நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும்.
விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலைநகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகிவிடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது. வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அது தான்.
”பத்ர்” எல்லையைத் தாண்டி அவர்கள் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
”உம்ரா” வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹுதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகியிருக்கும்.
ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறு தான். நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை. என்பதற்கு இவையே போதுமாகும்.
கொள்ளையிடுவதற்கா?
எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. ”தாயிப்” நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதினாவை விட வளமானதாக இருந்ததில்லை. பொருளாதாரம் போர் நோக்கமாக இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக "நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:94)
கொள்ளையிடுவது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.
பழிவாங்குவதற்கா?
எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.
மக்காவில் வெற்றி வீரராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழிவாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்கள், அவர்கள் நாடு துறக்கக் காரணமானவர்கள், அவர்களின் தோழர்களைச் சுடுமணலில் கிடத்தியவர்கள், தூக்கில் தொங்கவிட்டவர்கள், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்கள், இப்படிப் பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.
அனைவருக்குமே பொதுமன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழி வாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்கு போதுமான சான்றாகும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்
.(அல்குர்ஆன் 5:8)
என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்.
ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல்கள் : புகாரி, முஸ்லிம்
போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : முஸ்லிம்.
போர்க்களத்தில் எந்தத் தர்மமும் பார்க்க வேண்டியதில்லை என்பது உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தும் இங்கேயும் புது நெறியைக் கற்றுத் தரும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் விசாலமானதாக இருந்தது. எனவே பழி வாங்குதல் என்பது அவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாது.
மதமாற்றம் செய்வதற்காகவா?
மற்றவர்களை மதமாற்றம் செய்வதற்காக போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக அதுவும் இல்லை.
இம்மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாக உள்ளது.
அல்குர்ஆன் 2 : 256)
அவர்களுக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கட்டாய மதமாற்றத்தை தடை செய்கின்றது. வெற்றியடைந்த பின் அம்மக்களிடம் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வார்கள். விரும்பியவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். விரும்பாதவர்கள் ஜிஸ்யா வரி செலுத்திவிட்டு தம் மதத்திலேயே நீடிப்பார்கள். (ஜிஸ்யா வரி பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.)
இணை வைப்பவர்களில் (அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்கு பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! எனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர்.
(அல்குர்ஆன் 9:6)
மாற்று மதத்தவர்களிடம் நபியவர்களின் நடைமுறை எத்தகையதாக இருந்தது என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
எதற்காகப் போர் செய்தனர்?
மேற்கண்ட காரணங்களுக்காகப் போர் நடக்கவில்லை என்றால் அவர்களே போர் நடத்தியதாகச் சொல்லப்படுவது பொய்யா? அதற்கு வேறு காரணங்கள் ஏதும் உள்ளனவா? என்ற கேள்விக்கு வருவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தப் போரிலும் பங்கெடுத்ததில்லை என்று நாம் சொல்லவில்லை. கமண்டலமும் ஜெப மாலையும் வைத்துக் கொண்டு சன்னியாசியாக வாழ்ந்தார்கள் என்றும் நாம் சொல்வில்லை.
தாங்களே களத்தில் இறங்கியுள்ளார்கள். மிகச் சிறந்த படைத் தளபதியாக இருந்தார்கள். எத்தனை ஒட்டகங்களை எதிரிகள் அறுத்துள்ளனர் என்பதை விசாரித்து எதிரிகளின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடக் கூடிய அளவுக்கு திறமை மிக்க தலைவராக இருந்தார்கள். இதையெல்லாம் நாம் மறுக்கவில்லை. அவர்கள் படை நடத்திச் சென்றதற்கு நியாயமான சில காரணங்கள் இருந்தன.
முதலாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் சொந்த ஊரிலிருந்து அநியாயமாக விரட்டப்பட்டு மதீனா வந்து அங்கே வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது மக்காவை விட்டு அவர்களை விரட்டியவர்கள், அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பூண்டோடு கருவறுப்பதற்காக படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்த்துப் போரிடவில்லையானால் மொத்த சமுதாயமும் அழிந்துவிடக் கூடிய அபாயம் ஏற்பட்ட போது எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக நபி (ஸல்) போர்களைச் சந்தித்துள்ளனர். எல்லாப் போர்களுக்கும் இதுவே காரணமில்லை என்றாலும் சில போர்கள் இந்த ஒரு காரணத்துக்காகவே நடத்தப்பட்டன.
நியாய உணர்வுடைய எவரும் இதில் குறை காண மாட்டார்கள். இந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்ட போர்களில் இரண்டை மட்டும் இங்கே நாம் விளக்குவோம்.
”உஹது போர்” என்பது பிரசித்தி பெற்ற போராகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தப் போர் ”உஹத்” எனும் மலையடிவாரத்தில் நடந்ததால் ”உஹதுப் போர்” என்று இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றது.
போர் நடந்த இடம் மதீனாவுக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. மக்காவிலிருந்து ஏறத்தாழ முன்னூறு மைல் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அதாவது மக்காவாசிகளான எதிரிகள் சுமார் முன்னூறு மைல்களைக் கடந்து மதீனாவின் எல்லை வரை வந்து விட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்தனர்.
முன்னூறு மைல்கள் கடந்து வந்தவர்கள் வம்புச் சண்டைக்கு வந்தவர்களா? ஐந்து மைல் தூரம் சென்று எதிரிகளைச் சந்தித்த நபியவர்கள் வம்புச் சண்டைக்குச் சென்றார்களா? முன்னூறு மைல்களைக் கடந்து வருவதென்றால் அன்றைய காலத்தில் அதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்! எவ்வளவு நாட்களுக்கு முன் புறப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையிலும் ஆட்சித் தலைவராக உள்ள நபியவர்கள் தமது குடிமக்கள் நலனைப் பேண வேண்டிய நபியவர்கள் இதைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும் என்று எவருமே எதிர்பார்க்க முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கெடுத்த இரண்டாவது போரின் நிலை. இதுவென்றால், அவர்கள் சந்தித்த முதல் போரின் நிலையும் இத்தகையது தான்.
”பத்ருப் போர்” என்று அறியப்படும் இப்போர் பத்ரு எனும் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இந்த இடம் மதீனாவுக்கு எண்பது மைல் தொலைவிலும், மக்காவுக்கு இருநூறு மைல்களை விட அதிக தூரத்திலும் அமைந்துள்ளது.
வலியப் போர் செய்ய நபியவர்கள் சென்றிருந்தால் மக்காவுக்கு அருகில் உள்ள இடத்தில் போர் நடந்திருக்க வேண்டும். மதீனாவுக்கு அருகிலேயே இப்போர் நடந்துள்ளதால் இதுவும் தற்காப்புப் போர் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.
தங்களின் ஒப்பந்தங்களை முறித்துவிட்டவர்களுடன் நீங்கள் போரிட வேண்டாமா? (இறைத்) தூதரை வெளியேற்றத் திட்டமிட்டவர்களுடன் (நீங்கள் போரிட வேண்டாமா?) மேலும் அவர்களே உங்களிடம் முதலில் ஆரம்பித்துள்ள நிலையில் (நீங்கள் போரிட வேண்டாமா?)
அல்குர்ஆன் 9:13)
போரை முதலில் துவக்கியவர்களே அவர்கள் தான் என்று திருக்குர்ஆனும் குறிப்பிடுகின்றது. சில போர்கள் இந்தக் காரணத்துக்காகவே நடத்தப்பட்டன. இதையும் குறை கூற முடியாது.
இரண்டாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற பின் அங்குள்ள மக்களின் பேராதரவுடன் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். மதீனாவும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் அந்த நாட்டின் எல்லைகளாக இருந்தன. சிறியதோ, பெரியதோ ஒரு நாடு என்று ஆகிவிட்டால் அதற்கென இறையான்மை உண்டு. அதை மற்ற நாடுகள் பேணி நடக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் அன்னிய நாட்டவர் பிரவேசிக்க வேண்டுமானால் அந்த நாட்டின் முன் அனுமதி பெற வேண்டும். இது இன்றைக்கு மட்டுமல்ல. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட மரபாக இருந்தது.
இதனால் தான் மக்காவுக்கு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றச் சென்ற நபியவர்கள் மக்காவாசிகளின் ஆட்சேபனைக்கிணங்க திரும்பி வந்தார்கள்.
ஆனால் மக்காவாசிகள் மதீனாவின் இறையாண்மையில் அவ்வபோது குறுக்கிட்டுக் கொண்டிருந்தனர். பல ஊர்களுக்கு வியாபாரம் செய்யச் சென்றுவிட்டு மக்கா வியாபாரிகள் திரும்பும் போது மதீனாவுக்குள் புகுந்தோ அல்லது மதீனா எல்லைக்குள் புகுந்தோ போய் வந்து கொண்டிருந்தார்கள். இப்படி அனுமதியின்றி அத்துமீறுபவர்களை வழிமறிக்கவும் அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் நபியவர்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்கள். இதனால் அவ்வப்போது சிறு சிறு சண்டைகள் நடந்துள்ளன. பத்ருப் போர்க்களத்துக்குச் சற்று முன்னால் மக்காவின் தலைவரான அபூசுப்யானின் வணிகக் கூட்டம் வழிமறிக்கப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எந்த ஆட்சித் தலைவருக்கும் கடமையான ஒரு காரியமாகவே இதைக் கொள்ள வேண்டும். தத்தமது நாடுகளில் இத்தகைய அத்து மீறல்களை எந்த ஆட்சியாளரும் அனுமதிப்பார்களா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மூன்றாவது காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாயகம் மக்காவாகும். அவர்களுடன் தியாகப் பயணம் மேற்கொண்ட அனைவரின் தாயகமும் மக்காவாகும். சொந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் என்று இவர்களைக் கூறலாம்.
நபிகள் நாயகத்தை எதிர்த்த மக்காவாசிகளுக்கு மக்காவில் எந்த அளவு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு நபிகள் நாயகத்துக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்த பின் அவர்களின் சிறப்பையும், அவர்களின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து மக்காவாசிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தனர். ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் மக்காவின் தலைவர்களது கொடுமைக்கு அஞ்சி மக்காவை விட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்றனர்.
பெரும்பாலான மக்காவாசிகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டனர். இழந்ததை – சொந்த நாட்டை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் நபியவர்கள் மக்காவை இரத்தம் சிந்தாமலேயே வெற்றி கொண்டனர். இழந்ததை மீட்பதற்காக நடத்தப்படும் போர்களும் நியாயமான போர்களே.
தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக போரிடுபவர்களுக்கு (அதற்கு) அனுமதியளிக்கப்படுகின்றது. மேலும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய சக்தி பெற்றவனாவான். அவர்கள் தங்கள் நாடுகளிலிருந்து ”எங்கள் இறைவன் அல்லாஹ்” என்று கூறியதற்காக அநியாயமாக வெளியேற்றப்பட்டனர்.
(அல்குர்ஆன் 22 : 39)
திருக்குர்ஆனின் இவ்வசனம் அநீதியிழைக்கப்பட்டவர்கள் அடங்கிப் போகாமல் எதிர்த்துப் போரிடுமாறு கட்டளையிடுகிறது. இழந்ததை மீட்பதற்காகக் கூட போர் செய்யக் கூடாது என்று யாரும் கூற மாட்டார்கள்.
தங்கள் தாயகத்தை மீட்பதற்காகப் போராடும் பலஸ்தீனியர்களை இந்தியா உள்ளிட்ட அனேக நாடுகள் ஆதரிப்பதற்கு எவ்வளவு நியாயங்கள் இருக்கின்றனவோ அந்த அளவு நியாயங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் இருந்தது. இதையும் நியாய உணர்வு படைத்த எவரும் குறை சொல்ல மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக