புதன், டிசம்பர் 28, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?பலதார மணம் பெண்களுக்கில்லை:

இந்த வித்தியாசங்களையும், நியாயமான காரணங்களையும் முதுகுக்குப் பின்னால் தள்ளி விட்டு ஆணுக்கு அனுமதிப்பது போல் பெண்ணுக்கும் பலதார மணத்தை அனுமதிக்க வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இது ஏற்க முடியாத வாதமாகும். பெண்களுக்குப் பல கணவர்களை அனுமதிக்க நியாயமான ஒரு காரணமும் இல்லை. மாறாகப் பெண்ணுக்கும் இந்த அனுமதி வேண்டும் என்போரின் விருப்பப்படி அனுமதிப்பதனால் விபரீதங்களும், கேடுகளும் தான் ஏற்படும்.

ஒரு ஆண் நூறு பெண்களுடன் ஒரு ஆண்டு தனித்து விடப்பட்டால் அந்த நூறு பெண்களும் நூறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்! ஒரு பெண் நூறு ஆண்களுடன் தனித்து விடப்பட்டால் அவளால் நூறு குழந்தைகளைப் பெற முடியுமா? ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரு பிள்ளைக்கு 'தாய் யார்?' என்பது தான் தெரியுமே தவிர, தன் 'தந்தை யார்?' என்பதை அறிந்து கொள்ள முடியாது.

இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் தகப்பன் யார் என்று தெரியாமல் உருவாகக் கூடிய சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா? ஒவ்வொருவனும் என்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்த அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்குமாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்! அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?

ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.

பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.

இவ்வளவு வித்தியாசங்கள் இருப்பதனாலேயே எல்லாம் அறிந்த ஏக இறைவன் ஆண்களுக்கு மாத்திரம் இதை நிபந்தனைகளுடன் அனுமதித்திருக்கிறான். நீக்கிவிட முடியாத வித்தியாசங்கள் இருக்கும் வரை பலதார மணத்தை விமர்சனம் செய்பவர் புத்திசாலியாக இருக்க முடியாது.

ஆண்களுக்குப் பலதார மணத்தை அனுமதித்துப் பெண்களுக்கு மறுத்திட மிகமிக முக்கியமான மற்றொரு காரணமும் உண்டு.

பல மனைவியரைக் கட்டியவன் நினைத்த போது விரும்பிய மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியும்; ஒரு மனைவி அவள் விரும்பிய கணவனிடம் அவன் விரும்பாத போது உறவு கொள்ள இயலாது என்பதைச் சிந்தித்தால் ஆண்களுக்கு மட்டுமே பலதார மணத்தை அனுமதித்திருப்பதன் நியாயத்தை உணரலாம்.

திருமணத்துக்கு தயார் நிலையில் உள்ள ஆண்களும், பெண்களும் சமமான எண்ணிக்கையில் இருக்கும் போது அனைத்துப் பெண்களுக்கும் மண வாழ்வு கிடைத்து விடுவதால் இரண்டாவதாக வாழ்க்கைப்பட பெண்கள் முன்வர மாட்டார்கள். பல தாரமணம் செய்ய ஒருவர் விரும்பினாலும் அது சாத்தியமாகாது. அப்போது எந்தச் சட்டமும் போடாமலேயே பலதார மணம் தானாக நின்று விடும். முதல் தாரத்துக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கும் போது எந்தப் பெண் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட விரும்புவாள்?

அந்த நிலை ஏற்படும் வரை எந்தச் சட்டத்தினாலும் இதைத் தடுக்க முடியாது.இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது என்போரின் அடுத்த குற்றச்சாட்டு தலாக்' குறித்ததாகும். அது பற்றியும் நாம் ஆராய்வோம்.
தலாக்
ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை பெண்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் மேலும் தீவிரமடைந்துள்ளதை நாம் காண்கிறோம்.

ஆணும், பெண்ணும் இல்லற இன்பத்தை அனுபவித்து, இரண்டறக் கலந்து விட்டுத் திடீரென ஆண்கள் தம் மனைவியை விவாகரத்துச் செய்து விடும் போது பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கண்கூடு. கன்னிப் பெண்களுக்கே மண வாழ்வு கிடைக்காத நிலையில் விவாக விலக்குச் செய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிடைக்கும்? அதிலும் அவள் சில குழந்தைகளைப் பெற்று அழகையும் இளமையையும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்பே இல்லை. இது தான் தலாக் சட்டத்தை விமர்சனம் செய்வதற்குக் காரணம்.

தலாக் கூறுவதனால் பெண்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியானால் ஏன் இதை அனுமதிக்க வேண்டும் அனுமதிக்காமலேயே இருக்கலாமே? என்ற கேள்விகள் நியாயமானவையே. அதை விட அதற்கான விடைகள் நேர்மையானவை.

தலாக்கை அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? அதற்கு அனுமதி மறுப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? என்று இரண்டையும் எடை போட்டுப் பார்க்கும் போது, அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகளை விட அதிமோசமான விளைவுகள் அனுமதிக்காவிட்டால் ஏற்பட்டு விடுகின்றன.

அனுமதிப்பதிலும் கேடுகள் உள்ளன; அனுமதி மறுப்பதிலும் கேடுகள் உள்ளன; இரண்டில் எதைச் செய்தாலும் விளைவுகள் மோசமானவை என்ற நிலையில் எது குறைந்த தீங்குடையதோ அதை அனுமதிப்பது தான் அறிவுடைமையாகும். இந்த அறிவுப் பூர்வமான முடிவையே இஸ்லாம் உலகுக்கு வழங்கியுள்ளது.

தலாக் எனும் விவாகரத்துச் செய்யும் உரிமை ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படும் குறைந்த அளவிலான கேடுகளைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்வோர் அந்த அதிகாரம் ஆண்களிடம் வழங்கப்படாவிட்டால் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன என்பதைக் கவனிப்பதில்லை. இதை விரிவாகவே நாம் விளக்குவோம்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவியை ஏதோ ஒரு காரணத்துக்காகப் பிடிக்காமல் போய் விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இஸ்லாம் கூறுவது போன்ற தலாக் உரிமை வழங்கப்படாத நாட்டிலும், சமுதாயத்திலும் கணவன் தன் மனைவியிடமிருந்து விவாக விலக்குப் பெற வேண்டுமானால் நீதிமன்றம் எனும் மூன்றாம் தரப்பை நாடிச் சென்று அந்த மன்றம் அனுமதித்தாலே விவாக விலக்குப் பெற முடியும்.

நமது நாட்டிலும், மற்றும் சில நாடுகளிலும் இத்தகைய சட்டம் தான் இருக்கிறது. நீதி மன்றத்தை அணுகித் தான் விவாகரத்துப் பெற முடியும் என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்களை கணவன் சொல்லியாக வேண்டும். அப்போது தான் நீதிபதி விவாகரத்துக்கு அனுமதி வழங்குவார்.

இத்தகைய நிலையில் ஏற்படும் விளைவுகளை நாம் பார்ப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...