சவூதியில் நான் அவதானித்தவரையில், பெரும்பாலான இறைச்சிகள் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், டென்மார்க் மற்றும் சில கிறித்துவ நாடுகளிலிலிருந்து இறக்குமதி ஆகிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால், மேற்கண்ட இறைச்சி ஹலால் தானா? இது "ஹலால் இறைச்சி" என எப்படி சவூதி அரசு உறுதிப்படுத்துகிறது? இதை நாம் வாங்கலாமா?
- சகோதரர் A.MOHAMED AHSAN (மின்னஞ்சல் வழியாக)
தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாக இருப்பின் அவனது பெயர் கூறப்பட்(டுஅறுக்கப்பட்)டதிலிருந்து உண்ணுங்கள். (அல்குர்ஆன் 6:118 மேலும் பார்க்க: 2:173. 5:3. 6:119,121,145. 16:115. ஆகிய வசனங்கள்).
உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை உண்ணும்போது அவை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென இறைமறை வசனங்கள் கூறுகின்றன.
பயணங்களில், உண்பதற்கு ஒன்றும் எடுத்துச் செல்லாத வழிப்போக்கராக இருப்பவர் தரைவழிப் பயணத்தில் உணவு விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவுகளைத்தான் உண்ண முடியும். அதுபோல் கடல்வழிக் கப்பல் பயணம், ஆகாயவழி விமானப் பயணம் செல்பவர்கள் கப்பலிலும், விமானத்திலும் கொடுக்கப்படும் உணவைத்தான் உண்ண முடியும்.
விமானங்களும் கப்பல்களும் சர்வதேச அளவில் அட்டவணையுடன் இயக்கப்படுவதால் எல்லா நாடுகளிலிருந்தும் எல்லா மதத்தினரும் அவற்றில் பயணம் செய்கின்றனர். அதனால் முஸ்லிம்களும் உண்பதற்குத் தகுந்த மாதிரியே மாமிசம் - புலால் உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
தரைவழி, கடல்வழி, ஆகாயவழி என எந்தப் பயணமாக இருந்தாலும் அங்குக் கிடைக்கும் மாமிச உணவைச் சாப்பிடுவதில் இவை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையா? என ஐயம் ஏற்பட்டால் அவற்றை, "அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்" என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது!
"இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்" என்றார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல்கள் - புகாரி 2057; 5507, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, முவத்தா மாலிக், தாரிமீ).
இது பயணத்திற்கு மட்டுமல்ல, மாமிச உணவு எங்கெல்லாம் பெறப்பட்டு அதன் மீது சந்தேகம் ஏற்படுகிறதோ அப்போது அல்லாஹ்வின் பெயர் கூறி அவற்றை உண்ணலாம். கிறிஸ்தவ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட மாமிசங்களாக இருந்தாலும் அவை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையா என்பதை சவூதி அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்கிற ஆராய்ச்சியில் இறங்கத் தேவையில்லை. ஏனெனில்,
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்; தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். (ஆட்சித்) தலைவர் (மக்களின்) பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓர் ஆண்மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்" (புகாரி 893) எனும் நபிமொழியில் அடிப்படையில், மக்கள் உண்ணும் மாமிச உணவு ஹலாலானது என்று அரசு அனுமதிக்குமாயின் அப்பொறுப்பு முழுதும் அரசைச் சார்ந்துவிடுகிறது. தேர்வதும் தவிர்ப்பதும் நம் விருப்பமாகும்.
சந்தேகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்ணும்போதும் அருந்தும் போதும் ''பிஸ்மில்லாஹ்'' என்று சொல்லி உண்ணுங்கள் என்று பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பதால் அதைப் பின்பற்றினால் எல்லாமும் அடிபட்டுப் போய்விடும். இதற்கு மேலும் மனக்குழப்பம் ஏற்பட்டால் இவற்றை உண்பதிலிருந்து விலகி, கோழி, ஆடு, மாடு என வாங்கி அவற்றை அல்லாஹ்வின் பெயர் கூறி நாமே அறுத்து உண்ணலாம்; அல்லது மீன், காய்கறி வகை உணவுகளைத் தேர்ந்து கொள்ளலாம்.
(இறைவன் மிக்க அறிந்தவன்).
Read more about ஹலால் இறைச்சியா? | முஸ்லிம்களுக்காக Courtesy: www.satyamargam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக