மனிதன் தனது உணவுக்காக சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இதை இஸ்லாம் அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.
மனிதன் தனது நன்மைக்காக உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பது போலித்தனமான வாதமாகும். ஏனெனில் உயிரினங்களைக் கொல்லாமல் மனிதன் வாழ முடியாது. உயிர்வதை கூடாது என்று கூறக் கூடியவர்கள் கூட அவ்வாறு வாழ்வது கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவை தண்ணீர். தண்ணீர் அருந்தாமல் எவரும் இவ்வுலகில் வாழ முடியாது.
தண்ணீரில் கிருமி எனும் இலட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. தண்ணீரை அருந்தும் போது இலட்சக்கணக்கான உயிர்களையும் சேர்த்துத் தான் அருந்துகிறோம். தண்ணீரைக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் அந்த உயிரினங்களை வேக வைத்துச் சாப்பிடுகிறோம்.
அந்த உயிர்களுக்கு மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற எல்லா உறுப்புகளும் உள்ளன. மற்ற உயிர்களைப் போலவே இயங்குகின்றன. மற்ற உயிர்களைப் போலவே இனவிருத்தியும் செய்கின்றன.
நமது சாதாரண கண்களுக்கு அவை தென்படாவிட்டாலும் அதற்குறிய கண்ணாடிகள் மூலம் அவற்றைப் பார்க்க முடியும்.
உயிர் வதை கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கையுடையவர்கள் தண்ணீரைக் கூட அருந்தாமல் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மனிதன் உயிர்களைக் கொல்லாமல் வாழவே முடியாது என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.
அது மட்டுமின்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் உயிரினங்களில் பல வகைகள் உள்ளன.
மனிதன் பகுத்தறிவுடன் இடம் விட்டு இடம் செல்லக்கூடிய உயிரினமாக இருக்கிறான். ஏனைய நடப்பன, ஊர்வன, பறப்பன யாவும் பகுத்தறிவு இல்லாமல் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்களாக உள்ளன. இவ்விரண்டை மட்டும் தான் நாம் உயிரினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
இடம் விட்டு இடம் பெயராமல் சுயமாக வளர்ச்சி பெறக் கூடிய இனவிருத்தி செய்யக்கூடியவையும் உயிரினங்கள் தான் என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
மரம், செடி, கொடிகள் போன்றவற்றுக்கு உயிர் இருப்பதால் தான் அவை வளர்கின்றன. பல்வேறு பருவங்களை அடைகின்றன. அவற்றில் ஆண், பெண் வேறுபாடு உள்ளது. இனப் பெருக்கமும் செய்கின்றன.
உயிரினங்களை வதை செய்யக் கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளக் கூடாது, அவ்வாறு உட்கொண்டால் அவர்கள் உயிரினங்களைக் கொன்றவர்களாகத் தான் ஆவார்கள்.
மனிதனும் ஆடு மாடுகளும் உயிரினங்கள் என்றாலும் இரண்டு உயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போலவே தான் ஆடுமாடுகளுக்கும், தாவரங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வித்தியாசம் இருக்கிறது என்பதற்காக அவற்றுக்கு உயிர் இல்லை என்று கூறக் கூடாது.
மனிதனுக்குக் கேடு விளைவிக்கிறது என்பதற்காக எத்தனையோ உயிர்களை அனைவரும் கொல்கின்றனர்.
கொசு, எலி, கரப்பான், பல்லி போன்றவற்றை விஷ மருந்துகளைப் பயன்படுத்திக் கொலை செய்கின்றனர். மனிதனின் நன்மைக்காக இவற்றைக் கொல்வதை அங்கீகரிப்பவர்கள் உண்பதற்காக சில உயிரினங்களைக் கொன்றால் மட்டும் உயிர்வதை என்கின்றனர்.
மனிதனுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் பல அசைவ உணவில் இருக்கின்றன. விஞ்ஞானிகள் இதை நிரூபித்துள்னர். மருத்துவர்களும் பல சமயங்களில் அசைவ உணவைப் பரிந்துரைக்கின்றனர். உயிர் வதை கூடாது என்ற பெயரில் மாமிசத்தைத் தவிர்ப்பவர்களில் கனிசமானோர் புரதச்சத்து குறைவுடையவர்களாக ஆகின்றனர்.
மாடுகளில் பால் கறந்து அருந்துவதை ஜீவகாருண்யம் பேசுவோர் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இது ஏன் உயிர்வதையாகத் தெரியவில்லை. மாடு அசைவ உணவு என்றால் அதன் மாமிசம், எலும்பு, குடல், இரத்தம் ஆகியவை அசைவமாக உள்ளது போல் அதிலிருந்து பெறப்படும் பாலும் அசைவமாகத் தான் கருதப்பட வேண்டும்.
மேலும் மாடுகளுக்குச் சுரக்கக்கூடிய பால் அதன் கன்றுக்காகவே சுரக்கின்றது. முழுமையாக கன்றுக்கே பால் சொந்தமாக வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரானது ஏதுமில்லை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஏனைய உயிரினங்களுக்கும் அவற்றின் தாய்ப்பால் தான் சிறந்ததாகும்.
கன்றுக்குச் சேர வேண்டிய பாலை மனிதன் பயன்படுத்தும் போது கன்றுகள் வதைக்கப்படுகின்றன. அவை ஏமாற்றப்படுகின்றன.
இவை வதை எனத் தெரிந்தாலும் அதனால் மனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
காளைமாடுகள் ஏர்களில் பூட்டப்படுகின்றன. வண்டிகளில் பூட்டப்படுகின்றன. கடுமையான வேலைகள் அவற்றிடம் வாங்கப்படுகின்றன. ஒரேடியாகக் கொல்வதை விட இந்தச் சித்ரவதை கொடுமையானது, கோடூரமானது ஆனாலும் மனிதன் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறோம்.
அப்படியானால் மனிதன் உணவுத் தேவைக்காக அவற்றைக் கொல்வதை மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?
உயிர்வதை கூடாது என்பது இவர்களின் வாதமா? உண்ணக் கூடாது என்பது இவர்களின் வாதமா? என்பதையும் சிந்திக்க வேண்டும். உயிர்வதை கூடாது என்பது தான் வாதம் என்றால் மேற்கண்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எலி, பாம்பு, பல்லி, தேள், கொசு போன்றவற்றைக் கொல்கிறோம். நமக்குத் தீங்கிழைக்கிறது என்பதற்காக இவற்றைக் கொல்வதை அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை உணவுக்காக கொல்லலாம் என்பதையும் நம்மையுமறியாமல் ஏற்றுக் கொள்கிறோம்.
உயிர்வதை, ஜீவன்களின் மீது காருண்யம் என்றெல்லாம் கூறுபவர்கள் அவற்றில் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் போது அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டால் விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிடும். ஏழைகள் எந்த உணவையும் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அசைவ உணவு உட்கொள்பவர் பலர் உள்ளதால் தான் தட்டுப்பாடின்றி சைவ உணவு கிடைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் துருவப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு மீனைத் தவிர வேறு எந்த உணவும் கிடைக்காது.
உயிர்களைக் கொல்லக் கூடாது என்று அவர்களுக்குப் போதனை செய்தால் அவர்கள் செத்து மடிந்து விடுவார்கள். கடுமையான குளிர்ப் பிரதேசங்களில் குளிரைத் தாங்கும் வலிமையை அசைவ உணவு தான் அளிக்க முடியும்.
இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தாமாக இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்கள் சாக பட்சிணி, மாமிச பட்சிணி என இரு வகைகளாக உள்ளன.
மாமிசத்தை உணவாக உட்கொள்ளக் கூடிய உயிரினங்களின் குடல் அமைப்பும் பல் அமைப்பும் அவ்வுணவை அரைக்கவும் ஜீரணிக்கவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
அது போல் சாக பட்சிணிகளின் குடல் அமைப்பும் பல் அமைப்பும் சைவ உணவை மட்டும் ஜீரணிக்க ஏற்றதாக அமைந்துள்ளன. சாக பட்சிணியாக உள்ள பிராணிகள் மாமிசத்தை உட்கொண்டால் அவ்வுணவை ஜீரணிக்க முடியாமல் செத்துப் போய்விடும்.
ஆனால் மனிதனின் பற்களும் குடல் அமைப்பும் எவ்வாறு அமைந்துள்ளன? நாமே ஆச்சரியப்படும் படி இரு வகை உணவுகளையும் சரியாக ஜீரணிக்க ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வகை உணவுகளில் எதை உட்கொண்டாலும் மனிதனின் உடல் அதை அரைத்து சக்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
நமது உடல் அமைப்பு இரண்டு வகையான உணவுகளையும் ஏற்றுக் கொள்ளும் முறையில் இருப்பதால் அதுவே இயற்கை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும். ஜீவகாருண்யம் என்று கூறுவோர் இந்துக்களில் ஒரு சாரார் மட்டுமே. ஆயினும் இந்து மதத்தின் ஆதாரங்களிலிருந்து இவர்களின் வாதத்திற்கு ஆதாரம் காட்ட இயலாது.
இந்து மன்னர்களும், அவதார புருஷர்களும், கடவுளர்களும் உயிரினங்களை வேட்டையாடியதை புராண இதிகாசங்கள் கூறுகின்றன. யாகங்கள் என்ற பெயரால் குதிரைகள், மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
இன்றைக்கும் கூட முஸ்லிம்களை விட இந்துக்களே அதிக அளவில் அசைவ உணவு உட்கொள்கின்றனர். 500 கோடி மக்களில் மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தாம் அசைவ உணவைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதிலிருந்து முழுச் சைவம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை அறியலாம்.
மேலும் ஒருவருக்கு அசைவ உணவில் விருப்பமில்லாவிட்டால் அதைத் தவிர்த்துக் கொள்வதற்கு இஸ்லாம் தடையாக இல்லை. அசைவ உணவை உட்கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது தானே தவிர அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வேண்டும்.
இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.
ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக