பதவிக்காகவும், பணத்துக்காகவும், இன்னும் பல ஆதாயம் கருதியும் தலைவர்களின் கால்களில் தொண்டர்கள் விழுந்து கிடப்பதையும், பாத பூஜை செய்வதையும் நாம் காண்கிறோம்.
மத குருமார்களோ, தலைவர்களோ யாராயினும் அவர்களும் மனிதர்களே!
அவர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் தேவைப்படுகின்றன.
மற்றவர்களைப் போல், அதை விட அதிகமாகவே அவர்களுக்கும் ஆசைகள் உள்ளன.
போட்டி, பொறாமை, பழிவாங்குதல், பெருமை, ஆணவம் போன்ற எல்லா பலவீனங்களும் அவர்களிடமும் உள்ளன.
மற்றவர்களைப் போலவே மலஜலத்தைச் சுமந்தவர்களாக அவர்களும் உள்ளனர்.
இதெல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இத்தகையவர்களிடம் தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து விடுகிறான். படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் தாழ்த்த வேண்டும் என்பதை உணராததே இந்த அவலத்துக்குக் காரணம்.
அகில உலகுக்கும் ஒருவன் தான் எஜமான்; மற்ற அனைவரும் அவனுக்கு அடிமைகள் என்பதை அறிந்தால் இத்தகைய இழிவை மனிதன் தன் மேல் சுமத்திக் கொள்ள மாட்டான்.
முஸ்லிம் சமுதாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தம் உயிரினும் மேலாக மதிக்கின்றது. மற்ற எந்த மதத்தவரும் தம் தலைவர்களை மதிப்பதை விட அதிமதிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம் சமுதாயம் மதிக்கின்றது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வணங்கியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பின் வந்தவர்களும் அவர்களை வணங்குவதில்லை.
பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்றாலும் மனிதன் உழைத்துப் பெறுகின்ற கல்வி, பதவி, செல்வாக்கு, ஆற்றல் போன்ற தகுதிகளில் மனிதர்களிடையே வேறுபாடு இருப்பதை மறுக்க முடியாது. இந்த உயர்வு தாழ்வில் நியாயமும் உள்ளது.
மனிதன் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலோ, சிறந்த பதவியை அடைந்து விட்டாலோ, அதிகாரத்துக்கு வந்து விட்டாலோ, மற்றவர்களை விட ஏதாவது திறமை அதிகப்படியாக அவனிடம் இருந்து விட்டாலோ இவற்றைப் பெறாத இன்னொருவன் அவனுக்குச் சரணாகதி அடைகின்றான். அவனுடைய கால்களில் விழுகின்றான்.
அரசியல் தலைவர்களுடைய கால்களில் விழும் கட்சிகளின் தொண்டர்களையும், செல்வந்தர்களின் கால்களில் விழும் ஏழைகளையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
தன்னை விடச் சிறந்தவன் என்று ஒருவனைப் பற்றி என்னும் போது அவனுடைய கால்களில் விழ வேண்டும் என்று மனிதன் நினைக்கின்றான். இப்படி விழுவது தன்னுடைய சுயமரியாதைக்கு இழுக்கு என்பது தெரிந்தும் கூட அவன் இவ்வாறு செய்து கொண்டு தான் இருக்கின்றான்.
இப்படிச் செய்வதிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை - என்ற தத்துவம் மனிதனைத் தடுத்து நிறுத்துகின்றது.
'கடவுளுக்கு மாத்திரம் தான் மனிதன் அடிமை. கடவுளைத் தவிர அத்தனை பேரும் சமமானவர்கள் தாம் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது.
அனைவரும் நம்மைப் போலவே மல ஜலத்தைச் சுமந்து கொண்டு இருப்பவர்கள் என்பதையும். அனைவரும் தாய் வயிற்றிலிருந்து உருவானவர்கள் என்பதையும் எல்லா மனிதர்களும் நினைக்க ஆரம்பித்து விட்டால் தன்னப் போல உள்ள மனிதனின் காலில் விழ மாட்டார்கள். தன் காலில் மற்றவர்கள் விழ வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டார்கள்.
இதைத் தான் திருக்குர்ஆன் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் பின்வருமாறு கூறுகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிரிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 49:13
மனிதர்களே என்று உலக மக்கள் அனைவரையும் அல்லாஹ் அழைத்து தொடர்ந்து கூறுவதைப் பாருங்கள். உங்கள் அனைவரின் மூலப் பிதா ஒரு ஆண் தான். உங்கள் அனைவரின் மூலத் தாய் ஒரு பெண் தான்.
ஒரு தாய், ஒரு தந்தையிலிருந்து படைக்கப்பட்ட உங்களைக் குடும்பங்களாகவும், கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது நீங்கள் உங்களை ஒருவரையொருவர் அடையாளம் காண்பதற்காகத் தான். உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு அல்ல என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.
இதற்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள் என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர் என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ? எனக் கேட்டார்கள். 'மாட்டேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள் என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 624
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உற்ற தோழர் அனஸ் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.
நாங்கள் ஒரு அவையில் அமர்ந்திருப்போம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கு வருவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் யாருமே எழுந்து நிற்க மாட்டோம். இப்படி எழுந்து நிற்பதை அவர்கள் தடை செய்து இருக்கிறார்கள். மேலும் எழுந்து நிற்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதே இதன் காரணம்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: அஹ்மத்
எழுந்து நின்று கூட தமக்கு மரியாதை செய்யக் கூடாது என்ற அளவுக்கு சுயமரியாதை மிக்க ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணம் லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை - என்ற அடிப்படைக் கொள்கை தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னராகவும், மார்க்கத்தின் தலைவராகவும் இருந்தார்கள். அன்றைய நிலையில் அவர்கள் தாம் மிகப் பெரிய வல்லரசின் அதிபராக இருந்தார்கள். அவர்களுடைய சாம்ராஜ்யம் தான் அன்றைக்கு இருந்த ஆட்சிகளில் வலிமை மிக்கதாக இருந்தது.
இவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தும் கூட தம்முடைய தோழர்கள் தமது காலில் விழுவதையும், தமக்காக எழுந்து நிற்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பாததற்குக் காரணம் என்ன?
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற கொள்கைப் பிரகடனமே காரணம். அந்தக் கொள்கைக்கு மாறு செய்யக் கூடாது என்பதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்பது தான் உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக