உண்ண முன்னரும்-பின்னரும் கரங்களைக் கழுவிக் கொள்ளப் பழக்குங்கள்.
குழந்தைகளின் வெட்க உணர்வைக் குன்றச் செய்யாதீர்கள். முறையான ஆடைக்கு அவர்களைப் பழக்குங்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண் பிள்ளைகள் போன்றோ, பெண் பிள்ளைக்கு ஆண் பிள்ளை போன்றோ ஆடை அணிவிக்காதீர்கள்.
காஃபிர்களுக்கு ஒப்பாக நடக்கக்கூடாது என்பதையும், எமக்கெனத் தனித்துவமான கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். காஃபிர்களது பெருநாட்கள்-திருநாட்கள் கொண்டாட்டங்களுக்கு அவர்களை அனுப்பவோ, அவற்றில் கலந்துகொள்ளச் செய்யவோ வேண்டாம்!
ஹராமான விளையாட்டுக்களை விட்டும் அவர்களை விலகியிருக்கச் செய்யுங்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியமான பொழுது போக்குகளுக்கு இடமளியுங்கள். நல்ல நூற்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.
விருந்தினர்களையும், அயலவர்களையும் கண்ணியப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அயலவர்களுக்குத் தொல்லை கொடுப்பது கூடாது என்பதை உணர்த்துங்கள். பெற்றோர், உறவினர், அயலவர், பொதுவான அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் குறித்து உணர்த்துங்கள்.
பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள். பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்துகொள்ளப் பழக்குங்கள்.
மொழிகள் மாறுபட்டாலும், இடங்கள் வேறுபட்டாலும் முஃமின்கள் அனைவரையும் நேசிப்பது கடமை என்ற உணர்வை ஊட்டுங்கள்.
ஸலாம் கூறவும் முஸாபஹா செய்யவும் பழக்குங்கள். ஸலாத்தின் ஒழுங்குகளைப் போதியுங்கள். பழழன அழசniபெ போன்ற அந்நிய கலாச்சாரத்தை விட இஸ்லாமிய விழுமியத்தின் சிறப்பை உணர்த்துங்கள்.
அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள். அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.
அவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள்; அச்சமூட்டிச் சொந்தக் காலில் இயங்க முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்.
பிள்ளைகளுக்கு வழிகாட்ட அன்பான-மென்மையான வழி இருக்கும் போது, கடும் போக்கைக் கடைபிடிக்காதீர்கள்.
உங்கள் குழந்தையாக இருந்தாலும் அவர்களை கண்ணியப்படுத்துங்கள். அடுத்தவர் முன்னிலையில் தண்டிக்காதீர்கள். தனிமையில் புத்தி கூறுங்கள்! இல்லையென்றால், அவர்கள் தன்மான முள்ளவர்களாக மிளிர மாட்டார்கள்.
அடிக்கடி அவர்களுக்கு அடிக்காதீர்கள். அதனால் அடி மீதுள்ள அச்சம் அவர்களுக்கு அற்றுப் போய் விடும்; அவர்களிடம் முரட்டுத்தனம் உருவாகி விடும். அதன் பின,; அவர்களை வழிநடத்த மாற்று வழி இல்லாது போய் விடும்.
குழந்தைகளின் தவறுகளுக்காகக் கடுமையான தண்டனை வழங்கவும் கூடாது; கண்டுகொள்ளாது இருந்து விடவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலை பேணப்படவேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
தவறுக்குத் தண்டனை என்றதும் பிரம்பை மட்டும் பார்க்காதீர்கள்! தண்டனைகள் பல ரகமானது! வார்த்தை மூலம் தண்டிக்கலாம்; தவறு செய்தவருடன் பேசாமல் மௌனத்தின் மூலம் கூடத் தண்டிக்கலாம்; கொடுக்க வேண்டிய ஒன்றைக் கொடுக்காமல் தடுக்கலாம். இவ்வாறு பல ரகம் உள்ளன. குழந்தையின் குற்றம், அதன் வயது, தவறு நடந்த சூழல் என்பனவற்றைக் கவனத்திற் கொண்டு பொருத்தமான தண்டனை வழங்குவதூடாக அவர்கள் மீண்டும்-மீண்டும் தவறு செய்யும் நிலையைத் தவிர்க்கலாம்.
பிள்ளைகளின் அறிவை கண்ணியப்படுத்துங்கள்; அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.
குழந்தைகள் நவீன தொழில் நுற்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்; கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.
குழந்தைகள் பேசும் போது, அவர்களது பேச்சை வெட்டி விடாதீர்கள்; காது கொடுத்துக் கேளுங்கள். அதன் மூலம் அடுத்தவர் பேசும் போது, காது கொடுத்துக் கேட்கும் பக்குவத்தை அவர்கள் பெறுவார்கள்.
குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, அவர்களை அதட்டாதீர்கள்; பொறுமையுடன் அவர்களது கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்;
பிள்ளைகளுக்கு வியாபாரம், கொடுக்கல்-வாங்கல் மற்றும் சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுதல் போன்ற அம்சங்களில் பயிற்சி அளியுங்கள்; இவற்றில் அவர் குறை விட்டால், தண்டிக்காது வழிகாட்ட முயற்சியுங்கள்.
பயனுள்ள கூட்டமைப்புக்களுடன் குழந்தைகளை ஒன்றிணைத்து, அவர்களது ஆளுமை விருத்திக்கு உதவுங்கள்.
அறைகளுக்குள் நுழையும் போது ‘ஸலாம்’ கூறி, நுழையப் பழக்குங்கள்; ஆண்-பெண் பிள்ளைகளுக்குத் தனித்தனி படுக்கைகளை ஏற்படுத்துங்கள். 9 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தனியாகத் தூங்க வழிசெய்யுங்கள். அதுவே அவர்களின் ஆளுமை வளர உதவும்.
திரும்பத் திரும்ப நல்ல விஷயங்களைப் போதியுங்கள்; உடனடி மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். சேர்வடையாமல் முயற்சியைத் தொடருங்கள்.
நன்மையை ஆர்வமூட்டித் தீமையை எச்சரியுங்கள்; இப்படிச் செய்தால் இந்தப் பாக்கியம் கிடைக்கும்; இப்படிச் செய்தால் இந்தத் தண்டனை கிடைக்கும் என்பதைப் புரிய வையுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதாகக் கூறிய எந்த வாக்குறுதியையும் மீறி விடாதீர்கள்; தண்டிப்பதாகக் கூறினால், அதைத் தவிர்ப்பது பாதிப்பாகாது. ஆனால் எதையாவது ‘தருவேன்’ எனக் கூறி விட்டு, கொடுக்காது இருந்து விடாதீர்கள்.
பிள்ளைகளின் பிரச்சினையை அவர்களுடன் பேசி, அறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள்;
இஸ்லாமிய சரித்திரத்தையும், அதன் சாதனை வீரர்களது வரலாறுகளையும் எடுத்துக் கூறுங்கள்;
இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும், அவர்கள் முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநீதிகள்; குறித்தும் அவர்களுக்கு உணர்த்துங்கள்;
இருப்பதைக் கொண்டு திருப்தியடையப் பழக்குங்கள்; அடுத்தவர்களிடமிருப்பதைப் பார்த்துக் கொட்டாவி விடும் இயல்பை அழிக்க முயலுங்கள்.
பொது விடயங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்; அவர்களது கருத்து பொருத்தமானதாகப் பட்டால், அதன்படி செயல்படத் தயங்காதீர்கள்.
உளவியல் ரீதியில் அவர்களை அணுக முற்படுங்கள்; ‘நல்ல பிள்ளைகள் இப்படித்தான் இருப்பார்கள்; இப்படி-இப்படி செய்ய மாட்டார்கள். நீ நல்ல பிள்ளை; நீ எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’ என்ற தோரணையில் நீங்கள் கூற விரும்புவதைக் கூறலாம்.
இது போன்ற வழிமுறைக;டாக அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதுடன் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அனுதினமும் துஆச் செய்யுங்கள்.
அல்லாஹ் அருள்புரிவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக