கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்
பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான். கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும், கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் மனிதன் நேரடியாகப் பார்க்கிறார்கள்.
'கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.
நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.
கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது. கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பூஜை பொருள் கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.
நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்? அதனால் தான் அல்லாஹ் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகிறது.
கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.
கடவுளை நான் வணங்கப் போகிறேன்; அதற்காக 100 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப் போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை. நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.
கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 2:263
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:267
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும், உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவனாகவும், புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:131
உமது இறைவன் தேவையற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.
திருக்குர்ஆன் 6:133
உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
திருக்குர்ஆன் 29:6
மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.
திருக்குர்ஆன் 35:15
மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புபவன் இன்னொன்றையும் நம்புதல் வேண்டும்.
இந்த உலகம் ஒரு நேரத்தில் கடவுளால் அழிக்கப்படும். மொத்த உலகத்தையும் கடவுள் ஒரே நேரத்தில் அழிப்பார். அப்படி அழித்த பிறகு திரும்பவும் இந்த மொத்த உலகத்தையும் கடவுள் உயிர் கொடுத்து எழுப்புவார். மனிதனின் செயல்கள் பற்றி விசாரணை செய்வார். நல்லவனுக்குப் பரிசு கொடுப்பார். கெட்டவனுக்குத் தண்டனை கொடுப்பார். இதை மறுமை என்று இஸ்லாம் கூறுகிறது.
கடவுள் இருக்கின்றான் என்றால் அவன் நீதி வழங்க வேண்டும்; நியாயம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களுக்கும் ஒழுங்கான தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்காத கடவுள் நமக்குத் தேவையில்லை.
கடவுள் என்று ஒருவன் இருந்தால் கடவுள் தன்னுடைய வேலையைச் செய்ய வேண்டுமா? இல்லையா? கடவுளுடைய வேலை என்ன?
எங்கெங்கே அக்கிரமம் நடக்கின்றதோ அங்கே நீதி வழங்க வேண்டும். நியாயம் வழங்க வேண்டும். ஆனால் இந்த உலகத்தில் நியாயம் கிடைப்பதை நாம் பார்க்க முடியவில்லை. ஒன்பது கொலை செய்தவன் வெளியே வந்து விடுகின்றான். இவனை யார் தண்டிப்பது?
எத்தனையோ பயங்கரவாதிகள் தங்கள் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலே இவ்வுலகில் சொகுசாக வாழ்ந்து மரணிக்கின்றனர். சட்டத்தில் மாட்டிக் கொண்டாலும் குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்கின்றனர்.
இந்தக் கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் அது முடியவில்லை. ஒன்பது கெலை செய்தவனைத் தண்டித்தால் கூட ஒரு தடவை தான் அவனைக் கொலை செய்ய முடியும். ஒன்பது பேர் துன்பப்பட்ட அளவுக்கு இவனைத் தண்டிக்க முடியாது. இந்த உலகத்தில் ஒருவனுக்குப் போதுமான தண்டனை கொடுக்க முடியாது.
நீதி செலுத்தும் கடவுள் இருந்தால் அவன் என்ன செய்ய வேண்டும்? இதற்கு எல்லாம் கணக்குத் தீர்க்க வேண்டும். நல்லவனுக்குச் சரியான பரிசு கொடுக்க வேண்டும். கெட்டவனுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.
அநீதி இழைத்து விட்டு இவ்வுலகில் சொகுசாக வாழ்பவர்கள் தாங்கள் செய்த ஒவ்வொரு அக்கிரமத்துக்கும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் குளிர வேண்டும். இதற்குத் தான் கடவுள் தேவை.
இஸ்லாம் கூறுகின்ற மறுமை நம்பிக்கை இதற்குச் சரியான தெளிவைத் தருகிறது. கடவுள் நம்பிக்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. இவ்வுலகம் மிகவும் அற்பமானது. இது ஒரு சோதனைக் களம். இங்கே தீயவர்கள் சொகுசாக வாழ்வதைக் கண்டு விரக்தியடையாதீர்கள்! நல்லவர்கள் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு உள்ளாவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள்!
நல்லவன், கெட்டவன் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவார். ஒவ்வொரு மனிதனின் தீய செயல்களுக்காகத் தண்டிப்பார். அந்தத் தண்டனை, தீயவனால் பாதிப்படைந்தவனின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு இருக்கும்.
நல்லவனுக்குப் பரிசு வழங்குவார். நாம் வாழ்நாளை வீணாக்கவில்லை; பட்ட பாட்டுக்குப் பலன் கிடைத்து விட்டது என்று பெரு மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அந்தப் பரிசு அமையும்.
இப்படி ஒரு நம்பிக்கை மனித உள்ளத்தில் ஏற்பட்டால் கடவுள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார்; பார்க்கிறார்; கேட்கிறார். அவருக்கு இயலாதது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் போது மனிதன் தவறு செய்ய மாட்டான்.
மதவாதிகள் தவறு செய்கிறார்களே? முஸ்லிம்களும் தவறு செய்கிறார்களே? என்று கேட்கக் கூடாது. அப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கடவுளை நம்பும் விதத்தில் நம்பவில்லை, அறை குறையாக நம்புகிறார்கள்.
கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஒரு விசாரணை மன்றம் இருக்கிறது. மிகப் பெரிய சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. அந்த சுப்ரீம் கோர்ட்டில் அகில உலக மக்களுக்கெல்லாம் விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வந்து விட்டால் அவன் மது அருந்த மாட்டான், விபச்சாரம் செய்ய மாட்டான். மோசடி செய்ய மாட்டான், ஏமாற்ற மாட்டான், திருட மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், கொலை செய்ய மாட்டான். வட்டி வாங்க மாட்டான். இந்த மக்களின் கண்களில் மண்ணைத் தூவி நாம் தப்பித்தால் கூட இன்னொரு வாழ்க்கையில் கடவுளிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று நம்புபவன் தவறு செய்ய மாட்டான்.
அறியாமல் அவனை மீறி ஒரு சில நேரங்களில் தவறு செய்யக் கூடுமே தவிர அதையே தொழிலாக, வாடிக்கையாகக் கொள்ள மாட்டான். இது போன்று நல்ல பண்பட்ட சமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் வல்லமை மிக்க ஒரு கடவுளை நம்ப வேண்டும். அந்தக் கடவுள் எல்லோருக்கும் நியாயம் வழங்குவார் என்று நம்ப வேண்டும்.
இப்படிப்பட்ட நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு ஊட்டிய காரணத்தினால் தான் அந்தச் சமுதாய மக்களிடம் புரையோடிக் கிடந்த எல்லாத் தீமைகளும் அகன்றன. இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிற தீமைகளை விட அந்தச் சமுதாயத்தில் தீமைகள் அதிகமாக இருந்தன.
அப்படிப்பட்ட மோசமான சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருத்தி பண்படுத்தினர். இப்படி எல்லாத் தீய செயல்களிலிருந்தும் மனிதனை விடுவித்ததற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது கடவுளை நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வைத்து சரியான முறையில் அந்த மக்களின் உள்ளத்தில் பதியச் செய்தது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக