சனி, டிசம்பர் 24, 2011

பெண்கள் மீது அவதூறு :குற்றங்களும் தண்டனைகளும் !

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுபவனுக்குரிய தண்டனை. பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்துக்கும் எதிரான வதந்திகளை மட்டும் மக்கள் சர்வ சாதாரணமாக நம்பி விடுகின்றனர். பெண்களுடன் ஆண்களைத் தொடர்புபடுத்திக் கூறும் செய்திகளையும் ஆர்வமுடன் செவிமடுத்து அதை நம்பவும் செய்கின்றனர். "இருந்தாலும் இருக்கும்' என்று கூறி அதை ஆமோதிக்கின்றனர்.



இதனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலமே சூன்யமாகி விடுவதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. தங்கள்
மகளைப் பற்றியோ, சகோதரிகள் பற்றியோ மற்றவர்கள் இப்படிப் பேசினால் அவர்கள் அதை ரசிப்பார்களா? செய்தி ஊடகங்களும் பெண்களின் ஒழுக்கம் குறித்து ஆராயாமல் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இஸ்லாம் மட்டும் பெண்களின் கற்பொழுக்கம் பற்றி அவதூறு பேசுவதைக் கடுமையான குற்றமாகக் கருதுகின்றது. மறுமையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என்பதை கீழ்கண்ட வசனங்கள் உறுதிப்படுத்துகிறது.


ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர.


அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். தங்களைத் தவிர
வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்பது ஐந்தாவதாகும். "அவனே பொய்யன்'' என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனையிலிருந்து அவளைக் காக்கும். "அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும்'' என்பது ஐந்தாவதாகும்.
அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாமலும், அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவனாகவும், ஞானமிக்கவனாகவும் இல்லாமலும் இருந்தால் (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்) அவதூறு கூறியோர் உங்களில் ஒரு பகுதியினரே. அதை உங்களுக்குத் தீங்காக நினைக்காதீர்கள்! மாறாக அது உங்களுக்கு நல்லது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவம் உள்ளது. அவர்களில் இந்த விஷயத்தில் பெரும் பங்கு எடுத்தவனுக்குக் கடும் வேதனை உண்டு. இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? "இது தெளிவான அவதூறு'' என்று கூறியிருக்கக் கூடாதா? இதற்கு நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையானால் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள். இவ்வுலகிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் உங்களுக்கு இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதற்காக உங்களுக்குக் கடும் வேதனை ஏற்பட்டிருக்கும். அல்குர்ஆன் 24: 4-14 நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர்.அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. அல்குர்ஆன் 24: 23


அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (நிரபராதியான) தம் அடிமைமீது விபசாரம் புரிந்துவிட்டதாக அவதூறு கூறுகிறாரோ, அவருக்கு மறுமை நாளில் (சாட்டையடி) தண்டனை வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 3416
Posted by penmani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...