மனவியல்வு சிக்கல்(காம்ப்ளக்ஸ்) இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது.
ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின், அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான்.
இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது, ஒரு மனிதனை Superiority complex என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இந்த மனப் பாங்கானது, அறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒரு மனிதனை திருப்பி, அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி, அவனது ஆளுமையில்(Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் தன்னுடைய சுய நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், வேறு யார் அவரின் நலனில் அக்கறை செலுத்துவர் என்ற கேள்வி எழுவது இயற்கையே. மனித மனமானது, இயல்பிலேயே தன்னுடைய சுய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது.
ஆனால் சமூகத்தில் முக்கியத்துவம் பெற நினைக்கும் ஒருவர் தன்னோடு சேர்த்து மற்றவர்களையும் பார்க்க வேண்டும்.
ஒரு மனிதனுக்கு Superiority complex இருந்தால், அவர் தன்னைச் சுற்றியுள்ள பிற மனிதர்களை சமமாக மதிக்கவில்லை மற்றும் எந்தவித நல்ல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அர்த்தம்.
இந்தவிதமான மனோநிலை ஒரு தனிமனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்றில்லை, ஒரு சமூகத்திற்கு, ஒரு அரசியல் கட்சிக்கு, ஏன், ஒரு நாட்டிற்கே உரித்தானது. (உம்: வலுவான ஒரு பெரிய நாடு சிறிய நாடுகளை மதிப்பதில்லை மற்றும் அதை சுரண்டுகிறது)
Superiority complex மூலம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் தீமையை விட, Inferiority complex மூலம் அதிக தீமை விளைகிறது. தாழ்வு மனப்பான்மை உள்ள ஒரு மனிதனால் எதையுமே சாதிக்க முடியாது. ஒரு மனிதன் பெரியவனா? அல்லது சிறியவனா? என்பது, அவன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை வைத்தே அமைகிறது.
உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி, உங்களை மற்றவர் ஆதிக்கம் செய்ய நீங்கள் அனுமதித்து விட்டால், மனவியல்பு சிக்கல்களால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட ஒரு எளிய வழி என்னவெனில், இந்த உலகில் கடவுளை விட உயர்ந்தது எதுவுமில்லை என்ற எண்ணத்திற்கு நீங்கள் வருவதுதான். அப்படி நினைக்கையில், உங்களுக்கு மனஅமைதி உண்டாகிறது.
நினைத்ததை செய்யும் துணிவு கிடைக்கிறது. பிற மனிதர்களின் திறமைகளைப் பார்த்து நீங்கள் மிரள மாட்டீர்கள். ஏனெனில், உங்களிடம் இருக்கும் திறமையை நீங்கள் பயன்படுத்துவீர்கள்.
மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகளை இங்கு அலசுவோம்.....
எதிர்மறை எண்ணத்தை ஒழித்தல்
உங்களின் மனதை ஒரு துயர சம்பவம் வாட்டினால் அதை நீக்க, ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை நினைவில் கொண்டு வரவும். ஒரு தோல்வி சம்பவம் நினைவில் வந்தால், வெற்றி சம்பவத்தை அங்கே கொண்டுவந்து இருத்தவும். சிறந்த எதிர்காலம் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு மனிதனின் வாழ்வாதாரமாக இருக்கிறது. எனவே அந்த நம்பிக்கையை மனதில் இருத்தி, மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணத்தை ஒழிக்கலாம்
தடைகளை அறிந்து களைதல்
நீங்கள் நோய்வாய்ப்பட்டு, அதற்காக ஒரு மருத்துவரை நாடிச் செல்கையில், உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று மருத்துவர் முதலில் ஆய்வு செய்வார். நோயை உறுதி செய்த பின்புதான் உங்களுக்கான மருந்துகளை அவர் தருவார். பின்னர்தான் நோய் குணமாகும். அதேபோல்தான், உங்களின் கவலைக்கு காரணமான, முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விஷயங்கள் எவை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அவற்றை களைந்தால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.
தனித்தன்மை
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தனது விருப்பத்தை அடைய ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் முயற்சியை மேற்கொள்வார். எனவே, ஒருவர் பின்பற்றும் அதே வழியை இன்னொருவர் குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டியதில்லை.
நல்ல ஆலோசகரைப் பெறுதல்
ஒருவர் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது எளிதான விஷயமல்ல. நமது பலம் மற்றும் பலவீனம் குறித்து நமக்கே பலவித சந்தேகங்கள் இருக்கும். நமக்குள் இருக்கும் அவநம்பிக்கைக்கு காரணமாக, சிறுவயதில் நடந்த சில கெட்ட சம்பவங்களும் இருக்கலாம். எனவே அவற்றிலிருந்து மீண்டு, நம்மை நாமே அறிந்துகொள்ள ஒரு சிறந்த மனநல ஆலோசகரை நாடலாம்.
என்னால் முடியும்
இது ஒரு மந்திர வார்த்தைப் போன்றது. இந்த வார்த்தையை தியானம் செய்வதுபோல், ஒரு நாளைக்கு 10 முறையாவது திரும்ப திரும்ப சொல்லலாம்.
திறன்களை மதிப்பிடுதல்
ஒரு மனிதனின் திறன் அவனது உடல், அறிவு மற்றும் மனம் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கியது. இந்த அம்சங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டை ஒருவர் சரியாக செய்து விட்டால் அவருக்கு வெற்றிதான். அதேசமயம் குறைவாக செய்துவிட்டால், தாழ்வு மனப்பான்மையில் வீழ்ந்து விடுவோம்.
கடவுள் உங்கள் பக்கம்
உங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை, அனைவருமே எதிர்பக்கம் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அனைவரினும் மேலான கடவுள் உங்கள் பக்கம் எப்போதும் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். இந்த எண்ணத்தின் மூலம் உங்களின் தாழ்வு மனப்பான்மை மறைந்து தைரியம் பிறக்கும்.
குறிப்பு
வெறும் ஆலோசனைகளை படித்துவிட்டால் மட்டுமே மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபட்டுவிட முடியாது. வாழ்க்கையின் ஒரு நீண்ட முயற்சியாக அது இருக்கிறது. சிறு வயதில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நாம் வாழும் சூழல் போன்றவை நம் மனநிலையை கட்டியமைத்தாலும், பிறப்பிலேயே கிடைக்கும் சில அடிப்படை குணவியல்வுகள் பற்றியும் நாம் இங்கே யோசிக்க வேண்டியுள்ளது.
உலகத்திலேயே பெரிய உலகம் மனிதனின் மனம்தான். ஒரு மனிதன் முதலில் தனது மனதுக்குள்ளும், பிறகு இந்த உலகத்திற்குள்ளும் வாழ்கிறான். ஒரு மனிதன் தனது மன உலகை எவ்வாறு வைத்துக்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது புற உலக வாழ்க்கை அமைகிறது. மனதுக்குள் நடக்கும் போராட்டம்தான், புற உலகில் வேறொரு போராட்டமாக உருவெடுக்கிறது.
ஒரு மனிதன் மனோரீதியாக வெற்றியடைந்தாலே, புற உலக வாழ்க்கையில் எளிதாக வெற்றியடைந்து விடுவான். இதுவே காலம்காலமாக நடைமுறை உண்மை.
ஒரு மனிதன் மகா யோகியாக மாறுவதும், பெரும் ஞானியாக வாழ்வதும், பணத்தாசை பிடித்து அலைவதும், தலைவனாக வேண்டும் என்று ஏங்குவதும், அஞ்சி அஞ்சியே வாழ்வதும், கிடைத்தது போதுமென்று நினைப்பதும், எதிலுமே திருப்தியடையாமல் இருப்பதும், எப்போதுமே சோகத்துடனோ அல்லது மகிழ்ச்சியுடனோ இருப்பதும், வாழ்வை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும், மரணம் வரை சென்று மீள்வதும், அடுத்தவரை அண்டியே வாழ்வதும், எப்போதுமே தன்னிச்சையாக செயல்படுவதும், எதிலும் மிகையாக செயல்படுவதும், எதிலும் சோம்பேறியாக செயல்படுவதும், எப்போதும் நடுநிலையாக செயல்படுவதும் ஒருவரின் உள்மனதிலேயே தீர்மானிக்கப்படுகிறது.
மனவியல்பு சிக்கல்கள்(Complexes) உள்மன செயல்பாடுகளில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த Complexes மூலமே ஒரு மனிதனின் அடிப்படை மனக் கட்டுமானம் அமைகிறது. எனவே, இப்பிரச்சினையை சரிசெய்வது மிக முக்கியம். இரண்டு வகை மனவியல்பு சிக்கல்களிலிருந்தும்(Superioriy and Inferiority complexes) விடுபட்டு, மனதை சரியான சுயமதிப்பீட்டு நிலையில் வைத்திருப்பதே நிம்மதியான மற்றும் வெற்றிகரமான வாழ்விற்கு வழி.
உளவியல் ஆலோசனைகள், சிறந்த புத்தகங்களைப் படித்தல், நல்ல நண்பர்கள், ஒழுக்கமான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் போன்றவற்றின் மூலம் மனவியல்வு சிக்கல்களை ஒருவரால் வெல்ல முடியும். http://tndawa.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக