முகவை சேக்
மனிதர்களிடம் காணப்படும் பண்புகள் பல. கோபம் தாபம் பாசம் பரிவு ஆசை பொறாமை பெருமை பொறுமை காமம் கஞ்சம் குரோதம் குறும்பு என பல பண்புகளை தன்னகத்தே கொண்ட மனிதனுக்குள் நரகத்துக்கு இழுத்துச் செல்லும் மற்றொரு பண்பும் சேர்ந்தே இருக்கிறது. உள்ளத்தில் உள்ளதை உலகுக்குத் தெரியாமல் மறைத்து, தம்மைச் சார்ந்திருப்போர் மனம் மகிழும்படி நடித்து, அவர்களை வழிகெடுத்து, தம் வழிக்கு கொண்டு வரும் இந்த நாசகார பண்புக்கு நயவஞ்சகம் என்று சொல்வார்கள்.
இந்நயவஞ்சகர்கள் அன்றிலிருந்து இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் தோற்றங்களை வைத்து இவர்களை அடையாளம் காண நம்மால் இயலாது. இருப்பினும் இந்நயவஞ்சகத்தின் அடிப்படைகளாகத் திகழும் ஒருசில நடவடிக்கைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யேபேசுவான்; வாக்களித் தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'.(அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல்:புகாரி)
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;. பேசினால் பொய் பேசுவான்;. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல்: புகாரி)
இத்தகைய நயவஞ்சகர்கள் எவ்வாறு ஈமான் கொள்கின்றார்கள் என்பதை வல்ல அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக அடையாளம் காட்டுகிறான்:-
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள்! என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் கொண்டது போல், நாங்களும் ஈமான் கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்;. (உண்மை அப்படியல்ல!) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.(அல்குர்ஆன் 2:13)
அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம்கள் இத்தகைய நயவஞ்சகத்தில் நிலைத்திருக்காமல், திருந்தி, தவ்பாச் செய்து, உண்மை மூமின்களாகத் திகழ பல அறிவுரைகளை அல்லாஹ் அருள்மறையில் வழங்குகிறான். 'தெரிந்து கொண்டே தாங்கள் செய்கிற தீமையானவற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள்.' (அல்குர்ஆன் 3:135)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக